நல்ல தமிழில் எழுதப் படிக்க பழகினால் பேசும் தமிழும் கேட்க இனியதாக அமையும். அந்த வகையில் தமிழ் நல்லோர் ஆய்ந்து கண்டறிந்தவற்றை படிப்போர் பயனுற இங்கே தொடராக பகிர்கிறோம். பயன்பெற்று இன்புற வேண்டுகிறோம்.
“ஆகியன, முதலியன.”
சொல்லவந்த பொருள்கள் அனைத்தையும் சொன்னபின், இறுதியில் ஆகியன என்னுஞ்சொல்லை எழுதவேண்டும்.
எடுத்துக்காட்டாக, இத்தோட்டத்தில் மா, பலா, வாழை ஆகியனவுள்ளன எனவெழுதினால், அந்தத்தோட்டத்தில் வேறுவகை மரங்களில்லை என்பது பொருள்.
மா, பலா, வாழை முதலியனவுள்ளன எனவெழுதினால், இம்மரங்கள் மட்டுமின்றி இன்னும் பல்வகை மரங்களிருக்கின்றன என்றுபொருள்.
‘முதலியன’ என்பது ஆங்கிலச்சொல்லான etcetera என்பதன் பொருளைக்குறிப்பதாகும்.
“ஒருசில, ஒருசிலர்.”
இச்சொற்கள் தமிழில் பரவலாக ஆளப்படுகின்றன. ‘ஒரு’ என்பது ஒருமை; ‘சில’ என்பது பன்மை. எனவே, ‘ஒருசில’ என்பது பொருந்தாது. ‘சில’ என்றாலே போதுமே. ‘மிகச்சில’, ‘சிற்சில’ என்று சொல்வதும் பொருத்தமான சொல்லாட்சிகளே.
‘ஒருசிலர்’ என்றெழுவதும் மேற்கூறிய ஒருமை பன்மை முரண்பாடுகளைக்கொண்ட சொல்லாட்சியே. ‘ஒரு’ என்பது அஃறிணைக்குரிய ஒன்றன்பால் எண்ணுருபு. இதனை ‘சிலர்’ என்ற உயர்திணை பன்மைச்சொல்லுடன் இணைக்கக்கூடாது.
சிலர் எனக்கூறினாலே போதும். ‘மிகச்சிலர்’, ‘சிற்சிலர்’ என்பனவும் சரியான சொற்களே.
இவ்வாறே, ‘சிலநண்பர்கள்’, ‘பல அறிஞர்கள்’ என்றுகூறுவதும் எழுதுவதும் பரவலாகிவிட்டன. இவ்வாறுகூறுவது மாபெரும் தவறு. ஏனென்றால், ‘சில’, ‘பல’ என்பன அஃறிணைப்பலவின்பால் அன்றோ? ‘சிலர்’, ‘பலர்’ என்பன உயர்திணைப்பலர்பால் அன்றோ? ‘நண்பர்கள் பலர்’, ‘அறிஞர்கள் சிலர்’ என்றே கூறவும் எழுதவும் வேண்டும்.
இத்தவறுகள் ஆங்கிலத்தின் மோதலால், மோகத்தால் வந்தன. ‘Some’, ‘Many’ என்னும் ஆங்கிலச்சொற்கள், ஆங்கிலமுறைப்படி அஃறிணை, உயர்திணை பன்மைகளில் வழங்கப்பெறும்.
“தக்கவைத்து – தங்கவைத்து”
“வென்ற அணியினர், சென்ற ஆண்டில் ஏற்கனவே பெற்றிருந்த சுழற்கோப்பையை (Rolling cup) ‘தக்கவைத்து’க்கொண்டனர்”. இவ்வாறு நாம் கூறுவது பிழையானது.
‘தகு’, ‘தக்க’ என்றால் ‘தகுதியான’, ‘பொருத்தமான’ என்று பொருள்படும்.
“தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்” – என்பது திருக்குறள்.
சரி! இவ்விடத்தில் என்ன சொல்லை ஆள்வது? ‘தங்கவைத்துக்கொண்டார்’ என்று சொல்லவேண்டும். இதுவே சரியானது. சுழற்கோப்பையை ‘தங்கவைத்துக்கொண்டார்’ என்று கூறினால், இவ்வாண்டு வென்றனர் என்பதையும் குறிக்கும்; கடந்த ஆண்டும் இவரே வென்றனர் என்பதையும் குறிக்கும்.
முனைவர் திரு முத்து கண்ணப்பன் அவர்களது நல்லதமிழ் அறிவோம்” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
முந்தைய பதிவுகள்:
sanjigai108.in/?p=9738
sanjigai108.in/?p=9781













