உலக அரங்கில், இந்தியாவையும் இந்தியர்களையும் ஹிந்து மதத்தையும் மட்டம் தட்ட மிஷனரிகளும் ஜிஹாதிகளும் எடுக்கும் ஆயுதம் ஜாதி. பரந்த ஹிந்து மதத்தை ஒரு ஜாதி அமைப்பாக குறுக்குவது அவர்கள் வழி. இங்கு ஜாதி என்று குறிப்பிடப்படுவது இப்போது நாம் பொதுவாகப் புரிந்து கொண்டுள்ள ஒன்றே – என்றோ எழுதி வைத்த வர்ணங்களை அல்ல. அவ்வப்போது பெரியாரிஸ்டுகளும், காந்தியவாதிகளுக் கோஷமிட எடுக்கும் பொருள் – ஜாதி ஒழிப்பு. தமிழ் நாட்டில் பல போராளிகளின் ஜீவனமே ஜாதி ஒழிப்பு உச்சாடனத்தை நம்பித்தான் உள்ளது.
சற்றே முனைந்து தேடினால், உலகில் ஒன்றிரண்டாயிர ஆண்டுகளாகத் தொடரும் சமூகங்களில் எல்லாம் ஜாதிக்கு இணையான அடுக்குமுறைப் பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை அறியலாம். அப்படிப்பட்ட பிரிவினைகள் மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கலாம், ஆனால் ஒரேடியாக அழியவில்லை. அவை எப்போது அழியும் என்ற கேள்விக்கு லிண்டி விளைவு என்ற கோட்பாட்டைக் கொண்டு பதில் அளிக்கலாம்.
லிண்டி விளைவு (Lindy’s Effect) என்றால் என்ன?
ஜீவராசிகள் அல்லாது, நீடிக்கும் அமைப்புகள், தொழில் நுட்பங்கள், சிந்தனைகள், படைப்புகள், கோட்பாடுகள் ஆகியனவற்றின் ஆயுள் காலம் எவ்வளவு இருக்கக் கூடும் என்பதைப் பற்றிய அனுமானம் அது.
ஒரு விஷயம் எத்தனை காலமாக உள்ளதோ, இன்னும் அத்தனை காலம் இருக்கக் கூடும்.
நாஸிம் நிக்கலஸ் தாலேப் கூறும் உதாரணம்:
ஒரு புத்தகம் நாற்பதாண்டுகளாகப் பதிப்பில் இருந்தால், இன்னும் நாற்பது ஆண்டுகள் அது பதிப்பில் இருக்க வாய்ப்புள்ளது. அது இன்றிலிருந்து அடுத்த பத்தாண்டுகளுக்கு பதிப்பில் இருந்தால், அதற்குப் பின் ஐம்பது ஆண்டுகள் பதிப்பில் இருக்கக்கூடும். (புத்தகக் கண்காட்சியில் இதைப் பார்க்கலாம். கல்கியும், பகவத் கீதையும் எல்லா வருடங்களும் சூப்பர் ஸ்டார்கள்.)
இதற்குப்பின் காத்திரமான நிகழ்தகவுக் கணிதம் உள்ளது.
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு அமைப்பு, வளைந்து கொடுக்கும்போது மாற்றங்களை சமாளிக்கும் நெகிழ்வுக்? குணம் அவற்றிற்கு உள்ளது என்று அறிகிறோம். ஒரு நிலையில் அந்த அமைப்பு, அது எதிர் கொள்ளும் சவால்களால் தன்னை இன்னும் வலுப்படுத்திக் கொள்கிறது.
அப்படியென்றால் ஒரு அமைப்பு ஒரு நாள் இருந்தால், அடுத்த நாள் இருக்கும் என்று இண்டக்ஷன் படி, அதற்கு அழிவே இல்லையா என்ற கேள்வி எழும். லிண்டி விளைவு, நிகழ்காலத்தில் ஒர் அமைப்பின் ஆயுளை உத்தேசமாக மதிப்பிட உதவுவது. மேலும், ஒரு அமைப்போ அல்லது கருத்தோ அதைப் பயன்படுத்தும் சமூகத்தின், ஆயுட்காலம்வரை மட்டுமே இருக்கும். அச்சமூகம் ஏதோ ஒரு விதத்தில் அழிக்கப்பட்டால், அந்த அமைப்பும் அழிவையே சந்திக்கும்.
லிண்டி விளைவின்படி, ஜாதி கட்டமைப்புகள் சில ஆயிரம் வருடங்களாக இருந்து வருகின்றன என்றால், அவை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் இருக்கக்கூடும்.
பழக்க வழக்கங்களினால் அடையாளப்படுத்துவது ஜாதி. ஒருவர் மதம் மாறி, பழக்கவழக்கங்கள் சிதைந்தாலும், ஜாதி கொடுக்கும் பாதுகாப்பை அந்தப் புதிய மதங்களோ சூழல்களோ தராததால், பழக்கவழக்கங்களில் சில சிறு மாறுதல்களுடன் அவர்கள் அந்த ஜாதியிலேயே தொடர்வதையும் காண்கிறோம்.
ஜாதிகள் காலத்தின் தேவைக்கேற்ப தம்மை பிரித்துக் கொள்வதும், பிற ஜாதிகளுடன் கலப்பதும் சகஜம். அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக கூட்டமைப்பாகவும் செயல்படுவதுண்டு.
ஜாதி அமைப்புகளில் உள்ள குறைகளை குறுகிய காலப்பிரச்சினைகளாகப் பார்க்கவேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள அமைப்பில் சில பத்தாண்டுகள் குறுகிய காலமே. எந்தவொரு சமூகத்திலும் எந்தக் காலகட்டத்திலும் உயர்வு-தாழ்வுகள் இருக்கத்தான் இருக்கும். ஆனால் எந்த ஜாதியும் எப்போதும் உயர்ந்தோ, அல்லது எப்போதுமே தாழ்ந்தோ இருந்ததில்லை. இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்படும் ஜாதிகள், நில உடமை சமூகங்களாக இருந்த காலமும் உண்டு. பல நூற்றாண்டுகளில் அவற்றுள் எழுந்த பல பிரச்சினைகளை ஜாதி அமைப்புகளே தீர்த்து வைத்ததாலேயே இன்றும் ஜாதிகள் உள்ளன.
எப்படி உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று நீடித்திருக்கிறனவோ அதேபோலஜாதி அமைப்புகளும் பரிணாம வளர்ச்சிக்குள்ளாகி இன்றைய நிலைக்கு வந்துள்ளன. உலகத்தின் பிற பகுதிகளில் இருந்த அடுக்குவரிசைகளுக்குள்ளே ஊடாடியிருந்த கொடிய வன்முறை, பாரதத்தின் ஜாதி ரீதியான ஒருங்கிணைப்புக்குள் ஏறத்தாழ அறவே இல்லை.
ஒரு கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக நிற்கிறது; ஒரு நாகரீகம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்தது போன்ற விஷயங்களுக்காக பெருமைப் படுவது நம் சமூகம். ஆகவே, பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள, பெரும்பாலும் வன்முறைகள் படி நிர்வகிக்கப்படாத ஜாதி அமைப்புக்காவும் நாம் பெருமைப் படாமல் – அதன் ஒட்டுமொத்த நிறைகுறைகளோடு பார்க்காமல், அதை வெறுமனே சமூகத்தின் ஒரு நோய் போலப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். நம் சமூக அடுக்குமுறைகளைக் குறித்த நம் சமகால பிறழ்வுப் பார்வைக்குக் காரணம், நிச்சயமாக கிறிஸ்துவ, இஸ்லாமிய மதமாற்றக் கும்பல்கள் மற்றும் மேற்கத்திய பார்வைகளின் தாக்கமே. நாம் நம்முடைய பெருமை, சிறுமைகளை பிறர் தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது.
ஜாதிகளால் அடையாளப்படுத்தப் படுவதை அவமானமாக நினைக்க வைத்து, முழு மாயையான ‘திராவிடத்தை’ அடையாளத்திற்குப் பயன்படுத்துவது ஒரு பெரும் வீழ்ச்சி. அதனால் ஜாதிகள் அழியவில்லை. திராவிடம் என்ற முகப்பிற்குப்பின், மறைவாக ஆனால் நிச்சயமாக அதிக உறுதியுடன் இருக்கின்றன.
அரசாங்கங்களோ, பெரியாரிஸ்டுகளோ, ஹிந்துத்துவர்களோ, நீங்களோ நானோ – யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஜாதிகள் இங்கு தொடரத்தான் போகின்றன. ஏனென்றால், இவை எல்லாவற்றையும் விட நீண்ட காலமாக ஜாதிகள் இங்கு உள்ளன.













