டைரக்டர் அறையில் நடக்க இருக்கும் மீட்டிங்குக்காக ரமணன் தயாராகிக் கொண்டிருந்தான். டை கட்டும் அவசரத்தில், சட்டை பட்டன் பிய்ந்து போய்க் கையோடு வந்து விட்டது. ‘அடக் கடவுளே, இப்போது என்ன செய்வது?’ என்று கவலைப் பட்டான். டை கட்டாமல் யாரும் வந்தால் டைரக்டருக்குப் பிடிக்காது. பேன்ட் ஜிப் போடாமல் வந்தால் கூடக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார். டை கட்டாமல் வந்தால், “ஒய் ஆர் யூ நேகட்?” என்று எல்லோர் முன்னாலும் கேட்டு மானத்தை வாங்கி விடுவார்.
அப்போது உள்ளே நுழைந்த ப்ரியா, “சார், என்ன ஆயிற்று? மாப்பிள்ளை அழைப்புக்கு ஊரெல்லாம் ரெடி, மாப்பிள்ளையைத் தவிர!” என்றாள். தன் ஒரு கையிலிருந்த டையையும் இன்னொரு கையிலிருந்த பட்டனையும் பரிதாபமாகக் காண்பித்தான். கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “பட்டனைத் தைக்க வேண்டியதுதானே, பாஸ்!” என்றாள்.
ப்ரியா.”தெரியாதே?!””எ…ன்…ன…து, தெரியாதா? உங்களைச் சகலகலா வல்லவன், இந்திரன், சந்திரன், என்றெல்லாமல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன்! நீங்கள்தான் உங்கள் அம்மாவுக்குக் கடைசிப் பிள்ளையோ?” “இப்போது அதுவா முக்கியம்? டை கட்டிக் கொள்ளாமல் எப்படி….”
“டோன்ட் ஃபியர், டியர். ப்ரியா ஈஸ் ஹியர்! கவலைப் படாமல் அப்படியே இருங்கள். இதோ வருகிறன்” என்று கூறி விருட்டென்று தன் அறைக்குப் புயல் போல் சென்றவள் அரை நிமிடத்திலேயே திரும்பினாள். சடாரென்று கதவைத் திறந்து கொண்டு புல்லட் ரயில் மாதிரி உள்ளே நுழைந்த அவளுடைய கையில் ஒரு ஊசியும் நூல் கண்டும். கண்ணில் நீர் மல்க, தன்னை வாழ்விக்க வந்த அந்த மகானை நன்றியுடன் பார்த்தான் ரம்.
“சரி சரி. கட் அவுட் த மெலோட்ராமா. மசமசவென்று இப்படியே எவ்வளவு நேரம் நின்று கொண்டு இருக்கப் போறீங்க? கிவ் இட் டு மீ!”அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தவன், “நான் சட்டையைக் கழட்ட மாட்டேன்” என்றான் பிடிவாதமாக.”நீங்கள் சட்டையையும் கழற்ற வேண்டாம், சாட்டையையும் சுழற்ற வேண்டாம். பட்டனைக் கொடுங்க” என்று அதட்டினாள் ப்ரியா, எம்ஜிஆர் படத்தில் வரும் சரோஜாதேவியின் பொய்க் கோபத்துடன். பட்டனைக் கொடுத்தவன் அவளைச் சந்தேகத்தோடு பார்த்தான். தான் போட்டுக் கொண்டிருக்கும் சட்டையில், தன் கையிலிருக்கும் பட்டனை இவள் எப்படி….? வியப்பு அடங்குவதற்குள், அவனருகே வந்து, பட்டனைச் சட்டையில் அவள் வைத்ததுமே, கண்ணை மூடிக் கொண்டு விட்டான் ரம்.
“பார்த்து…பார்த்து! ஊசியால் கழுத்தில் குத்திடாதே!” “அதெல்லாம் இப்போ இல்லை” என்ற அவளின் அருகாமை அவனைக் கிறங்க அடித்தது. ஒரே கணம்தான். மளமளவென்று தைத்து முடித்தாள். “ஆபரேஷன் முடிஞ்சிடுச்சி. கண்ணைத் திறங்க, மிஸ்டர் பேஷன்ட்.” “அதுக்குள்ளேயா?!” என்று வியந்தவனிடம் இன்னும் அருகாமையில் வந்து, மீதியிருந்த நூலைத் தன் பற்களால் கடித்து அறுக்க முயன்றாள். அப்போதுதானா கதவைத் தட்டித் திறந்து எட்டிப் பார்க்க வேண்டும் பாழாய்ப் போன பாட்லிவாலா? “சார், நான் வேண்டுமானால் அப்புறம் வரட்டுமா?” என்று கேட்டானே தவிர, அந்த இடத்தை விட்டு நகருவதாக இல்லை அந்த பாட்லி.
ரமணன், ப்ரியம்வதா, பாட்லிவாலா மூவரும் தவிர, மற்ற டிபார்ட்மென்ட்களில் இருந்து அதிகாரிகளும் முக்கியமான ஸ்டாஃபும் வந்திருந்தனர். ஒன்றரை மணி நேரம் நடந்த மீட்டிங் முடிந்து, டைரக்டர் அறையிலிருந்து வெளியே வந்ததும்,”த மீட்டிங் வாஸ் எ சக்சஸ். நம் டிபார்ட்மென்ட்டுக்குத்தான் எல்லோரையும் விட நல்ல பெயர். அதற்குக் காரணமான உங்கள் இருவருக்கும் நன்றி” என்றான் ரமணன்.
“சமோசாவும் காஜு பர்ஃபியும் சூப்பர் சார்” என்றான் பாட்லிவாலா திருப்தியுடன். “மினிட்ஸ் ஆப் த மீட்டிங்கை, அட்டென்ட் செய்த எல்லோருக்கும் ஒவ்வொரு காப்பி அனுப்பி விடு. “பாட்லிவாலா சென்றதும், “ப்ரியம்வதா, யூ கம் வித் மீ” என்று கூறித் தன் அறைக்குத் திரும்பினான் ரமணன். “யூ நோ, ஐ ஹாவ் எ கம்ப்ளைன்ட் அகைன்ஸ்ட் யூ”அதிர்ச்சியுற்ற ப்ரியா, “சார்?” என்று கூறியவாறே தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றாள். “நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா? ஐ ஹாவ் ஆல்வேஸ் ட்ரைட் டு டூ மை வர்க் டு யுவர் சாடிஸ்ஃபாக்ஷன், சார்” என்றாள் பரிதாபமாக.
“தட் ஈஸ் ப்ரிசைஸ்லி த ப்ராப்ளம் வித் யூ, டியர். சிட் டௌன், சிட் டௌன்.” “உன் வேலயைச் சிறப்பாகச் செய்வதன் மூலம் என்னுடைய வேலையை மட்டுமல்ல, வாழ்க்கையையுமே மிகவும் சுலபமாக்கி விடுகிறாய் ப்ரியா. அதனால், பல நேரங்களில் எனக்கு என் வேலையில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் தெரியாமலே போய் விடுகின்றன. சுருக்கமாகச் சொல்லப் போனால், யூ ஆர் ஸ்பாய்லிங் மீ. நீ ஆபீஸில் இல்லாதபோது, என்னால் என் வேலையை ஒழுங்காகப் பண்ணுவது கஷ்டமாகி விடுகிறது. யூ ஆர் கிவிங் மீ எ காம்ப்ளெக்ஸ், யூ அன்டர்ஸ்டான்ட்?”
அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட ப்ரியம்வதா, “ஒரு நிமிஷம் என்னைப் பயமுறுத்திட்டீங்க, சார்” என்றாள். “நீயும்தான் என்னைப் பயமுறுத்துகிறாய்!” “எப்படி சார்?” “பின்னே என்ன? நாளையே நீ கல்யாணம் செய்து கொண்டு வேலையை விட்டுப் போய்விட்டால், உனக்கு அப்புறம் வருபவர்கள் உன்னைப் போல் இவ்வளவு சிறப்பாக என்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் அறிந்து தங்கள் வேலையைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நீ இல்லாத இந்த ஆஃபீசை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
“உன்னுடைய சிறப்பான சேவை, கடமைகளைச் செய்யும் நேர்த்தி, கடின உழைப்பு, எல்லோருடனும் சிரித்துக் பழகும் குணம், க்ரைசிஸ் சிச்சுவேஷனில் நீ காட்டும் ஆளுமை, எல்லாவற்றையும் பாராட்டி, உனக்கு அவுட்-ஆஃப்-டர்ன் பதவி உயர்வு கிடைக்க நான் சிபாரிசு செய்யப் போகிறேன். அதற்குப் பின் இந்த டிபார்ட்மென்ட்டுக்கே, எனக்கு அடுத்தபடி, நீதான் இன்-சார்ஜ் ஆக இருப்பாய். வாழ்த்துகள் ப்ரியா.”
பதவி உயர்வு பற்றிய செய்தியை விட ரமணன் தன்னை ப்ரியா என்று அழைத்தது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்தப் பெயரை அவன் உச்சரித்த விதத்திலிருந்த மென்மையும் அந்நியோன்யமும் அவள் மனதை மயிலிறகால் வருடிக் கொடுத்தது போலிருந்தது. நன்றி கூற வார்த்தைகள் கிடைக்காமல் மௌனமாக இருந்தாள்.
“என்ன ப்ரியா, தேங்க் யூ கூட சொல்ல மாட்டாயா? போகட்டும். ஆர்டர் கையில் கிடைக்கும் வரை இந்த விஷயத்தைப் பற்றி யாரிடமும் மூச்சுக் கூட விட வேண்டாம். சரியா?”
“என்னை நீங்கள் பாராட்டிய அத்தனை விஷயங்களும் நான் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டவைதான், சார். ஸோ, த க்ரெடிட் ரியலி கோஸ் டு யூ” என்றாள் மெல்லிய குரலில்.
“நீ சந்தோஷப்படும்போது கூட, அதில் ஏதோ ஒரு சோக ராகம் இழையோடுகிறதே. அது ஏன்? நான் தீர்த்து வைக்கக் கூடிய பிரச்சினையாக இருந்தால் என்னிடம் தாராளமாகக் கூறலாம். உதவி செய்ய முயற்சி செய்கிறேன்.”
“கொஞ்ச நாட்களாக நான் ஒரு இளைஞனைக் காதலிக்கிறேன், சார்.”
“ஸ்மார்ட் மூவ், மை டியர். ஹூ ஈஸ் த லக்கி கை? எனிபடி ஐ நோ?” தான் நேசிப்பவனை அவனுக்குத் தெரியும் என்ற பொருள்படத் தலையை மேலும் கீழும் ஆட்டியவளின் உற்சாகம் உடனேயே காணாமல் போனது.
“எனக்குத் தெரிந்தவனா? அப்படி யார் இருக்கிறார்கள்? டைரக்டர், பாட்லிபாய் இருவருக்குமே கல்யாணம் ஆகி விட்டதே. அவர்களை இளைஞர்கள் என்றும் சொல்ல முடியாதே!” “மாடசாமியை ஏன் விட்டுட்டீங்க?”
அறைக் கதவுக்கு வெளியே, திறந்த கண்களுடன் ஆழ்நிலைத் தியானம் செய்து கொண்டிருந்த மா.சா, தன் பெயரைக் கேட்டதும், கதவைத் சற்றே திறந்து, “ஐயா, ஏதும் வேணுங்களா?” என்றான். “ஐஸ் வாட்டர் கொண்டு வாப்பா.”
“நான் நேசிக்கும் மனிதர் ரொம்பவே நல்லவர்.” “வல்லவராகவும் இருப்பாரே?” “ஷ்…ஷ்…சும்மா இருங்க!” என்ற அதட்டினாள்.
இரண்டு க்ளாஸ்களில் ஐஸ் வாட்டர் வந்தது. மடக் மடக் என்று ஒரு க்ளாசைக் காலி செய்தவளிடம், “இன்னொன்றும் உனக்குத்தான். எடுத்துக்கோ!” என்றான். அந்த உபசார வார்த்தைகளுக்காகக் காத்திராமல் இன்னொரு க்ளாசையும் எடுத்துக் குடித்தாள்.
“என் மனம் கவர்ந்தவருக்கு என்னைப் புரிந்து கொள்ளத்தான் தெரியவில்லை.” “ஏன்?” “சரியான மாங்காய் மடையராக இருக்கிறார்.” “கல்யாணத்துக்கு முன்பாகவே மாங்காய் கடிக்கிறாரோ?” “இப்போ நீங்கதான் ஜோக் என்ற பெயரில் என்னைக் கடிச்சுக்கிட்டிருக்கீங்க.” “சரி, சரி. இன்றைக்கு இவ்வளவு போதும்.
ஆஃபீசில் கொடுக்கிற காசுக்குக் கொஞ்சம் வேலையும் செய்வோம். நாளைக்குச் சுட்டிதானே. என்ன செய்யப் போகிறாய்?” “ஒன்றும் ஸ்பெஷலாக இல்லை. ஏன்?” “என் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?” தெரியும் என்று தலையாட்டினாள்.
“என் வீட்டருகே இருக்கும் பஸ் ஸ்டாப்புக்குக் காலை பத்தரை மணிக்கு வந்து விடு. நான் உன்னைப் பிக் அப் செய்து கொள்கிறேன். ஆஃபீஸ் உபத்திரவங்கள் இல்லாத ஒரு இடத்துக்கு அழைத்துப் போகிறேன். அங்கே குறுக்கீடுகளின்றி நிதானமாகப் பேசுவோம். அதுவுமில்லாமல், உனக்கு என்னுடைய ஒரு இனிய நண்பரை அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.”
“சரி””சரியாகப் பத்தரை மணிக்கு நீ பஸ் ஸ்டாப்புக்கு வரவில்லையென்றால், அங்கே இருக்கும் மீன்காரி, கூடைக்காரி என்று யாராக இருந்தாலும் அழைத்துக் கொண்டு போய் விடுவேன்.” “அப்படிப் பத்தரை மணிக்கு நீங்க வரலைன்னா, வீல் சேரில் வரும் வயதானவர், நொண்டிப் பிச்சைக்காரர் என்று யார் வந்தாலும் நான் அவர்களோடு தொத்திக் கொண்டு போய் விட மாட்டேன்.”
“எனக்காகக் கத்திருப்பாயா, ப்ரியா?” “நிச்சயம் மாட்டேன். அடுத்த பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குப் போயிடுவேன், பாஸ்.””ஹா ஹா ஹா. அப்புறம், கொஞ்சம் கேஷுவலாக ட்ரஸ் செய்து கொண்டு வருகிறாயா?” “வேறு ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உண்டா, ஜெனரல்?” “நோப். யூ ஆர் டிஸ்மிஸ்ட் சோல்ஜர்! “எழுந்து ஸ்மார்ட்டாக சல்யூட் அடித்து விட்டு, ஒரு பாட்டை மெலிதாக விசிலடித்தவாறே தன் அறைக்குத் திரும்பினாள் ப்ரியா, மனம் நிறைய மகிழ்ச்சியோடு.
மறு நாள் காலை பத்தரை மணி. அன்னம் போல ஊர்ந்து வந்து பஸ் ஸ்டாப்பில் நின்ற காரிலிருந்து இறங்கிய நவநாகரீகமான இளைஞனை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் விழித்தாள் ப்ரியா.கார்க் கதவைத் திறந்து, “வுட் யூ லைக் டு கெட் இன், மை லேடி?” என்றவனிடம், காரில் ஏறி அமர்ந்து, “அதெப்படி பாஸ், அடையாளமே தெரியாதபடி படு கேஷுவலாக மாறிட்டீங்க?” என்றாள்.”நீயும்தான்” என்று ரத்தினச் சுருக்கமாகத் தன் பாராட்டுகளைத் தெரிவித்தான் ரம்.
அரை மணி நேரத்துக்குப் பின் நகரின் பிரதானமான, செல்வந்தர்கள் வாழும் ஒரு குடியிருப்புப் பகுதியில், ஒரு பங்களா முன் கார் நின்றது. காரை நிறுத்தி, இஞ்சினை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, தன் இருக்கையில் இருந்தவாறே ப்ரியாவின் பக்கமாகத் திரும்பி அமர்ந்து, நிதானமாகப் பேசத் துவங்கினான் ரம்.”ப்ரியா, இந்த நிமிடத்திலிருந்து, நான் உன்னுடைய பாஸுமல்ல. நீ என் அசிஸ்டன்ட்டும் அல்ல. அதெல்லாம் ஆஃபீசில். நாம் இப்போது நல்ல, இனிய நண்பர்கள். ஆகையால், நீ என்னை ரமணன் என்றோ அல்லது என் பெயரை உனக்குப் பிடித்தவாறு சுருக்கியோ கூப்பிடலாம். சார், பாஸ் இவையெல்லாம் வேண்டாம். கம், லெட்’ஸ் கோ!”
காரிலிருந்து இறங்கி, சுற்றிக் கொண்டு வந்து ப்ரியாவின் இருக்கைக்கு அருகே இருந்த கதவைத் திறந்தான்.காரிலிருந்து அமெரிக்கையாக இறங்கிய ப்ரியா தன் எதிரே இருந்த பங்களாவை ஏறிட்டுப் பார்த்தாள். பழங்காலக் கட்டிடமாக இருந்தாலும், அதில் வாழ்பவர்களின் செல்வச் செழிப்பைப் பிரதிபலிப்பதாக இருந்தது. கட்டிடத்தின் சுற்றுச் சுவரின் முகப்பில் பதிக்கப்பட்டிருந்த கருப்புப் பளிங்குக் கல்லில் வீட்டின் பெயரான குலாப் பவன் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப் பட்டிருந்தது.
ப்ரியாவின் வலது கை விரல்களோடு தன் இடது கை விரல்களைக் கோர்த்துக் கொண்டு, அழைத்துச் சென்றான் ரம். அந்த வீட்டுக் கதவை அடைவதற்கே இரண்டு நிமிடம் பிடித்தது. கதவிலிருந்த அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்கள். வீட்டினுள் எங்கேயோ, ‘டிங் டாங்’ என்ற மணியோசை கேட்டது. அதைத் தொடர்ந்து கதவைத் திறக்க வருபவரின் காலடி ஓசை.
கதவைத் திறந்த பணியாளர் கச்சம் வைத்த வேட்டியும், தொடை வரையிலான குர்த்தாவும் அணிந்திருந்தார். இடுப்பில் பட்டையாக ஒரு கச்சை. தலைப் பாகை. புஸ்தி மீசை. கையில் ஒரு ஈட்டி மட்டும் இருந்திருந்தால், சத்ரபதி சிவாஜி காலத்துக் கோட்டைக் காவலர் போல் இருந்திருப்பார்.
“ஜி, ஆப் கோன்?””ஈட்டி எங்கே?” என்று கேட்டவனின் விலாவில் முழங்கையால் இடித்தாள் ப்ரியா.”ஜி?” “ஓ சாரி. சாப் ஹைன்?” “சாப் தோ பாஹர் கயே ஹைன் ஔர் படி மேம் சாப் மந்திர்.” “சோட்டி மேம் சாப்?””ஹைன். ஆப்?” “டூப் மாஸ்டர் வந்திருக்கார்னு சொல்லு.” “அந்தர் ஆயியே” என்று கோட்டைக் கதவு போன்றிருந்த கதவைத் திறந்தார். விருந்தினர் உள்ளே வந்ததும், கதவை மூடி விட்டு, ஹாலின் அருகே இருந்த வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். சிம்மாசனம் போன்றிருந்த இருக்கைகளின் பக்கம் பணிவுடன் கையைக் காட்டி விட்டு, நீண்ட, நெடிய ஹாலின் முடிவிலிருந்த மாடிப் படிகளில் ஓசையில்லாமல் ஏறிச் சென்றார்.
முதல் மாடியில் இருந்த படுக்கையறையின் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றார். நீளமும் அகலமுமாக, ஹோவென்று இருந்த ஒரு பிரமாண்டமான படுக்கையில் குப்புறப் படுத்து, மியூசிக் சிஸ்டத்திலிருந்து காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்த மெல்லிசையை ரசித்தவாறு சினிமா பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் சென்று, “மேம் சாப், டூப் மாஸ்டர் வந்திருக்கார்” என்றார்.
“சரி, நீ போகலாம்” என்று கூறியவாறு, படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்தெழுந்த மஞ்சு, ட்ரெஸிங் டேபிள் மேலிருந்த ப்ரஷ்ஷால், கலையாதிருந்த தலைமுடியைக் கொஞ்சமாகக் கலைத்துக் கேஷுவலாக தோளில் விழச் செய்து, மாடிப்படியில் காலணி தடதடவென்று ஒலிக்கக் கீழே இறங்கி வந்தாள்.
(தொடரும்














