
“வெள்ளிக் கிழமை… விடியும் வேளை…”
கைபேசியின் அழைப்பு கேட்டு, லஞ்ச் தயாரிப்பில் மும்முரமாக இருந்த கல்பனா கிச்சனிலிருந்து வெளியே வந்தாள். இன்று நிறைய வேலை இருக்கிறது என்று கிருஷ்ணன் வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே கிளம்பி ஆபீஸ் சென்று விட்டான். சித்ராவும் பள்ளிக் கூடம் சென்றாகி விட்டது. இருவருமே வீடு திரும்ப நிறை…ய… நேரம் இருந்தது. இந்த நேரத்தில் யாருடைய ஃபோனாக இருக்கும்? அடுத்த அறையிலிருந்த கைபேசியை எடுத்து, அடுப்பிலிருந்த கத்தரிக்காய்க் கறி அடிபிடித்து விடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையுடனும் எரிச்சலுடனும் “ஹலோ” என்றாள் .
“மம்மி, போனை எடுக்க இவ்வளவு நேரமா?” என்று அலுத்துக் கொண்டாள் பெண்ணரசி.
“சரி, சரி… அதுதான் லைனில் வந்துட்டேனே. என்ன விஷயம்?”
“மம்மி, டிசாஸ்டர்!”
“நோ டிரமாடிக்ஸ்! விஷயத்தைச் சொல். பி ஷார்ட் அன் ஸ்வீட். எனக்குக் கிச்சனில் நிறைய வேலை கிடக்கிறது.”
“மம்மி, இன்னிக்கு இன்டர்நேஷனல் புட்பால் டூர்னமென்டில் எங்கள் டீமுக்கு முக்கியமான மாட்ச் இருக்கிறது”
“தெரியும். அதுதான் கார்த்தாலயே சொன்னியே?”
“சொல்லி என்ன புண்ணியம்? ஃபுட்பால் ஷூவை மறந்து போய் வீட்டிலேயே வைத்து விட்டு வந்துட்டேன்”
“அடக் கடவுளே. இப்ப என்ன செய்யப் போறே?”
சித்ராதான் கீவ் இன்டர்நேஷனல் ஸ்கூல் டீமின் ஸ்டார் ப்ளேயர். டீமின் வாழ்வும் தாழ்வும் அவள் கையில், இல்லையில்லை, காலில். இன்றைய மாட்சில் அவள் விளையாடவில்லை என்றால் வாக் ஓவர்தான். கப் வார்ஸா ஸ்கூலுக்கு விளையாடாமலேயே லட்டு மாதிரி கிடைத்து விடும்.
அழாத குறையாகக் கெஞ்சினாள் சித்ரா.
“மம்மி, என் ஷுவைக் கொஞ்சம் எடுத்துண்டு வாங்களேன், ப்ளீஸ்”
“என்னம்மா விளையாடறயா? வீட்டிலேயே தலைக்கு மேல் வேலை கிடக்கு. போதாத குறைக்கு, சாயந்தரம் இந்தியன் விமன்ஸ் அசோசியேஷன் மீட்டிங் வேற இருக்கு. அசோசியேஷன் செக்ரடரியா இருந்துண்டு நான் போகாம இருந்தா, வேற வினையே வேண்டாம். இட் வுட் பி எ ஸ்கான்டல். உங்க அப்பா வேற ருத்ர தாண்டவம் ஆடித் தீர்த்துடுவார். அடுத்த ஃப்ளைட்லயே என்னை இந்தியாவுக்கு அனுப்பியும் வைச்சுடுவார்.”
“மம்மி, ப்ளீஸ்! யூ கான்ட் லெட் மீ டௌன். மாட்ச் ஆரம்பிக்க இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு. எதுத்த டீம் ரொம்ப ஜோஷ்ல இருக்கு. எங்க டீம்லயோ, கோச்ல இருந்து சகலமான பேரும் நெர்வஸ் ரெக் ஆயிட்டாங்க”
எந்த நிமிடமும் ஹிஸ்டீரிகலாகி விடுவாள் போலிருந்தது. அப்புறம் அவளைச் சமாதானப் படுத்த ப்ரம்ம ப்ரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.
“ஓகே. கூல் டௌன். ஐ’ல் டூ சம் திங்”
ஸ்கூலுக்குக் கணவனுடன் காரில் போய்த்தான் பழக்கம். அவனை ஆபீஸுக்கு ஃபோன் பண்ணிக் கூப்பிடலாமா என்ற எண்ணம் தோன்றி அந்தக் கணமே மறைந்தும் விட்டது. சாதாரணமாகவே காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போலப் பறப்பான். இன்று ஏதோ அர்ஜன்ட் டிஸ்பாட்ச் தயாரித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டுமென்று வேறு சொல்லிக் கொண்டிருந்தான். ராத்திரிக்கே வீட்டுக்கு வருகிறானோ என்னவோ? சரி. வேறு வழியில்லை மெட்ரோவில் போக வேண்டியதுதான்.
சிநேகிதி மம்தாவுக்கு போன் செய்தாள்.”என்னடி, என்ன செஞ்சிண்டு இருக்கே?”
“அதை ஏன் கேட்கிறே, போ…” என்று ஆரம்பித்தவளை இடை மறித்து, “உன் கதையை நான் அப்புறம் கேட்கிறேன். இப்போது நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்றாள்.
“இட்லிக்கு மாவரைச்சுத் தரணுமா?”
“மாவரைச்சும் தர வேண்டாம், மாக்கோலம் போட்டும் தர வேண்டாம். உடனே கிளம்பி அடுத்த பத்தாவது நிமிடம் எங்க வீட்டுக்கு வரே. ஓகே?”
“என்னடி இது காலங்கார்த்தாலே?”
பத்து மணிக்குத் காலங்கார்த்தாலையாம், ஹூம்… என்று போனை வைத்து விட்டு, ஸ்கூலுக்குச் செல்லக் கிளம்பினாள். சித்ராவின் ஷூவை ஞாபகமாக எடுத்து வைத்துக் கொண்டாள்.
மம்தா அடுத்த அபார்ட்மென்ட் ப்ளாக்கில் தான் இருந்தாள். அவள் வந்ததும் இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.
முதல் நாள் இரவு பனி மழை சக்கைப் போடு போட்டிருந்தது ஆகாயத்தில் இனி ஸ்நோவே இல்லையோ என்று எண்ணும் அளவுக்கு. தெருவில் இறங்கி நடந்தார்கள். கணுக்கால் வரை பனியில் புதைந்தது. சில்லிப்பு பாதத்திலிருந்து மூளை வரை சென்று அம்மாடி என்று கூற வைத்தது. சூரிய பகவான் மட்டம் போட்டு விட்டு மாயமாகி விட்டிருந்தார். ஐந்தே நிமிடத்தில் கை கால்களெல்லாம் குளிரில் விறைத்துப் போய் விட்டன.
“அம்மாடி, என்ன ஒரு குளிர்! எலும்புக்குள்ளேயே போய் ஆளை உலுக்கி விடும் போலிருக்கிறதே. அது சரி, இப்போது நாம் எங்கே போயிண்டிருக்கோம்?” கோட் காலரை நிமிர்த்தி விட்டுக் கொண்டே கேட்டாள் மம்தா.அவளுக்கு உக்ரைன் குளிர் இன்னும் பழகவில்லை.
“ஸ்கூலுக்கு. சித்ரா ஃபுட்பால் ஷூவை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டுப் போயிருக்கா. ஃபோன் பண்ணி உடனே கொண்டு வான்னு ஒரே அடம். அதை கொடுக்கத்தான் போயிண்டு இருக்கோம்.”
“இந்தப் பனியிலும் குளிரிலும் எப்படிடி ஃபுட்பால் விளையாடுவா?
“அதெல்லாம் இன்டோர் ஸ்டேடியத்தில் விளையாடிப்பா. நமக்கு அதைப் பத்தி என்ன கவலை இப்போ? முக்கியமான மாட்ச் இருக்காம் இன்னிக்கு.”
பேசிக் கொண்டே மெட்ரோ ஸ்டேஷனைச் சென்றடைந்தார்கள். மெட்ரோவைப் பிடித்து ஸ்கூலுக்கு அருகில் இருக்கும் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து பார்த்தால், வெள்ளையாகப் பெய்திருந்த பனியெல்லாம் ரயில் பயணிகளும் மற்றவர்களும் நடந்து நடந்து கன்னங்கரேலென்று ஆகி விட்டிருந்தது. தெருவில் எங்கு பார்த்தாலும் வெள்ளையும் கருப்புமாக, சேறும் சகதியுமாகக் கண்றாவியாக இருந்தது. நின்று போயிருந்த பனிப் பொழிவு மீண்டும் ஆரம்பித்திருந்தது. காலைப் பார்த்துப் பார்த்து வைக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் அசந்தாலும் சறுக்கி விட்டது. எப்போது சறுக்கி விட்டு விழப் போகிறோமோ என்ற பயத்துடனேயே அடிமேல் அடி வைத்து நடந்தார்கள். “ஆஹா மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னாகும்?” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்காத குறை.
ஸ்டேஷனிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான். நல்ல நாளாக இருந்தால் பத்து நிமிடம் ஆகும். இன்று குறைந்தது அரை மணி ஆகி விடும் போலிருந்தது. வாட்சைப் பார்த்தாள் கல்பனா. திக்கென்றிருந்தது. சித்ரா சொன்ன டயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே இருந்தது. கைபேசியோ விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. சித்ராவாகத்தான் இருக்கும். எடுத்துப் பேசலாமென்றால், ஃபோன் எங்கிருக்கிறதென்றே தெரியவில்லை. தெர்மல்வேர் மீது அணிந்திருந்த பேன்ட், ஷர்ட்டுக்கு மேல் ஸ்வெட்டர், ஜாக்கெட், ஸ்கார்ப், ஓவர் கோட் என்று ஏகப் பட்ட சமாசாரங்கள். போன் எந்த பாக்கெட்டில் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. போதாத குறைக்குக் கையில் க்ளவ்ஸ், சித்ராவின் ஷூ வைத்திருந்த பை வேறு. போனை எடுத்துப் பேச பயமாகவும் இருந்தது. “எங்கே இருக்கே? ஏன் இன்னும் வரலை?”ன்னு கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தெடுத்து விடுவாள். அவர்களுடைய இரு புறமும் ரயில் பயணிகள் வேக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தெருவிலோ எக்கச்சக்கமான கூட்டம். சில இளைஞர்கள் பஸ்ஸைப் பிடிக்க ஓடிச் சென்றவாறிருந்தார்கள்.
“நம்மால் மெதுவாக நடக்கவே முடியவில்லை. இவர்கள் எப்படி வேக வேகமாக நடக்கிறார்கள்? ஓடுகிறார்கள்?” என்று வியந்தாள் மம்தா. கல்பனாவுக்கும் அந்த வியப்பு எப்போதுமே உண்டென்றாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “எல்லாம் பழக்கம்தான் காரணம்” என்றாள் எல்லாம் தெரிந்த மாதிரி. உக்ரைனில் மம்தாவுக்கு சீனியர் ஆயிற்றே.
சில உக்ரேனியப் பெண்மணிகள் இவர்கள் மெதுவாக நடப்பதைப் பார்த்துக் கரிசனத்துடன் அருகில் வந்து அறிவுரை வழங்கினார்கள்: “த்வேயூஷ்கி, இவ்வளவு மெதுவாக நடக்கக் கூடாது. இப்படி நடந்தால் நிச்சயம் விழுந்துடுவீங்க. ஒரு காலைக் கீழே வைத்து பூமியிலிருந்து எடுத்த உடனேயே அடுத்த காலைக் கீழே வெச்சுடணும். போயிட்டே இருக்கணும். அப்பதான் விழாம இருக்க முடியும். பயப்படாதீங்க. கராஷோ?”
இன்னொரு வயதான பெண்மணி அருகில் வந்து “இந்தீ?” என்று கேட்க, “தா” என்று ஆமோதித்தாள் கல்பனா. “ராஜ் கபூர் சௌக்யமாக இருக்கிறாரா?”என்று குசலம் விசாரித்தாள் அந்தப் பெண்மணி.
“ரொம்ப முக்கியம்” என்பதை ரஷ்ய மொழியில் எப்படிக் கூறுவது? பேசிக் கொண்டே கொஞ்ச தூரம் நடந்து சென்ற பிறகு சட்டென்று நின்றாள் கல்பனா.
“என்னடி ஆச்சு? ஸ்கூல் வந்துடுத்தா?”
“கிழிச்சது! வழி மறந்து போயிடுத்து”
“யாரையாவது வழி கேட்போமா?”
“ஜனங்களெல்லாம் நல்லவங்க தான். ஆனா நம்ம பாஷை அவங்களுக்குத் தெரியாது. அவங்க பேசறது நமக்குப் புரியாதே”
ஒரு இளைஞன் அக்கறையுடன் அருகில் வந்து, “ப்ராப்ள்யேம்?” என்று விசாரித்தான். இன்டர்நேஷனல் ஸ்கூல் எங்கே இருக்கிறது என்று கல்பனா ஆங்கிலத்தில் கேட்க, சாரி என்று தனக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தையை உதிர்த்து விட்டுத் தன் வழியே சென்று விட்டான்.
“பையன் பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கான். பாவம் இங்லீஷ் பேசத் தெரியலை. ஸ்கூலுக்கே போனதில்லை போலிருக்கு” என்று அங்கலாய்த்தாள் மம்தா.
“நீயும் உன் ஜோக்கும்” என்று அவளைப் பார்த்து முறைத்தாள் கல்பனா.
“இப்போது என்னதான் செய்யறதுன்னு தெரியலையே. டைம் வேற ரெக்கய கட்டிண்டு பறக்கிறது. குழந்தை இந்நேரம் நொந்து நூடுல்ஸாகி யிருப்பாள். நல்லா விளையாடற குழந்தை. விளையாடாமலேயே ட்ராஃபியைப் பறி கொடுக்கிறதா? கடவுளே, என்ன இது சோதனை?”
பகவானிடம் வேண்டிக் கொள்ளலாமென்றால், இருக்கற டென்ஷனில் ஒரு ஸ்லோகமும் ஞாபகம் வந்து தொலைய மாட்டேனென்கிறது. கடைசியில், திரௌபதி மாதிரி “கிருஷ்ணா” என்றாள்.
“என்னடி, உங்க ஆத்துக்காரரைக் கூப்பிடறயா?”
அவ்வளவு டென்ஷனிலும் கல்பனாவுக்குச் சிரிப்புதான் வந்தது.
“போதுமே, அப்படியே அவர் வந்துட்டாலும்…” என்று நினைத்துக் கொண்டாள்.
தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எதிரே ஒரு நாய் அவளையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தது. இருக்கிற கஷ்டம் போதாதென்று இப்ப இது வேறயா? பகவானே, மேலே விழுந்து பிடுங்காமலிருக்க வேண்டுமே. அதன் கழுத்தில் காலரோ, மனிதர்கள் பிடித்து அழைத்துச் செல்லும் லீஷோ எதுவுமில்லை.
“பார்த்துடி, தெரு நாய் மாதிரி இருக்கிறது. கடிச்சு கிடிச்சு வைக்கப் போறது”
அந்த நாய் குரைக்கவுமில்லை, கடிக்கிற மாதிரியும் தெரியவில்லை. கல்பனாவையே பார்த்துக் கொண்டிருந்தது.
“ஏதோ சொல்ல விரும்பற மாதிரி இருக்கு” என்று கூறி, நாயைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
நாய் அவர்கள் இருவரும் தன்னைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்று அவர்களைத் திரும்பிப் பார்த்தது.
“நம்மைக் கூப்பிடறது போல் இருக்கு” என்று கூறி, அதன் பின் செல்ல ஆரம்பித்தார்கள். சற்று தூரம் சென்றதும் மீண்டும் திரும்பிப் பார்த்தது. இரண்டு பெண்களும் தன்னைத் தொடருகிறார்கள் என்று உறுதிப் படுத்திக் கொண்டு, ஓட்டமும் நடையும் கலந்த வேகத்தில் விரைவாகச் சென்றது.
“சரி, வா. கண் போன போக்கிலேதான் கால் போகக் கூடாது. நாய் போன வழியிலே போகலாம். வேற என்னதான் செய்யறது?”
இருவரும் நடையை எட்டிப் போட்டார்கள். நல்ல வேளை, ஆங்காங்கே சறுக்கி விட்டாலும், கீழே விழவில்லை. நாயோ, இரண்டு மூன்று இடங்களில் இடது புறமும் வலது புறமுமாகத் திரும்பி, நிற்காமல் சென்றது.
சுமார் பத்து நிமிடம் கழித்து ஓரிடத்தில் நின்றது. நிமிர்ந்து பார்த்தால், கீவ் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயர்ப் பலகையுடன் கம்பீரமாக, அவர்கள் சென்றடைய வேண்டிய இடம் வந்து சேர்ந்திருந்தது. நாய் விருவிரென்று ஸ்கூல் காம்பௌன்டுக்குள் நுழைந்து ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்தடியில் சமர்த்தாகப் படுத்துக் கொண்டது.
“நல்ல வேளை. சரியான சமயத்துக்கு வந்து சேர்ந்துட்டோம்”
குழந்தைகள் மாட்சுக்காக மும்முரமாகத் தயாராகிக் கொண்டிருந்தனர். கல்பனா சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்ததைப் பார்த்ததுமே, சித்ரா ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.
“ரொம்ப தேங்ஸ்மா. இன்னும் கொஞ்ச நாழில மாட்ச் ஆரம்பிச்சிடும்” என்று கூறி, ஷூ இருந்த பையைக் கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு தன் டீமுடன் சேர்ந்து கொள்ள ஓடினாள். “பெஸ்ட் ஆஃப் லக்” என்று கல்பனாவும் மம்தாவும் கூறியதைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளப் பொறுமையில்லை அவளுக்கு.
“சலோ, ஒரு பெரிய வேலை முடிந்தது. இப்போ டயத்தை வேஸ்ட் பண்ணாமல் வீட்டுக்குச் சீக்கிரமாகப் போகணும். சாயந்திரம் அசோசியேஷன் மீட்டிங் வேறே இருக்கே” என்றாள் கல்பனா.
“ஆமாம், ஆமாம். கல்யாண மும்முரத்தில் தாலி கட்ட மறந்தானாம்கிற கதை மாதிரி ஆகி விடக் கூடாது. மீட்டிங்குக்குக் கொண்டு போவதற்காக காஜர் கா ஹல்வா செய்வதாக இருந்தேன். இப்போ அதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ, தெரியலை.”
“ஒய் ஃபியர்? மம்தா ஈஸ் ஹியர். ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணுவோம். சீக்கிரம் ஆயிடும்”
பேசிக் கொண்டே ஸ்கூலுக்கு வெளியே வந்தார்கள்.
“இப்போ, இடது கைப் பக்கம் திரும்பணுமா, இல்லை வலது பக்கமா?”
“நேரா போகணும்னு நினைக்கிறேன்”
மெட்ரோவுக்குத் திரும்பிப் போகும் வழி மறந்து விட்டது.
மரத்தடியில் படுத்திருந்த நாய் எழுந்து வந்து, இவர்களுடன் சேர்ந்து கொண்டது. அது முன்னால் போக, இவர்கள் அதன் பின்னாலேயே சென்றார்கள்.
அடுத்த பத்தாவது நிமிடம் மெட்ரோ ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள்.
“அப்பாடா, ஸ்டேஷன் வந்துடுத்து. இனி கவலையில்லை” என்று கூறிய கல்பனா, நாய்க்கு நன்றி கூறுவதற்காக அதைத் தேடினாள். நாய் காணாமல் போய் விட்டிருந்தது. எதிரே இருந்த நேரான பாதையைத் தவிர வேறு திருப்பங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நாயைக் காணோம்.
“என்னடி இது ஆச்சர்யம்? நம் கூட வந்த நாய் எங்கே போச்சு?”
“அது எங்கேயிருந்து வந்ததோ, அங்கேயே போயிடுத்து போல இருக்கு. சரி வா. தேர் ஈஸ் நோ டைம் டு வேஸ்ட்”
மெட்ரோவைப் பிடித்துச் சரியான நேரத்தில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
அன்று அசோசியேஷன் மீட்டிங்கில் கல்பனாவும் மம்தாவும் தயாரித்த கேரட் ஹல்வாவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள்.
“மிஸஸ் கிருஷ்ணன். காஜர் கா ஹல்வா சூப்பர்! அடுத்த மாதம் இன்டர்நேஷனல் விமன்ஸ் அசோசியேஷன் ஆர்கனைஸ் செய்யவிருக்கும் ஆன்யுவல் சாரிட்டி பஸாரின்போது, இதே ஹல்வாவைச் செய்து கொண்டு வாருங்கள். சிறந்த ஸ்நாக்குக்கான பரிசு நிச்சயம் இந்தியன் விமன்ஸ் அசோசியேஷன் பெவிலியனுக்கே கிடைக்கும்” என்று பாராட்டினாள் மிஸஸ் ஷர்மா பலத்த கரகோஷத்துக்கு இடையே.
“எதற்கு இன்னொரு முறை மெனக்கெட வேண்டும்? இன்றைக்குச் செய்த ஹல்வாவே நிறைய மீதி இருக்கிறது. அதையே சாரிடி பஸாருக்குக் கொண்டு வந்தால் போச்சு!” என்று தன் பங்குக்கு ஜோக்கடித்தாள் மம்தா.
“ஓ நோ!” என்ற எல்லா உறுப்பினர்களுடையவுமான ஒருமித்த குரல் பலத்த சிரிப்புக்கிடையே மீட்டிங் நடந்த அறையையே அதிர வைத்தது.
கல்பனாவின் கைபேசி ஒலித்தது. சித்ராவின் கால். “மம்மி, குட் நியூஸ். நாங்க ஜெயிச்சுட்டோம். ட்ராஃபி இந்த வருஷமும் எங்க ஸ்கூலுக்குத்தான்” என்று குதூகலித்தாள்.
உணர்ச்சிகளின் கலவையாகத் தெரிந்த கல்பனாவின் முகத்தைப் பார்த்து “என்னடி விஷயம்? எவ்ரிதிங் ஓ கே?” என்று கேட்டாள் மம்தா.
“எல்லாப் புகழும் பைரவருக்கே”
“என்னது?”
“எல்லாப் புகழும் பகவானுக்கேன்னு சொன்னேன்”
அன்றைய தினம் எல்லா நிகழ்வுகளும் நல்லபடியாக நடந்து முடிந்தன என்றாலும், கல்பனா நாள் முழுவதும் ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தாள். உதவிக்கு வந்தது உண்மையிலேயே நாய்தானா? எங்களுக்கு உதவி வேண்டும் என்று அதற்கு எப்படித் தெரியும்? கிருஷ்ணா என்றுதானே கூப்பிட்டேன்? அது வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. அது என்னுடைய கற்பனையில் தோன்றிய நிஜமில்லாத ஒரு உருவமென்றே வைத்துக் கொண்டாலும், அதை மம்தாவும் பார்த்தாளே. ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ஒரே மாதிரியான கற்பனை எப்படி வந்தது?
அப்படியானால், செய்வதறியாது, இறைவனைக் கூப்பிட்டபோது உதவிக்கு வந்த நாய் உண்மைதான். என் அபயக் குரல் கேட்டு, அதை அனுப்பிய இறைவனும் உண்மைதான். இலக்கில் தைத்த அம்பு எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அதை எய்தியவனும்தானே. இந்த அமானுஷ்ய அனுபவத்தை எனக்களித்த பெருமை யாரைச் சேரும்? இறைவனையா, இறைவன் அளித்த குழந்தையையா? இருவருக்கும் இடையே என்ன வேறுபாடு? குழந்தை, தெய்வம் இருவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள்தாம். நம் வாழ்க்கையைச் சிறப்பிக்கும் இருவருமே நன்றிக்கு உரியவர்கள்தாம். இவ்வாறாக இருந்தது கல்பனாவின் எண்ண ஓட்டம்.
என்னைய்யா இது? தற்செயலாக ஒரு நாய் வந்து போனதை அந்தப் பெண்தான் உணர்ச்சி வசப்பட்டுப் பெரிது படுத்துகிறாள் என்றால், அதற்கு ஒரு கதையா என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
கல்பனாவின் கணவனோ, மகளோ, அவர்கள் உக்ரைனில் வாழ்ந்த நான்கு வருடங்களில் ஒரே ஒரு நாயைக் கூடப் பார்த்ததில்லை. கல்பனாவும் மம்தாவும் கூட இந்த நிகழ்ச்சி நடந்ததற்கு முன்னோ, பின்னோ பார்த்ததில்லை. இவ்வளவு ஏன், அவர்களுடைய நண்பர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எவருமே பார்த்ததில்லை. அப்படியானால், அந்த நாட்டில் நாயே கிடையாதா? நிச்சயம் இருக்கின்றன. அவை அனைத்துமே வளர்ப்பு நாய்கள். வீடுகளில் மட்டுமே வசிக்கும் ராஜா வீட்டுக் கன்றுக் குட்டிகள். இந்தியாவில் போலத் தெரு நாய்கள் கிடையாது. அங்கு தெரு நாய்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அப்படியானால் கல்பனாவுக்கு உதவிய நாய்?
ஒன்று மட்டும் நிச்சயம். கல்பனா எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவள் பார்த்த நாயும். சரியான நேரத்துக்கு அது எங்திருந்து வந்தது? கல்பனாவின் தேவை முடிந்ததும் எங்கு சென்றது?
பைரவருக்கே வெளிச்சம்.
(இந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் உண்மை. கதா பாத்திரங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப் பட்டிருக்கின்றன) ——















Truth is str anger than fiction