சென்ற வருடம், ட்ரூ இண்டாலஜி என்ற டிவிட்டர் கணக்கை வைத்திருந்த பரத்வாஜ் என்பவரை பற்றி எழுதியிருந்தேன். நேற்று பரத்வாஜ் மீண்டும் டிவிட்டர் பதிவுகளில் பேசப்பட்டார். பேச வைத்தவர் மிஜோரத்தின் முன்னாள் கவர்னராக இருந்து அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்தி அந்தப் பகுதிகளில் சமாதானத்திற்கு வழி வகுத்த சுவராஜ் கவுஷல். உச்ச நீதி மன்ற வக்கீலான இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கணவர் ஆவார்.
அஸாமுக்கும் மிஜோரத்திற்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை, கலவரங்களைத் தொடர்ந்து டிவிட்டரில் பரத்வாஜ், மிஜோரத்தின் சமீபத்திய வரலாற்றைப் பற்றிய பதிவுகளை இட்டிருந்தார். அப்பதிவுகள் சுவராஜ் எடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிரானதாக இருப்பதாக எண்ணிய சுவராஜ், பதில் அளித்திருந்தார்.

“நீங்கள் எழுதியதன் தாக்கம் என்னவென்று அறிந்திருக்கலாம். ஒரு எப் ஐ ஆர் போட்டால், மீதி வாழ்க்கை முழுதும் வழக்கை எதிர்கொள்வதிலேயே கழியும். யோசித்துக் கொள்ளுங்கள்.”
பரத்வாஜ் எழுதியது என்ன, சுவராஜ் அதற்கு மறுமொழி இட்டது சரியா என்ற கேள்விகளைக் கடந்து, சுவராஜின் மறுமொழி நிச்சயமாக பயமுறுத்தலே.
கவர்னர் முதல் கவுன்சிலர் வரை, ஒரு வக்கீலும் ஒத்துழைக்கும் காவல் துறையும் இருந்து விட்டால் பரத்வாஜ் என்ன, நம்மைக் கூட காவலில் வைத்து மீதி வாழ்க்கையை அர்த்தமற்றதாக்க முடியும். நாடு முழுதும் நடக்கும் இந்த சட்ட துஷ்பிரயோகத்திற்கு சில உதாரணங்கள்.
பாதுகாப்புத்துறை நிபுணரான அபிஜித் ஐயர் மித்ரா, ஒடிஷா போலீசால் கைது செய்யப்பட்டு, நாற்பத்து மூன்று நாட்கள் சிறையில் இருந்தார். அரசியல், அதிகார மேலிடங்களுக்கு இடையே நடந்த போரில், ஒருவரை சங்கடப்படுத்த அபிஜித் விளையாட்டாக பேசியது பயன்படுத்தப் பட்டது.
மும்பையில் அர்னாப் மீது தொடரப்பட்ட வழக்குகள், கொல்கொத்தாவில் ஷபிகுல் இஸ்லாம், சூரஜ் அலி கான் ஆகியோரின் கைது, தமிழ் நாட்டில், கிஷோர் கே ஸ்வாமி, கல்யாணராமன் ஆகியோர் மீதுள்ள வழக்குகள் எல்லாம் கிட்டத்தட்ட இதே வகையே. இந்த சட்ட, காவல் நடவடிக்கைகள் எல்லாம், குற்றங்கள் என்று கருதப்படுபவற்றிற்கு பொருத்தமில்லாத அதிகபட்ச எதிர்வினைகள். பண பலம், அதிகார பலம் ஆகியவற்றால் மட்டுமே இவற்றை எதிர்கொள்ள முடியும். மேலே கூறிய உதாரணங்களில் இன்னொரு அம்சம் – அவை யாவும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தவை. மாநிலங்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டு மனித உரிமை மீறலை பிரதமர் மோதி கணக்கில் எழுதி விடலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடந்தால், அதை மோதி கணக்கி எழுதுவது நியாயமாக இருக்கும்.
பரத்வாஜ் விஷயத்தில், அவர் எழுதியது எல்லோரும் அறிந்த நிகழ்ச்சிகள். அவை யாவும் பத்திரிகைகளிலும், அரசு கெஸட்டிலும் வெளி வந்த உண்மைகள். இதை கூறி விட்டு பரத்வாஜ் எப் ஐ ஆரிலிருந்தும் அது தரும் தொல்லைகளிலிருந்தும் தப்பிக்க முடியாது. அமைதியாக, இட்ட பதிவுகளை அழிக்க மட்டுமே அவரால் முடிந்தது.
உண்மையான வரலாற்றை வெளியிட விரும்புபவர்கள் முன்னே உள்ளது இந்த எப் ஐ ஆர் பூதம். அதிகாரத்திற்கு அருகில் உள்ளவர்களால் அவ்வப்போது தேவைக்கேற்ப ஏவப்படும். இந்திய சினிமாக்களில் கோர்ட் காட்சிகளில் அடிக்கடி கூறப்படும் வாக்கியம் – “நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.” உண்மையில், எப் ஐ ஆரும் அதைத் தொடரும் சட்டப் போராட்டமும் சட்டம் தரவிருக்கும் தண்டனையை விட கொடுமையானவை. நியாயம் வேண்டும் என்று ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி இறங்கலாம். ஆனால் எந்த நீதிபதி எந்த மன நிலையில் என்ன தீர்ப்பளிப்பார் என்று யாருக்கும் தெரியாது. நம் நாட்டில் நீதி சட்டத்திற்கும் அதிலிருந்து பெரும் பொருளுக்கு மட்டுமே கட்டுப்பட்டது. மகாபாரதத்தில் கூறப்படுவது போல, தர்மம் மிக சூக்ஷுமமானது; நம் நீதித்துறையில் அதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.














