ஆண்டாள் நாச்சியார் இரண்டு பிரபந்தங்களை ஐந்து வயது சிறுமியாக இருக்கும் பொழுது பாடியுள்ளாள். ஒன்று நமக்குத் தெரிந்த பிரபலமான திருப்பாவை, முப்பது பாடல்களைக் கொண்ட பிரபந்தம். மற்றொன்று நாச்சியார் திருமொழி,143 பாடல்களைக் கொண்ட பிரபந்தம். திருப்பாவையை வேதத்தின் வித்து என்று வைணவ ஆசாரியர்கள் போற்றுகின்றனர். நாலாயிர திவ்யபிரபந்தத்தில் அதிகமான உரைகள் இருக்கக்கூடிய பிரபந்தமும் திருப்பாவை மட்டுமே, அதிலிருந்து அதன் சிறப்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
வைணவக் கொள்கையைப் பாரதம் முழுவதும் பரப்பிய, அண்ணல் ராமானுஜர் திருப்பாவையின் மேல் அதிகம் ஈர்ப்புக் கொண்டதால் “திருப்பாவை ஜீயர்” என்று அழைக்கப்பட்டார். திருப்பாவையில் ஆழமான கருத்துகள் உள்ளன என்று உரைகள் மூலமாகவும், ஸ்ரீராமனுஜரின் அதிக ஈர்ப்பு நூல் என்பதன் மூலமும் நமக்குத் தெரியவருகின்றன.
ஆண்டாளின் இரண்டு பிரபந்தங்களிலும் இயற்கை வர்ணிப்பு, நடைமுறை வாழ்க்கையைக் காட்சிப்படுத்தல், தமிழ்மொழி வளம் போன்ற அம்சங்கள் அமைந்துள்ளன. அத்துடன் நவீன நிர்வாகத் திறன் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன என்பதைப் பார்க்கும் பொழுது “நிர்வாகத் திறன்” இயற்கையாகவே சனாதன தர்மத்தில் அமைந்துள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது. இத்தகைய உயர்ந்த கருத்துகளைக் கொண்ட ஒரு நூலுக்கு, தமிழ் உலகமே போற்றப்படக்கூடிய, பெருமைவாய்ந்த நூலுக்கு, வாய் கூசும் அர்த்தங்களைக் கற்பித்து, தமிழன் தன் கண்களை தன் கைக்கொண்டு ஊசியினால் குத்திக் கொண்டிருக்கிறான். கண்கெட்ட பின் இருள் வாழ்க்கையே சூழும் இவர்களுடைய செயல்களினால் என்பது உறுதி (எதிர்மறை சிந்தனையின் ஊற்று).
ஒரு காரியம் தொடங்குவதற்கு முன், நல்ல காலநிலைகளைத் தீர்மானித்து, உற்றார் உறவினர்களுக்குத் தெரிவித்து,கடவுளை வணங்கித் தொடங்குவது என்பது எங்கும் காணப்படும் உண்மை. இந்தச் செயல் என்பது தனிமனித நிகழ்ச்சி தொடங்கி பெரும் நிறுவனங்கள் வரை பொருந்தும். இந்த நிர்வாகத்தை, ஆண்டாள் தனது இரண்டு பிரபந்தத்திலும் முதல் பாட்டில் வைத்துள்ளதைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது.
திருப்பாவை முதல் ஐந்து பாசுரங்கள் “திருப்பாவைக்கு அவதாரிகை”, அதாவது திருப்பாவையின் அறிமுகம் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஐந்து பாசுரங்களின் மூலம் அனைத்து நிர்வாகத் திறனையும் அருமையாக வெளியிட்டதன் மூலம், ஆண்டாள் என்ற திருநாமம் அரங்கனை ஆண்டாள் என்பதைக் காட்டிலும் நிர்வாகத்தையும் ஆண்டாள் என்று பொருள்படும்படி வியப்பாக உள்ளது
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கும் முன் (Before any meeting), நாள் நேரம் இடத்தையும் நிகழ்ச்சிநிரலுடன் முடிவு செய்து (Agenda of meeting, Venue, Time and Date) தயாரித்து, நிகழ்ச்சியின் நோக்கத்தைச் சுருக்கமாக அழைக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்து, அழைப்பு விடுத்து, நிகழ்ச்சி அன்று பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியின் தகவலைக் குழப்பம் இல்லாமல் சுருக்கமாகப் பரிமாற்றம் செய்யவேண்டும் (Effective Communication Skill) என்பது ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான பொது விதி.
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று ஒரு உயர்ந்த மார்கழி மாதத்தைத் திருப்பாவையில் பாவை நோன்புக்கான மாதம் என்றும், மதிநிறைந்த நன்னாள் என்று பௌர்ணமி நாளையும் குறித்துக்கொண்டு, சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள் என்று எல்லோருக்கும் தெரிவித்து, நாராயணனே நமக்கே பறைதருவான் என்று பிரார்த்தனைச் செய்து, அவள் எடுத்துக் கொண்ட காரியம் இனிதே நிறைவேற வேண்டும் என்று அறிவிக்கும் முதல் பாசுரம்.
மார்கழி மாதம் அதிகாலை நேரம் (Day and Time). இடம் என்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஆயர்பாடி(Venue). இங்கே கற்பனையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆயர்பாடியாக (Visualizing the concept) காட்சியாக்கப்படுகிறது. இதுதான் ஆண்டாளின் கற்பனை சக்தியின் திறமை. நீராட்டம் (Agenda of meeting) என்ற கிருஷ்ண அனுபவம் நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களாக “ ஆயர் சிறுமீர்காள்” என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் பெண்பிள்ளைகளை ஆயர்பாடி சிறுமிகள்(Meeting Partcipants) என்று அழைக்கிறாள். நீராட போதுவீர் என்று சுருக்கமாக நிகழ்ச்சியின் நோக்கத்தைத் தெரிவிக்கிறாள். ஆண்டாள் நீராட்டம் என்ற சப்தத்தை உபயோகித்ததைக் கண்டு மெய்சிலிர்க்கிறது.
நீராடல் என்பது தலை முதல் கால் வரை நனைந்து உடல் முழுவதும் நீராடல் அனுபவத்தைப் பெற்று உடல் சுத்தம் ஏற்படும் ஒரு சம்பவம். அதேபோல் உடல் முழுவதுமாக அதாவது ஒவ்வொரு உடல் பாகமும், நீராடல் போல் கிருஷ்ண அனுபவத்தைப் பெற்று, ஆத்மா சுத்தம் ஏற்படவேண்டும் என்பது திருப்பாவை நோன்பின் நோக்கம். சரியான வார்த்தை, சுருக்கமான வார்த்தை, தெளிவான வார்த்தை நீராட்டம் என்பது. இதன் மூலம் ஆண்டாளின் தகவல் தெரிவிக்கும் திறன் (Communication skill), மற்றும் சப்த பிரயோகத் திறன் (Selecting the opt word to communicate) எவ்வளவு சிறப்பாக உள்ளது என்று தெரியவருகிறது.
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று கண்ணனைக் குறிப்பிட்டதில், ஒரு குழப்பமும் இல்லாமல், அவளுடைய பிரார்த்தனைக் கடவுள் யார் என்றும் தகுந்த உவமைகளுடன், கவியத்துடன், சுருக்கமாகவும் முதல் பாட்டில் தெரிவித்து இருக்கிறாள். இதிலும் அவளுடைய தகவல் தெரிவிக்கும் திறன் ( Communication skill) தெளிவாக உள்ளது.
ஒருவரை அறிமுகம் செய்யும் பொழுது, சுருக்கமாகத் தெளிவாக , தனது ஆளுமை வாழ்க்கை குறிப்பை (Full bio data), தான் யார் என்று சொல்லுவதன் மூலம் அவருடைய தகவல் தெரிவிக்கும் திறன் சபையோருக்குப் புலப்படும். இங்கு ஆண்டாள் இரண்டு வரிகளில் கண்ணன் யார் என்றும், அவனே பரம்பொருள் நாராயணன் என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறாள்.
ஆயர்சிறுமீர்காள் என்று அழைப்பதன் மூலம் குழுப்பணி (Teamwork) மற்றும் கூட்டுமுடிவு (collective decision) என்ற இரண்டு பெரிய நிர்வாகச் சொல் பிரயோகத்தை உபயோகித்துள்ளாள் ஆண்டாள் நாச்சியார். முதல் பாட்டிலே பணி (Task)– நீராட்டம் மற்றும் பணிக்குழு(Task force) – ஆயர் சிறுமீர்காள் என்று முடிவு எடுத்து விட்டாள் ஆண்டாள் நாச்சியார்.
ஆண்டாள் முதல் பாசுரத்தில் நவீன நிர்வாகத்துக்குத் தேவையான முக்கிய விடயமான, கூட்டத்தை எப்படி நடத்துவது (How to conduct meeting), கூட்டம் நடத்த ஏற்புடைய இடம், நேரம்,காலம் (Venue,time,Date) போன்றவை, கூட்டத்திற்குத் தேவையான திட்ட வரைவு ( Agenda of meeting), பங்கேற்கும் சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது (Selection of Meeting participants), குழுப்பணி (Teamwork), கூட்டு முடிவு (Collective decision), பணி (Task) மற்றும் பணிக்குழு (Task force) போன்றவற்றைத் தெரிவித்து இருக்கிறாள் என்று பார்க்கும் பொழுது, ஆறு வயது சிறுமியின் நிர்வாகத் திறன் ஞானத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் உலகமே போற்றுதற்கான உத்தமி ஆண்டாள் நாச்சியார் –
(தொடரும்)
முந்தைய பதிவு: திருப்பாவையில் நிர்வாகத்திறன் சிந்தனைகள் – பாகம் 1















அருமையான ஆரம்பம், படிக்க படிக்க வியப்பு மேலிடுகிறது. ஆண்டாளின் ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ளர்த்தம் இருக்கும் என்று சொல்வதை விட ஒவ்வொரு எழுத்தும் காரண காரியத்தோடே உபயோகித்திருப்பாள் என்று தோன்றுகிறது. தாங்கள் அதை சிறிதும் குழப்பம் ஏற்படாத வகையில் விவரித்துள்ளீர். நீங்கள் திருப்பாவையை நோக்கும் கோணம் மிகவும் அருமை. தொடர்ந்து படிக்க ஆவலைத் தூண்டுகிறது.