“மாசனம் மார்க்கசீர்ஷம் என்று கண்ணன் கீதையில் “ மாதத்தில் மார்கழி “ என்று உபதேசித்துள்ளான்.
மார்கழி மாதம் பகவானைத் துதிப்பதற்கும், அதிகாலையில் நீராடி நாம கீர்த்தனைகள் மூலம் வழிபடும் மாதமாகவும் சனாதன தர்மம் உபதேசிக்கிறது. அப்படி என்ன விசேஷம் இந்த மார்கழி மாதத்திற்கு என்று பார்ப்போம்?
நமக்கெல்லாம் ஒருநாள் என்பது இருப்பத்துநாலு மணி நேரம், அதில் பிரம்ம முகூர்த்தம் என்பது சூரியன் உதயத்திற்கு முன் உள்ள காலம். அந்த நேரத்தில் செய்யும் எந்த வேலைகளும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது நமது ஆன்மீக நம்பிக்கை. ஆதலால் அந்த நேரத்தில் எழுந்திருந்து நீராடி, இறைவனை வழிபடும் மூலம் ஒரு நேர்மறை சிந்தனையை மனதில் வித்திட்டு, அந்த நாள் முழுவதும் நேர்மறை எண்ணச்சூழலில் செயல்படத் தூண்டும். நேர்மறை சிந்தனை வெற்றியை மனது அளவில் பெற்றுத்தரும் என்பது ஆன்மீக நம்பிக்கை மட்டும் அல்ல, நவீன விஞ்ஞானத்திலும் ஆழமாக நம்பப்படும் பொருளாக அமைந்துள்ளது என்பதைப் பல இடங்களில் பார்க்கிறோம்.
அதைப்போலத் தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நமது ஒரு வருட காலக்கணக்கு என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படியென்றால் நமது ஆறுமாத காலம் உத்தராயண காலம், தை முதல் ஆனி வரை அவர்களுக்குப் பகலாகவும், தட்சணாயன காலம் ஆடி முதல் மார்கழி வரை இரவாகவும் இருக்கிறது. பிரம்ம முகூர்த்தம் இரவு முடிந்து பகல் ஆரம்பிக்கும் முன் காலம். தேவர்களுக்குப் பகல் பொழுது தைமாதத்தில் சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் சமயத்தில் தொடங்குகிறது. மார்கழி மாதம் தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்தம், முப்பத்து மூவர் கோடிதேவர்களும் ஏகிறைவனை பூசிக்கும் காலத்தில், நாமும் நமது பிரம்மமுகூர்த்தத்தில் ஏகிறைவனை வழிபடும் நேரத்தில், இறைவனின் அருளோடு அனைத்துத் தேவர்களின் ஆசிகளும் ( Positive energy)நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன. ஆதலால் மார்கழி மாதம் மிகவும் உயர்ந்த சிறப்பான மாதமாக நமது பாரத கலாச்சாரத்தில் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது.
மேலும் மார்கழி மாதம் குளிர்காலம் என்பதனால், இரத்தம் உறைந்து சோம்பல் தன்மையை உருவாக்கும். அந்தக் குளிர்காலத்தில் அதிகாலை எழுந்து நீராடி, சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாகப் பகவானின் நாமங்களைச் சொல்லி நடையாக வீதியுலா செய்யும் பொழுது உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் அமைதியும், நேர்மறை எண்ணங்களும் கிடைக்கப் பெறுகின்றன. இதைத் தொடர்ந்து பிரம்ம முகூர்த்த காலத்தில் வருடம் முழுவதும் செய்வதற்கான தலையாய வழியை நமக்குப் போதிக்கும் மாதமாக மார்கழி அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகப் பாரத கலாச்சாரத்தில் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது
மார்க்க சீர்ஷம் என்ற வடமொழிச் சொல் மார்கழி என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்க என்றால் வழி,பாதை என்று பொருள், சீர்ஷம் என்றால் தலையாய என்று பொருள். மார்க்க சீர்ஷம் என்றால் தலையாய வழி என்றும், மார்கழி மாதத்தில் தலையாய வழியாக “ கிருஷ்ண அனுபவத்தில் ஈடுபடுவதை” நீராட்டம் என்று ஆண்டாள் திருப்பாவையில் உபதேசிக்கிறாள். அந்த நீராட்டமே “ தலையாய வழி “ என்று சொல்லி, மார்க்க சீர்ஷ மாதத்தில் செய்யவேண்டும் என்று திருப்பாவையின் முதல் பாசுரத்தில் தொடங்கி, திருப்பாவை முழுவதும் நேர்மறை எண்ணங்களைத் தூண்டும் விதமாக அமைத்துள்ளாள்.
சமீபத்தில் “ The 5 am club “ என்ற ராபின் சர்மாவின் புத்தகம் படித்தேன், அதன் மையக்கருத்து காலையில் எழுந்திருந்து, ஒரு மணி நேரத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு 20 நிமிடமும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லும் புத்தகம். அப்படித் தவறாமல் தொடர்ந்து காலையில் செய்து வந்தால் வெற்றி அடைவது உறுதி என்று தனிமனித நிர்வாகத்திறமையை அறிவுறுத்தும் நூல். முதல் 20 நிமிடம் உடற்பயிற்சி வியர்வை வெளிப்பட, அடுத்த 20 நிமிடம் மனப்பயிற்சி (தியானம்), அடுத்த 20 நிமிடம் தனக்கான நேரம். தனக்கான நேரம் என்பது தனக்குப் பிடித்த புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது அல்லது செய்வது, புத்தகம் அல்லது கட்டுரை எழுதுவது……… போன்றவை. காலையில் நேர்மறை எண்ணங்களுடன் தொடங்கி, மற்ற நேரங்களைக் குடும்பத்துக்கும், தான் சார்ந்து நிற்கும் வேலைகளுக்கும் அர்ப்பணிக்க வலியுறுத்தும் ஒரு நூல்.
இன்றைய நவீன நிர்வாகம் (மேலாண்மை)
“சரியாகத் தவறாமல் தொடர்ந்து காலத்தில் முழுமனதுடன் “செய்யும் பொழுது வெற்றி உறுதி என்பதைச் சொல்லுகிறது. “Correct timely Continuous action with full dedication will lead to good and positive result”
பிறகு கூட்டு வேலை(குழுப்பணி), மற்றும் நான் என்ற அகங்காரம் தவிர்த்து (Avoid egoism), பலனை அனைவருக்கும் சமமாகப் பங்கீட்டு ( Sharing of success with team) , மகிழ்ச்சி அமைதியான வாழ்க்கை முறையை(Stress free life) அதிகமாக வலியுறுத்துகிறது. Corporate world nowadays is artificially creating stress and then taking classes how to manage and control the stress.
கார்ப்பரேட் உலகம் இப்போதெல்லாம் செயற்கையாக மன அழுத்தத்தை உருவாக்கி, பின்னர் மன அழுத்தத்தை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதை வகுப்புகள் எடுக்கிறது.
உழைப்பை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்றும், இதைக் கண்டு பிடித்தது நாங்கள் என்றும் மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிசம் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளாள் ஆண்டாள் நாச்சியார்.
நவீன விஞ்ஞான சிந்தனையையும் ஆண்டாள் தனது திருப்பாவையில் பிரம்ம ஞானத்துடன் உபதேசித்துள்ளாள். ஆண்டாளின் திருப்பாவையில் உள்ள நிர்வாகத் திறன் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை அடியேனுக்குத் தெரிந்த சிற்றறிவைக் கொண்டு விளக்க முயல்கிறேன் இந்தத் தொடரில்.
கட்டுரை ஆசிரியர்: மகர சடகோபன் தென்திருப்பேரை














ஆரம்பமே அருமையாக உள்ளது, மென்மேலும் படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
Super Swami