தமிழ் பழகுவோம்!
இணைச்சொற்கள் பெரும்பாலும் எதுகை,மோனை,தொடை முதலானவையால் இணைவுற்றவை..
இவை இலையிரட்டை, பூவிரட்டை போலவாய்; விலங்கிரட்டை, மக்களிரட்டை போல்வன. இரட்டை அல்லது இணைச்சொல்லாக நிற்பினும்நிற்கும். தனித்துநின்று தனிப்பொருள் தந்து நிற்பினும் நிற்கும். ஆதலால், இணைந்ததன்மையால் இணைச்சொற்கள் எனப்படினும் தனிச்சொல்தன்மை உடையவையே இவை.
இணைச்சொற்களிரண்டும் ஒருபொருள் தருவனபோல் தோன்றும். அகரமுதலிகளும் இணைச்சொற்களுக்கு ஒருபொருளே காட்டும். ஆனால், அவற்றை ஆராய்ந்து பார்க்கின், இரண்டுசொற்களின் பொருள்களுக்கும் நுண்ணியவேறுபாடு உள்ளதுவிளங்கும்.
எடுத்துக்காட்டாக ‘அறிகுறி’ என்னும் இணைச்சொல்லுக்கு ‘அடையாளம்’ என்னும்பொருளையே அகரமுதலியால் பெறமுடியும். ‘அறி’ என்பது ஒலி, மணம் முதலிய அருவ அடையாளம் என்றும்; ‘குறி’ என்பது தோற்றம், ஒளி, உருவம் முதலிய உருவ அடையாளம் என்றும் விளக்கம்பெற நம் அகரமுதலிகளில் இடமில்லை. இவை, முதுபெரும்புலவர் ஐயா இரா.இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும்நூலின் முகவுரையில் அமைந்த சில விளக்கங்கள்.
“செந்தமிழ் அந்தணர்” எனச்சிறப்பிக்கப்படும் திரு.இரா இளங்குமரன் ஐயாவின் நூலிலிருந்து, சிலபல இணைச்சொற்களை இந்த தொடரிலிருந்து எடுத்தெழுதவிரும்புகிறேன்.
முடிந்த அளவுக்கு ஐயாவின் மொழிநடையை மாற்றாமல் எழுதுகிறேன். இதனை சிறிது ஊன்றிப்படித்தால் குறைந்த சொற்களால் தெளிவாக சொல்லக்கூடிய நுட்பத்தை நாம் கற்கலாம்.
இணைச்சொற்கள்.
“அறிகுறி”.
அறி = ஒலி, மணம் முதலியவற்றால் அறியும் அடையாளம்.
குறி = தோற்றத்தால் அல்லது உருவத்தால் அறியும் அடையாளம்.
“வண்டிவரும் அறிகுறியே இல்லையே”, என் நெடுநேரம் வண்டிக்குக் காத்துக்கிடந்தவர் கூறுவர். வண்டிவரும் ஒலியுமில்லை; புகை முதலிய தோற்றமுமில்லை என்பதாம்.
மழை பெய்யும் அறிகுறியே இல்லையென்றால், மழைபெய்தற்கு ஏற்ற காற்றும்வெய்யிலும் இல்லை; மழைமுகிலும் மின்னலிடியும் இல்லையென்பதாம்.
‘அறி’ என்னும் பொதுப்பொருள் உருவக்காட்சியை விலக்கி ஒலி, மணம் முதலியவற்றைக்குறித்து நின்றதாம். ‘குறி’ என்பது உருவக்காட்சியை குறித்துநின்றதாம்.
இணைச்சொற்கள்.
“அக்குவேர் ஆணிவேர் “
அக்குவேர் = மெல்லியவேர்.
ஆணிவேர் = ஆழ்ந்துசெல்லும் வலியவேர்.
அக்குதல் = சுருங்குதல், மெலிதாதல். ஒருமரத்தின் வேர்களுள், பக்கத்துச்செல்லும்வேர் பலவாய், மெலியவாய் இருக்கும். ஆணிவேர், நேர்கீழ் இறங்குவதாய், ஒன்றாய், வலியதாய் இருக்கும்.
“அக்குவேராக ஆணிவேராக ஆய்தல்” என்பது வழக்கு.
வரும் தொடரில் மேலும் சில இணைச்சொற்கள் , அவைகளின் பயன்பாட்டை பற்றிக் காண்போம்.
முதுபெரும்புலவர் திரு இரா. இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தையப் பதிவுகள்:














