நல்ல தமிழில் எழுதுவோம்
இணைச்சொற்கள்.
1. “ஈடு இணை“.
ஈடு = உயர்வு.இணை = ஒப்பு.
உயர்வாகவாவது ஒப்பாகவாவது சொல்லமுடியாத ஒன்றை ‘ஈடிணை’ இல்லாதது என்பர்.
சதைப்பிடிப்பு உடையவனை ஈடு பிடித்திருக்கிறான் என்பதையும், தேடிவைத்திருக்கிறவனை ஈட்டிவைத்திருக்கிறான் என்பதையும் கருதுக. ஈட்டின்பேரில் கடன் வழங்குவதையும் கருதுக.
இணை என்பது ‘ஒப்பாதல்’ என்பதாம். இணையடி, இணைமாலை, இணைப்புறா, இணைச்செயலர் என்பனவற்றை கருதுக.
2. “உப்புச்சப்பு”.
உப்பு = உப்புச்சுவை.சப்பு = விரும்பத்தக்க மற்றைச்சுவைகள்.
உப்புச்சப்பு இல்லாமலிருக்கிறது என்று சுவையற்றவுணவை குறிப்பது வழக்கம். உப்பின் முதன்மைக்கருதி அதனை முன்னர்க்குறித்து, மற்றைச்சுவைகளை பின்னர்க்குறிப்பர்.
சப்பு (சப்பி) சாப்பிடுதலின்மூலம், சுவையானவற்றை விரும்பியுண்ணுதல் உயிரிகளின் பொதுவியல்பு.
3.”உருட்டுப்புரட்டு“.
உருட்டு = ஒன்று உருளும்போது அது போகும்போக்கிலேயே தள்ளிவிடுதல். உருளைவடிவ பொருள்களை உருளச்செய்வதும் உருட்டாம்.
புரட்டு = ஒன்றை நேர்மாறாக அல்லது தலைகீழாக மாற்றிவிடுதல். புரட்டிப்போடுதல் என்னும் சொல்லாட்சியை எண்ணுக. கற்றூணைப்புரட்டுவார், அத்தூணுக்குக்கீழே உருளைகளை வைத்து எளிதாக புரட்டிச்செல்லுதல் அறிக.
ஏமாற்றும் நோக்கத்தில் செய்யப்படும் காரியங்கள் உருட்டுப்புரட்டு எனவும் அழைக்கப்படுகின்றன. உருட்டிலும், புரட்டு சிக்கல் மிக்கதாம்.
முதுபெரும்புலவர் திரு இரா. இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தைய பதிவுகள்:
பாகம்-1, பாகம்-2, பாகம்-3, பாகம்-4, பாகம்-5, பாகம்-6,பாகம்-7, பாகம்-8,பாகம்-9, பாகம்-10














எளிய வர்கள் தாங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை நறுக்கென்று சொல்ல இம்மாதிரி சொற்களைப் ப பயன்படுத்தி தமிழுக்கு வளம் சேர்த்தார்கள்.