நல்ல தமிழில் எழுதுவோம்.
இணைச்சொற்கள்(தொடர்ச்சி)
1. “அலுங்காமல் நலுங்காமல்”.
அலுங்காமல் = அசையாமல்.
நலுங்காமல் = ஆடாமல்.
‘அலுங்குதல்’ நிகழ்ந்தபின்னே, நலுங்குதல் நிகழும். தட்டான்கல் அல்லது சொட்டான்கல் ஆட்டத்தில் ஒருகல்லை எடுக்கும்போது, விரல் இன்னொரு கல்லில்பட்டு அலுங்கிவிட்டால், ஆட்டத்தை நிறுத்திவிடவேண்டும் என விதியுண்டு.
‘நலுங்குதல்’ இடம்பெயருமளவு ஆடுதலாம். இனி, ‘அலுங்காமல் குலுங்காமல் நடப்பாள்’, என்பதில் குலுங்குதல் தரும்பொருள் நலுங்குதலேயாம். குலுங்கிகுலுங்கி அழுதல் என்பதிலும், குலுக்குதல் என்பதிலும் குலுங்குதலுக்கு ‘ஆடுதல்’ பொருளிருப்பதை அறியலாம்.
2. “இடக்குமுடக்கு”.
இடக்கு = எளிமையாக இகழ்ந்து பேசுதல்.
முடக்கு = கடுமையாக எதிரிட்டுப்பேசுதல்.
நகையாண்டியாக இருப்பவனை ‘இடக்கன்’ என்பதும், வண்டியில் பூட்டப்பட்டமாடு செல்லாமல் ‘குணங்கினால்’ இடக்குச்செய்கிறது என்பதும் வழக்கு. அவையில் சொல்லக்கூடாத சொல்லை மறைத்துச்சொல்வது ‘இடக்கரடக்கு’.
முடக்கு, மடக்கு என்னும் பொருளதாம். மடக்கி எதிர்த்துப்பேசுதல் மடக்கு என்றும் முடக்கு என்றும் ஆயிற்று. எதிர்த்துத்தடுத்தல், மடக்குதல் என வழங்குவதும் அறிக.
3. “இசகுபிசகாக ஏமாறுதல்”.
இசகு (இசைவு) – ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து, அவனுக்குத்தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம், ஏமாறுதல்.
பிசகு (தவறு) – தன் அறியாத்தன்மையாகிய தவற்றால், ஏமாறுதல்.
எந்தவொரு குற்றத்திலாவது, வன்புதுன்புகளிலாவது மாட்டிக்கொண்டவர், ‘இசகுபிசகாக மாட்டிக்கொண்டேன்’ என்பது வழக்கு. இவர்கள் வழியாக வழங்கப்பெறும் இடைச்சொல் இது.
முதுபெரும்புலவர் திரு இரா. இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தையப் பதிவுகள்:
பாகம்-1, பாகம்-2, பாகம்-3, பாகம்-4, பாகம்-5, பாகம்-6,பாகம்-7, பாகம்-8













