நல்ல தமிழில் எழுதுவோம்.
பயனுள்ள செய்திகளுடன் மேலும் தொடருகிறது….
இணைச்சொற்கள்.
1. “அழுது அரற்றுதல்”.
அழுதல் = கண்ணீர்விட்டுக்கலங்குதல்.அரற்றுதல்= வாய்விட்டுப்புலம்புதல்.
அழுது வடிதல், அழுதுவழிதல் என்பன வழக்கு. அழுகைக்கண்ணீர் என்பார் அருஞ்சொல் உரையாசிரியர் (சிலப். 5. 239-9)
“அல்லற்பட்டு ஆற்றாதழுத கண்ணீர் அன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை” என்பது திருக்குறள்.
அரற்றுதல் என்பதற்கு அலறுதல், புலம்புதல், ஒலித்தல், ஓலமிடல், பலவுஞ்சொல்லி தன்குறைகூறல் என்னும் பொருள்களுண்டு. “காதல் கைம்மிக கனவின் அரற்றலை” எனச்சுட்டுவார் தொல்காப்பியர். ‘அரற்று’ என்பதற்கு ‘வாய்சோர்வு’ என்பார் இளம்பூரணர் (பொருள் 356). ‘வாய்விடல், ‘வாய்வெருவல்’ எனவும் ‘அரற்று’ வழங்குகிறது. “அழுது வாய்குழறி” என அழுது அரற்றலை கூறுவார் கம்பர் (ஆர. 41).
2. இணக்கம் வணக்கம்.
இணக்கம் = ஒருவர்குணத்திற்குத்தக இணங்கிப்போதல்.வணக்கம் = பணிந்தமொழியும் வணங்கிய கையுமாக அமைந்துபோதல்.
இணக்கத்தால் ஒருவரை வயப்படுத்தலாம்; வணக்கத்தாலும் வயப்படுத்தலாம்; இணக்கம் வணக்கம் இரண்டுமுடைய ஒருவர், எவரையும் வயப்படுத்துதல் எளிமையாம்.
“தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுத கண்ணீரும் அனைத்து.”கூடாநட்பு _ குறள் எண் 828.ஒன்னார் = பகைவர்.தொழுதகை = கும்பிட்டகை.படை = ஆயுதம்.ஒடுங்கும் = மறைந்திருக்கும்.அனைத்து = அங்ஙனமே.
3. “இராப்பாடிபகற்பாடி”.
இராப்பாடி = இரவில் பாடிக்கொண்டுவரும் குறிகாரன் அல்லது குடுகுடுப்பைக்காரன்.
பகற்பாடி = பகலில் உழவர்களத்திற்கு பாடிக்கொண்டு வந்து தவசம் பெறும்புலவன். களம்பாடி எனவும் அழைக்கப்படுவான்.
இராப்பாடி, ‘யாமக்கோடாங்கி’ எனவும் பெறுவான். பகலில் வந்து வாங்கிக்கொண்டு போவாரும் இந்நாளில் உளர்.
வேடமென ஒன்றில்லாமல் தாமறிந்த பாடல்களை, இடத்திற்கு ஏற்பச்சொல்லி இரக்கும் எளிய பாடகர் பகல்பாடி ஆவார். பண்டை ‘ஏரோர்களவழி’, ‘தேரோர்களவழி’ என்பவற்றின் எச்சம் பகற்பாடி ஆகலாம்.
முதுபெரும்புலவர் திரு இரா. இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தையப் பதிவுகள்:
பாகம்-1, பாகம்-2, பாகம்-3, பாகம்-4, பாகம்-5, பாகம்-6,பாகம்-7, பாகம்-8,பாகம்-9














