சொன்னவர் ஒரு சினிமா நடிகர் இல்லை. அரசியலில் இருக்கும் அல்லது வர யோசிக்கும் அரசியல்வாதியும் இல்லை. ஆனால் அவர் Facebookஇல் சொன்னதைப் பரப்பி, அடுத்த நாள் டுவிட்டரில் அவரை ஒன்றரை லட்சம் பேர் தொடரத்தொடங்கினர்.
அவர் ட்ரூ இண்டாலஜி என்ற அடையாளத்துடன் அறியப்படும் இளைஞர். அவருடைய உண்மையான பெயர் என்ன, எப்படி இருப்பார் என்று நேற்று வரை யாரும் அறிந்ததில்லை. சமீபத்தில் அவர் டுவிட்டரில் பெற்றது அவருடைய மூன்றாவது அடையாளம். முதல் இரண்டும் அவர் மேல் உள்ள வெறுப்பால் முடக்கப்பட்டன.
அவருடைய டுவிட்டர் அடையாளங்கள் ஏன் முடக்கப்பட்டன? அவரை ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேர் தொடரத் தொடங்கியது ஏன் முக்கியமாகிறது? இவற்றைப் புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் வரலாறை அறிய வேண்டும். குறைந்த பட்சம் ஒன்றிரண்டு நூற்றாண்டு வரலாற்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
வரலாற்றைக் கட்டுப்படுத்துதல்
பிரிட்டிஷார் நம்மை ஆண்ட போது, நம் பாரம்பரிய கல்வி முறையை ஒழித்து விட்டு, குமாஸ்தாக்களை உருவாக்க ஒரு கல்வி முறையை ஆரம்பித்தனர். குமாஸ்தாக்களுக்குப் பாரம்பரியப் பெருமை வந்துவிடக்கூடாது என்பதால், உண்மையான இந்தியாவின் வரலாறு பெருமளவு கற்றுத் தரப்படாமல், இந்தியன் முகலாயர்களுக்கு அடிமையான காலத்திலிருந்தே விரிவான வரலாறு கற்றுத் தரப்பட்டது. ஆனால் உண்மையான வரலாறு, உலகெங்கும் பல புத்தகங்களில் ஒளிந்துள்ளது. அவற்றை பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். பல்கலைக்கழகங்கள் இடது சாரிகளின் கூடாரம். அவர்கள் உழைப்பாளிகளை அப்படியே தொடர வைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள். அவர்களுக்கு சுய மரியாதையோ, பாரம்பரியப் பெருமையோ வந்து விடக்கூடாது என்பதில் கருத்தாக இருப்பர். இந்தியாவைப் பொறுத்தவரை, உழைப்பாளிகள் என்றால் குமாஸ்தாக்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டில், கணினி குமாஸ்தாக்கள் – அவர்களுக்குப் பாரம்பரியப் பெருமை தேவையில்லை என்பதுதான் இந்த இடதுசாரிகளின் நோக்கம்.
“Who controls the past controls the future: who controls the present controls the past.” என்பது ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் பெரியண்ணனின் கொள்கை.
அதன்படி, மேற்கத்தியச் சூழலில் வெண்டி டொனிகர், ஷெல்டன் போலோக் போன்றவர்களும், இந்தியச் சூழலில் ரோமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் போன்றவர்களும் இந்தச் சிந்தனைக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்தினர். இந்தப் பேராசிரியர்களும் அவர்களுடைய அடிப்பொடிகளும் இண்டாலஜி என்ற பெயரில் அடிச்சுவிடுதலை எதிர் கொள்ள டேவிட் ஃப்ராலி, கோஎன்ராட் எல்ஸ்ட், ராஜீவ் மல்ஹோத்ரா, சுபாஷ் காக் போன்ற மிகச்சில ஆராய்ச்சியாளர்களே இருந்த காலம் உண்டு. இவர்களுடைய கட்டுரைகள் ஆழ்ந்த ஆராய்ச்சியின் விளைவுகள். பொது மக்கள் இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமையானவை அல்ல.
ட்ரூ இண்டாலஜியின் வருகை
சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன் டுவிட்டரில் தோன்றினார் ட்ரூ இண்டாலஜி. @TrueIndology என்ற அடையாளத்திலிருந்து வந்த டுவீட்டுகள் எல்லா வரலாற்று உளறல்களையும், உண்மையான வரலாற்று ஆவணங்களுடன் எதிர்கொண்டன. ட்ரூ இண்டாலஜியின் பதிவுகள் சுட்டும் புத்தகங்களைப் பார்க்கும் போது, இவற்றை எல்லாம் படித்துப் புரிந்து கொண்டு பேசும் இவன் தனி மனிதனா அல்லது ஒரு குழுவா என்ற சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். அந்த அளவிற்கு, அவர் மேற்கோள் காட்டும் புத்தகங்கள் பல மொழிகளிலும், பல நூற்றாண்டுகள் பழமையானதாகவும் இருக்கும். எனக்குத் தெரிந்தவரை, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டி உண்மையை உரைத்திருக்கிறார்.
இது பலரை நெளியச் செய்தது. அவற்றில் இடது சாரிகளும், அரசாங்க அதிகாரிகளும் உண்டு.
மோதல்களும் முடக்கங்களும்
ஆட்ரி ட்ரெஷ்கெ என்ற அமெரிக்க இடது சாரி வரலாற்று ஆசிரியருடன் நடந்த விவாதத்தின் முடிவில், @TrueIndology முதன்முறை முடக்கப்பட்டது.
டுவிட்டருடன் பல முறை மோதியும் பலன் இல்லாமல், @TIInExile என்ற அடையாளத்துடன் மீண்டும் டுவிட்டருக்கு வந்தார். தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பதைப் பற்றிய சர்ச்சையில் ரூபா என்ற ஐபிஎஸ் அதிகாரியுடன் மோதினார். (இந்த ரூபா தமிழ் நாட்டிற்கு அறிமுகம் ஆனவர். சிறையில் இருக்க வேண்டிய சசிகலா ஷாப்பிங் சென்றதைக் கண்டுபிடித்தவர்.) சர்ச்சை முற்றி, ரூபா, “உனக்கு முடிவு கட்டுகிறேன்” என்று டுவீட் செய்த ஐந்து நிமிடங்களில் @TIInExile முடக்கப் பட்டது. இதற்கு முன்னரும், ட்ரூ இண்டாலஜி, சஞ்சய் திக்ஷித் என்ற அரசு அதிகாரியுடன் மோதியுள்ளார். சஞ்சய் திக்ஷித் மிரட்டலோடு நிறுத்தினார். ரூபா போலீஸ் அதிகாரி; இன்னும் அதிகம் சக்தியுள்ளவர் என்பதால் அவரால் முடக்கவும் முடிந்திருக்கிறது.
இரண்டு நிகழ்வுகளிலும் டுவிட்டர் நடு நிலமையுடன் நடந்து கொள்ளவில்லை. Facebook, Instagram, Parler என்று பல சமூக ஊடகங்களிலும் ட்ரூ இண்டாலஜி இருந்தாலும், டுவிட்டரில் தொடர்பில் உள்ளவர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் என்று கொஞ்சம் பிரபலமானவர்கள். அதனால் டுவிட்டரில் இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்த ட்ரூ இண்டாலஜி நேற்று @TheTrueIndology என்ற அடையாளத்தைத் தொடங்கி அதைப்பற்றிப் பிற சமூக ஊடகங்களில் அறிவித்தார். அறிவித்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள், ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தொடரத் தொடங்கியுள்ளனர். இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் @BharadwajSpeaks என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.
விளைவுகள்
ட்ரூ இண்டாலஜி முடக்கப் பட்டதும், பின் மீண்டு வருவதும் பழகி விட்ட நிலையில், இதில் நாம் கண்டு கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் – உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஒன்றரை லட்சம் பேர் தயாராக உள்ளனர். இன்னும் சில வருடங்களிலில் இது பத்து மடங்காக, நூறு மடங்காக, ஆயிரம் மடங்காக உயரும் போது, நாம் உண்மையான வரலாற்றை அறிந்த ஒரு சமூகமாக, பாரம்பரியத்தை உள்ளபடியே அறிந்தவர்களாக இருப்போம்.
நம் வரலாற்றில் நடந்த நல்ல விஷயங்கள் நமக்குப் பெருமை அளிக்கும். மோசமான விஷயங்களும் நமக்குப் பாடமாக இருக்கும்.
உண்மையான வரலாறு, நிகழ்காலத்தில் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போதுதான், ஒளிமயமான எதிர்காலம் சாத்தியம்.















Grateful to Sridhar.