நல்ல தமிழ் கற்போம்!
இணைச்சொற்கள்.
1. “கஞ்சிதண்ணீர்”.
கஞ்சி = நீராளமாக காய்ச்சப்பெற்ற பொறுக்கும் நீர்.
தண்ணீர் = சோற்றில் விட்டுவைத்து காடியானநீர்.
கஞ்சி, அன்னப்பால் எனப்படும். கஞ்சிப்பசை, கஞ்சிக்கலயம், கஞ்சித்தொட்டி என்பவை எவரும் அறிந்தவை. கஞ்சியை ‘அன்னசாரக்கஞ்சி’ என்றும் மருத்துவர் சுட்டுவர்.
தண்ணீர் என்பது சோற்றுத்தண்ணீர்; நீற்றுத்தண்ணீர் என்பதும் அது. புளிப்புமிக்கதாகலின் அது ‘காடி’ எனப்படும். “காடிக்கஞ்சியானாலும் மூடிக்குடி” என்பது பழமொழி. “கஞ்சி தண்ணிக்கு வழியில்லை” என்பது வறுமை.
2. “ஏமம் சாமம்”.
ஏமம் = போர்க்களத்தில் அல்லது பகையில் பாதுகாப்பு ஆம்துணை.
சாமம் = நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை.
ஏமம் – பாதுகாப்பு; ‘ஏமப்புணை’ என்பது பாதுகாப்பாம் மிதப்பு. கடலில்செல்வார் கலம் கவிழநேரின் ஏமப்புணை கொண்டு உய்வர். ‘ஏமஞ்சாராச்சிறியவர்’ (திருக்குறள் 815) என்றுசொல்வார் திருவள்ளுவர். ஏமம், அரண் பொருள் தருதல் உண்டு.
‘யாமம்’ என்பது ‘சாமம்’ ஆயிற்று. ‘அஞ்சாமல் தனிவழியே போகவேண்டா’ என்பது ஔவையார்மொழி. ஆனால், பாதுகாப்பில்லாத நண்பரோடு செவ்லுதலினும், தனிமையில் போதல் சீரியது என்பது வள்ளுவம் (814).
‘ஏமம் சாமம் பாராமல் உதவிக்கு நிற்பான்’ என்பதொரு பாராட்டுரை.
3. “ஒண்டுக்குடி ஒட்டுக்குடி”.
ஒட்டு(ஒன்று)க்குடி = வீட்டோடுவீடாக வைத்துக்கொண்டுள்ள குடும்பம் ஒண்டுக்குடி.
ஒட்டுக்குடி = வீட்டுக்கு அப்பால், ஆனால் வீட்டெல்லைக்குள் தனியே வைக்கப்பட்டுள்ள குடும்பம் ஒட்டுக்குடி.
ஒன்றாகிய குடும்பத்தின் சமையல் வரவுசெலவு முதலயவையெல்லாம் ஒன்றாயவை. ஒட்டுக்குடியில், அவையெல்லாம் தனித்தனியானவை. ஆனால், வீட்டெல்லைக்குள் இருத்தலென்னும் இடநெருக்கம் மட்டுமே ஒரு வீட்டுத்தன்மையைக்குறிப்பதாம்.
முதுபெரும்புலவர் திரு இரா. இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தைய பதிவுகள்:
பாகம்-1, பாகம்-2, பாகம்-3, பாகம்-4, பாகம்-5, பாகம்-6,பாகம்-7, பாகம்-8,பாகம்-9, பாகம்-10,பாகம்-11,பாகம்-12














