நல்ல தமிழை கற்போம்
நல்ல தமிழ் அறிய உதவும் இந்த தொடரை ஆவலுடன் படித்து வருபவர்களுக்கு நன்றி.
இணைச்சொற்கள்.
1. “ஓங்கு தாங்கு”.
ஓங்கு = உயரத்தில் மிக்கிருத்தல்.தாங்கு= கனத்தில் மிக்கிருத்தல்.
‘ஓங்குதாங்கான மரம்’ என்றும், ‘ஓங்குதாங்கான ஆள்’ என்றும் வழங்குவதுவுண்டு. ஓங்குதல் மட்டுமானால், நெட்டைப்பனை, கோக்காலி, கொக்கு என்று பழிக்கப்படும். தாங்குதல் மட்டுமானால் செக்குரல், குந்தாணி, புளிமூட்டை, கடகப்பெட்டி – இன்னவாறு பழிக்கப்படும்.
நல்ல உயரமும், அதற்கேற்ற கட்டான உடற்கனமும் வாய்த்திருப்பின் பாராட்டப்படும். அதுவே ‘ஓங்குதாங்கு’ என்பதாம். சங்கநாள் பாரி ஓங்கு தாங்காத இருந்ததால், ‘பாரி’ என்றும் பெயர்பெற்றான். அவன் இயற்பெயர் மறைய புகழ்ப் பெயரே நின்றதாம்.
2. “ஓசை ஒலி”.
ஓசை = பொருளற்றது.ஒலி = பொருளுற்றது.
“ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்பது தேவாரம்.
நீரின் சலசலப்பு; காற்றின் உராய்வு; இடியின் வெடி; முகில் முழங்கு இவையெல்லாம் ஓசையாம். உயிரிகளல்லா இவற்றின் ஓசையில் உணர்வு சிறிதும் இன்றாம். உணர்வொடு கூடாவொன்றில் பொருளாய்வது பொருந்துமோ?
உயிரிகளின் இன்பு, துன்பு, அச்சம், வெகுளி, அரவணைப்பு, அரற்று ஆயவுணர்வு வெளிப்பாடாகவும்; மொழிவல்லார் குறிப்பு, வெளிப்படை எனக்கொண்டு உணர்த்தியும், உணர்ந்தும் வரும் பொருள் வெளிப்பாடாகவும் கிளர்வனவெல்லாம் ஒலியாம்.
3. “கத்தல் கதக்கல்”.
“கழுதை கனாக்கண்டதாம் கத்தலும் கதக்கலும்”, என்பது பழமொழி.
கத்தல் = மகிழ்வுக்குறியாக கழுதைக்கனைத்தல்.கதக்கல் = துயர்க்குறியாய் கழுதை வாடுதல்.
தாமே, ஒன்று நிகழப்போவதாக நினைத்துக்கொண்டு மகிழ்வாரையும் வருந்துவாரையும் பார்த்து இப்பழமொழியைச்சொல்வது வழக்கு.
முதுபெரும்புலவர் திரு இரா. இளங்குமரன் அவர்களது "இணைச்சொல்லகராதி" என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
முந்தையப் பதிவுகள்:
பாகம்-1, பாகம்-2, பாகம்-3, பாகம்-4, பாகம்-5, பாகம்-6,பாகம்-7, பாகம்-8,பாகம்-9, பாகம்-10,பாகம்-11,பாகம்-12,பாகம்-13,பாகம்-14













