ஸ்டாலினின் புது அவதாரம் – மக்களை முட்டாளாக்கும் முயற்சி
கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற ஒரு புதிய பிரச்சாரத்தை திருவண்ணாமலையில் துவக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகப் பெரிய விமர்சனத்தை சந்திக்கிறது. தலைவர் தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார். அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன். ஸ்டாலின் சொல்வது போல் தி.மு.க. தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சொல்வது ஒன்றும், ஆட்சிக்கு வந்த பினனர், தனது பேச்சு திறமையால் அதற்கு விளக்கம் கொடுப்பது வாடிக்கையான ஒன்று என ஸ்டாலினுக்கு தெரியாது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் சொல்வது ஒன்று , வந்த பின்னர் அதை கைவிடுவது மற்றொன்று. இவர்களின் உறுதி மொழி எவ்வாறு அமைந்தது என்பதை தி.மு.க.வை துவக்கிய அண்ணாதுரை முதல் இன்றைய ஸ்டாலின் வரை பல சம்பவங்களை சுட்டிக் காட்டலாம். 1949-ல் துவக்கிய போது திராவிட நாடு முதன்மையான கொள்கையாக பறைசாற்றப்பட்டது. இவர்களின் அடைமொழியில் கூறுவதென்றால், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என முழக்கமிட்டவர்கள். திராவிட நாடு அடைந்தார்களா என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும். 1962-ல் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ஒய்.பி.சவான், பிரிவினை தடை மசோதாவை தாக்கல் செய்தவுடன், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார். இன்று வரை திராவிட நாடு கோரிக்கை என்னவாயிற்று என்பது ஸ்டாலினுக்கே தெரியாது. இதுவே முதல் சறுக்கலாகும். முதல் சறுக்கல் முற்றிலும் சறுக்கல் என்பது போல் தொடர்ந்து பல வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.
1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்தவுடன் சென்னை மற்றும் கோவையில் மட்டும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கப்பட்டது, அதுவும் சில மாதங்களிலேயே, நிதி பற்றாக்குறையின் காரணமாக கைவிடப்பட்டது. 67-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு , தி.மு.க. தலைவர் அண்ணாதுரை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆட்டுக்கு தாடியும், ஆட்சிக்கு ஆளுநர் பதவியும் தேவையா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் பதவியை நீக்குவோம். ஆனால் இன்று வரை ஆளுநர் பதவியை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை. பாராளுமன்றத்தில் இது பற்றிய தனி நபர் தீர்மானம் கொண்டு வரவில்லை. மிகவும் முக்கியமான வாக்குறுதி, நேர்மையான தேர்தல் நடக்க, நாங்கள் ஆட்சியிலிருந்தால், தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பே மந்திரிசபையை களைத்து விட்டு, சுதந்திரமாக தேர்தலை சந்திப்போம் என சூளுரைத்த தி.மு.க. தலைவர் ஆட்சிக்கு வந்து தேர்தலை சந்திக்கும் போது, மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டால் நிறைவேற்றலாம் என பிடரியில் பின்னங்கால் படும் படி ஓடியவர்கள் தான், சொன்னதை செய்தார்கள் என்றும் சொல்வதை தான் செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.
. சென்னை நகரை, குடிசைகள் அற்ற நகரமாக ஆக்க திட்டம் தீட்டினார். அது தான் குடிசை மாற்று வாரியம். 1971ல், இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.குடிசைகளுக்கு மாற்றாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அவற்றில் குடிசை வாழ் மக்களை குடியமர்த்துவது தான் திட்டத்தின் நோக்கம். இதற்காக சுதந்திரமடைந்து, 25 ஆண்டுகள் வரை, எந்த தீ விபத்திலும் சிக்காமலிருந்த சென்னை குடிசைப் பகுதிகள், தொடர்ந்து ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன. அந்த தீ விபத்துகளுக்கு, ‘பாஸ்பரஸ்’ என்ற, தானாகவே சூரிய ஒளிபட்டு எரியும் பொருளே காரணம் என்று வதந்தி பரவியது. கூடவே, ‘ஆட்சியை இழந்த காங்கிரஸ்காரர்கள் தான், ஆங்காங்கே குடிசைகளைக் கொளுத்திக் கொண்டிருக்கின்றனர்’ என்ற குற்றச்சாட்டும் திட்டமிட்டுப் தி.மு.க.வால் பரப்பப்பட்டது. அன்றைய காலக் கட்டத்தில் , சென்னையில் அதிக பட்சமாக, 15 – 20 ஆயிரம் குடிசைகள் இருந்திருக்கலாம். அந்த, 20 ஆயிரம் குடிசைகளுக்கு மாற்றாக, 20 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அந்த குடிசை வாழ் மக்கள், அடுக்கு மாடிகளில் குடியமர்த்தப்பட்ட பிறகு, சென்னையில் ஒரு குடிசை கூட இருந்திருக்கக் கூடாதல்லவா? அப்படித் தான் இப்போது இருக்கிறதா; இல்லையே!குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களும் பெருகின. சென்னையில் புதுப்புது இடங்களில் குடிசைகளும் முளைத்துக் கொண்டே இருந்தன. 48 ஆண்டுகளாக கட்டுகின்றனர்; கட்டுகின்றனர்; கட்டிக் கொண்டே இருக்கின்றனர். சென்னையில் குடிசைகள் ஒழிந்தபாடில்லை. இதுதான் இவர்களின் சொல்வதை செய்த லட்சனமாகும்.
21 லட்சம் வீடுகள் ஏழை, எளிய மக்களுக்கு கட்டித்தரப் போவதாகவும், அதில் மூன்று லட்சம் வீடுகளை தேர்தலுக்கு முன்பு தந்து விடுவதாகவும் மீதமுள்ள 18 லட்சம் குடும்பத்தினருக்கு டோக்கனை கொடுத்து ஓட்டை வாங்கியவுடன், அந்தரங்கத்தில் தவிக்கவிட்ட அரசு தி.மு.க. அரசு அதாவது கருணாநிதியின் ஆட்சியில் என்பதை மறந்து விடக் கூடாது.
2006-ல் நிலமற்ற ஏழைகளுக்கு , தமிழ்நாட்டில் உள்ள 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை பயன்படுத்தி ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதி முழுமையாக செயல்படுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் கிடையாது. கொடுக்கப்பட்ட நிலம் கூட பயன்படுத்த கூடியது இல்லை என்பதும் வெட்க கேடாகும்.
, மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையைப் போர்த்தி, மாநில அரசு உலக வங்கியிடம் வாங்கிய கடன் தொகை தான், தற்போது, 4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.கழகத்தின் இந்த குடிசை மாற்று வாரிய வரலாறு ஒரு புறமிருக்க, சமத்துவபுரம் என்ற, கான்செப்டிலும் கழகம் தன் கை வரிசையை அமர்க்களமாக அரங்கேற்றி உள்ளது. ஜாதி ஒழிப்பு, வீட்டுவசதி என்ற இரு குறிக்கோளுடன் துவங்கப்பட்டது தான் சமத்துவபுரம்; 1996 – -2001 கால கட்டத்தில், தி.மு.க., ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சமத்துவபுரம், 1998ல், மதுரை, திருமங்கலத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகள் என்ற பெயரில், கழக உடன்பிறப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஒதுக்கீடு, இப்படித் தான். 40 சதவீத தலித்துகள்; பிற்படுத்தப்பட்டோர், 25 சதவீதம்; இதர பிற்படுத்தப்பட்டோர், 25 சதவீதம். இவ்வாறு, 90 சதவீதம் போக, மீதி, 10 சதவீத வீடுகளில் மற்ற சமூகத்தினரும் வாழ்கின்றனர். அந்த, 10 சதவீத வீடுகளில் மற்ற சமூகத்தினர் என்றால், முதலியார்கள், செட்டியார்கள், நாடார்கள், நாயுடுகள், வன்னியர்கள், ரெட்டியார்கள் என, யாருக்கு ஒதுக்கப்பட்டது என்ற விவரங்கள் கிடையாது.
மேலும், அந்த, 145 சமத்துவப்புரங்களில், எத்தனை சமத்துவபுரங்களில் பிராமணர்கள் என்ற ஜாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றால், அதுவும் இல்லை. பிராமண சமூகத்தினர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்லவே. அவர்களிலும் எத்தனையோ பொருளாதார வசதியற்ற ஏழைகள் இருக்கின்றனர் தானே; அவர்களும் இந்த நாட்டின் குடி மக்கள் தானே? அது மட்டுமா… அந்த சமத்துவபுரங்களில் பல சீரழிந்தும், புதர் மண்டியும், விரிசல்கள் கண்டும், இடிந்தும் மக்கள் வாழ தகுதியற்றவையாக உள்ளன. 100 சதவீத ஒப்பந்தத்தில், 45 சதவீத கமிஷன் போக, 55 சதவீதத் தொகையில் கட்டப்பட்டதாக கூறப்படும் அந்த கட்டடங்களின் லட்சணம் எப்படி இருக்கும்?
.கவுன்சிலர் தேர்தல் முதல், எம்.பி., எலெக்ஷன் வரை, எதற்கு தேர்தல் நடந்தாலும், தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், எந்த ஜாதி மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனரோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவரையே, ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகம், ஜாதிகளை ஒழிப்பதற்காகத் தான், சமத்துவபுரம் கட்டியது. , சமத்துவபுரங்களால் ஜாதிகள் ஒழியவில்லை. எப்படி, குடிசை மாற்று வாரியங்களால், குடிசைகள் மறையவில்லையோ அதுபோல, சமத்துவபுரங்களால், ஜாதியும் மறையவில்லை.மாறாக, ஜாதிய தலைவர்கள் தான் உருவாகி விட்டனர். இது தான், தி.மு.க., திட்டங்களின் உன்னதம்! 1968-ம் வருடம் கல்லூரிகளில் தமிழ் மீடியம் வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது அதவாது இளங்கலை வகுப்புகள் தமிழில் நடத்தப்பட்டன. ஆர்வம் குறைந்த காரணத்தால், கருணாநிதி தமிழ் மீடியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். ஆனால் ஒருவருக்கு கூட பணி வழங்கப்படவில்லை.
(முற்றும்)














