வாருங்கள் நல்ல தமிழ் கற்போம்!
இணைச்சொற்கள்:
1. “கடை கண்ணி”.
கடை = தனித்தனியாய் அமைந்த வணிகநிலையம்.கண்ணி = தொடராக அமைந்த கடைவீதியும் சந்தையும்.
கடை – இடம்; இடமென்னும் பொருள்தரும் இச்சொல் ‘வாயில்’ எனப்பொருள்பெற்றது. தலைக்கடை, புறக்கடை அல்லது புழைக்கடை என்பனவற்றைக்கருதுக. கடையிலே (வாயிலிலே) வணிகம் செய்தமையால் அதற்கு ‘கடை’ எனப்பெயர்வந்தது
கண்ணி – இணையிணையாகத் தொடுக்கப்பட்ட அல்லது வரிசையாய் அமைந்த கடைத்தெருவும் சந்தையும் கண்ணி எனப்பட்டன.
கண் இணைபோல அமைக்கப்படும் கண்ணியெனும் பாவகையையும், பூக்கண்ணியையும், வலைக்கண்ணியையும் கருதுக.
2. “கடன் உடன்”
கடன் = காலம்குறித்து, வட்டிமேனிகுறித்து, ஒப்படைத்தந்து பெறும்தொகை. எழுத்துறுதியோ, வாக்குறுதியோ, இரண்டுமோ இதற்குவுண்டு.உடன் = கைம்மாற்று. கேட்டவுடன் அல்லது வாங்கியவர்கையில் பணம்வந்தவுடன் தருவதாகியதொகை. வட்டியற்றது இது.
” கடன்உடன் வாங்கியாவது செய்ய வேண்டியதைச் செய்துதானே தீரவேண்டும்”, என்று வலியுறுத்தப் பெறுவதும், அவரவரே மேற்கொள்வதும் வழக்காறாகும்.
“கடனில்லா கஞ்சி கால்வயிற்று கஞ்சி” என்றும், “கடன்கொடுத்தான் நட்பை உடன்கெடுத்தான்” என்றும் வழங்குவனவற்றை அறியவேண்டுவதே. “கடன் கொண்ட நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கைவேந்தன்”, என்பது கம்பன்தலையில் கட்டப்பட்ட எவனோவொரு கொம்பன்பாட்டு. இராமயணத்தில் இல்லாதது.
பிற்சேர்க்கை.இந்தப்பதிவை வெளியிட்டதும் திருமதி. இராஜேஸ்வரி செல்வமுத்து குமாரசாமி – தமிழாசிரியர் அவர்கள், இந்தப்பதிவில் இடம்பெற்ற முழுபாடலையும் அனுப்பியிருந்தார்கள்.
அதன் விவரங்கள் கீழ்வருமாறு:-விநோதமஞ்சரி என்னும் நூலில் தொகுக்கப்பெற்ற இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
“விடங்கொண்ட மீனைப்போலும் வெந்தழழ் மெழுகைப்போலும்(1)படங்கொண்ட பந்தழல்வாய் பற்றிய தேரைப்போலும்(2)திடங்கொண்ட ராமன்பாணம் செருக்களத் துற்றபோது(3)கடன்கொண்ட நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கைவேந்தன் (4).
3. “ஓங்கு தாங்கு”.
ஓங்கு = உயரத்தில் மிக்கிருத்தல்.தாங்கு= கனத்தில் மிக்கிருத்தல்.
‘ஓங்குதாங்கான மரம்’ என்றும், ‘ஓங்குதாங்கான ஆள்’ என்றும் வழங்குவதுவுண்டு. ஓங்குதல் மட்டுமானால், நெட்டைப்பனை, கோக்காலி, கொக்கு என்று பழிக்கப்படும். தாங்குதல் மட்டுமானால் செக்குரல், குந்தாணி, புளிமூட்டை, கடகப்பெட்டி – இன்னவாறு பழிக்கப்படும்.
நல்ல உயரமும், அதற்கேற்ற கட்டான உடற்கனமும் வாய்த்திருப்பின் பாராட்டப்படும். அதுவே ‘ஓங்குதாங்கு’ என்பதாம். சங்கநாள் பாரி ஓங்கு தாங்காத இருந்ததால், ‘பாரி’ என்றும் பெயர்பெற்றான். அவன் இயற்பெயர் மறைய புகழ்ப் பெயரே நின்றதாம்.
செந்தமிழ் அந்தணர் திரு இரா.இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தையப் பதிவுகள்:
பாகம்-1, பாகம்-2, பாகம்-3, பாகம்-4, பாகம்-5, பாகம்-6,பாகம்-7













