
கதவைத் தட்டி விட்டு அறையினுள் நுழைந்த ரமணனை ஏறிட்டுப் பார்த்த மஞ்சு ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள். ஆனால் அவளுடைய மனதின் வாட்டத்தை முகம் காட்டிக் கொடுத்தது. அருகிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பது போல் பாவனை செய்தாள்.
“என்ன மஞ்சு, இவ்வளவு அமைதியாக இருக்கிறாய்? என் மீது கோபமா?”
“அதெல்லாம் ஒன்றுமில்லை ரம்ஸ். ஒரு சின்னத் தலைவலி. அவ்வளவுதான்.”
“உன் தலைவலிக்குக் காரணம் நான்தானே?”
“இல்லை, இல்லை. நான் எப்போதுமே யாரைப் பற்றிய எண்ணமும் தலைக்குச் சென்று வலியாக மாற அனுமதித்ததில்லை. என் தலைவலிக்கு அலைச்சல்தான் காரணமே தவிர, நீயோ வேறு எந்த ஒரு நபருமோ அல்ல. சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். ஆனால், வாழ்க்கையில் ஏதேதோ எதிர்பார்த்து ஏமாந்து போய்விட்டேன். அதன் காரணமாக உள்ளத்தில் ஏற்பட்ட வலிதான் எப்போது தீரும் என்று தெரியவில்லை.”
“மனதைப் போட்டு உழப்பிக் கொள்ளாதே, மஞ்சு. உள்ளத்தில் வலியுடன் நடமாடுவது நீ மட்டுமல்ல. நானும்தான்.”
வியப்புடனும் குழப்பத்துடனும் தன்னை ஏறிட்டுப் பார்த்த மஞ்சுவிடம் ரமணன் கூறினான்:
“மஞ்சு, யூ ஆர் எ டார்லிங் ஃப்ரண்ட். யுவர் ஃப்ரன்ஷிப் மீன்ஸ் ஸோ மச் டு மி. நீ வருத்தப் பட்டால், அது என்னை எந்த அளவு பாதிக்குமென்று உனக்குக் தெரிந்திருக்க நியாயமில்லை. இதைப் பற்றி விவரமாகப் பிறகு பேசலாம். இப்போதைக்கு, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற உறுதியை மட்டும் நான் உனக்கு அளிக்கிறேன். உன் மலர்ந்த முகம்தான் எனக்கு வாழ்வின் இருண்ட சந்தர்ப்பங்களில் ஒளி தரும் நம்பிக்கை நட்சத்திரம். காரணம் எதுவாக இருந்தாலும், கவலையின் கீற்றுகள் உன் முகத்தில் தோன்றுவதில் எனக்குச் சம்மதம் இல்லை.
ஆகையினால், என்னுடைய சுயநலத்துக்காகவாவது உனக்கு வருத்தமோ, ஏமாற்றமோ அளிக்கும் எந்த ஒரு காரியத்தையும் நான் எப்போதுமே செய்ய மாட்டேன். ஐ வான்ட் டு ஸீ யூ ஆல்வேஸ் ஹாப்பி மஞ்சு. ஒரு ராஜகுமாரி தன்னுடைய குடிமக்களின் உற்சாகத்துக்காகவாவது மகிழ்ச்சியான வெளித் தோற்றத்துடனேயே இருக்க வேண்டியது அவசியம். யூ ஆர் நோ லெஸ் தேன் எ ப்ரின்செஸ் டு மீ. டூ ஸ்மைல் யுவர் ஹைனஸ்.”
ரமணின் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளின் தாக்கத்தினால், பனித் திரை அகன்று கதிரவன் தோன்றுவது போல் மஞ்சுவின் முகம் மலர்ந்தது.
“தேங்க் யூ, ரம்ஸ். யூ ஆர் இம்பாஸிபிள். இருந்தாலும், நான் உன்னை முழுமையாக நம்புகிறேன். இவ்வளவு இனிய வார்த்தைகளை யாருமே எப்போதுமே என்னிடம் சொன்னதில்லை. ஐ ரியலைஸ் ஐ ஹாவ் பீன் வெரி சைல்டிஷ் அன்ட் செல்ஃபிஷ். ஐயாம் ஸாரி அபௌட் இட். நான் உன்னிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. யூ ஆர் ஸச் எ டியர். ஜஸ்ட் கிவ் மீ எ மினிட்” என்று கூறிக் குளியலறைக்குள் நுழைந்தாள். வெளியே வந்த அவளுடைய முகம் பளீரென்று ஒளிர்ந்தது.
“சரி, வாடா போகலாம். எனக்கு ரொம்பவே பசிக்கிறது” என்று கூறி அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
ரமணனும் மஞ்சுவும் மாடிப் படிகளில் வந்து நின்றதும், நண்பர்கள் அனைவரும் எழுந்து நின்று, கை தட்டி வரவேற்றார்கள். எல்லோருக்கும் முன்னதாக ப்ரியம்வதா எழுந்திருந்து மாடிப் படிகளுக்கே சென்று அவர்களை வரவேற்றாள். மஞ்சுவின் ஒரு கரத்தை ரம்ஸ் பற்றிக் கொள்ள, இன்னொரு புறம் ப்ரியா அவளை அணைத்துக் கொளள, மூவருமாகப் படிகளில் மெள்ள இறங்கி வந்தனர்.
எல்லா நண்பர்களும் சிரித்த முகத்துடன் மேஜையைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க, கௌரி மட்டும் கண்ணீரோடு காணப் பட்டாள். “ஏய், என்ன ஆச்சு, ஏன் அழுகிறாய்?” என்று ரஜினி அவளிடம் பரிவோடு விசாரித்தாள்.
“தீதி, இந்த மூன்று பேரையும் பாருங்களேன். பார்க்கவே எவ்வளவு அழகாக இருக்கிறது?”
“அவ்வளவுதானே. என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன்.”
“தீதி, ரம்ஸ் அண்ணாவை மஞ்சு, ப்ரியா இருவருமே காதலிக்கிறார்கள் போலிருக்கிறதே. அப்படியானால் அவர் யாரை ஷாதி செய்து கொள்வார்?” என்று தாழ்ந்த குரலில் விசாரித்தாள்.
“ஷ்…ஷ்…ஷ்… இப்போதுதான் மஞ்சு அமைதியாகி இருக்கிறாள். நீ வேறு இப்படி எதையாவது கேட்டு, புதிதாக ஒரு பூதத்தைக் கிளப்பி விட்டு விடாதே. அவர்கள் திருமணத்தைப் பற்றி அவர்களே முடிவு செய்து கொள்வார்கள். கண்ணைத் துடைத்துக் கொள்.”
இரவு உணவு முடிந்ததும், களைப்புடன் காணப்பட்ட நண்பர்கள் அவரவர் அறைக்குத் திரும்பினர். ஜானியும், வசுவும் மொட்டை மாடிக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமென்று ரமணனை அழைத்தார்கள். தாங்களும் வருவதாகக் கூறி, மஞ்சுவும், ப்ரியம்வதாவும் அவர்களுடன் சென்றனர். மொட்டை மாடியில் இது போன்ற சந்தர்ப்பங்களுக்காக, வட்ட மேஜைகளும், நாற்காலிகளும் வண்ண வண்ண குடைகளுக்குக் கீழே போடப் பட்டிருந்தன. நாற்காலிகளை அருகருகே போட்டுக் கொண்டு நண்பர்கள் அமர்ந்தனர். மஞ்சுவும் ப்ரியாவும் ஒருவர் கை விரல்களூடே இன்னொருவர் விரல்கள் பின்னிப் பிணைந்திருக்க, நெருக்கமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவருக்கும் எதிரே ரமணன் உட்கார்ந்திருந்தான். வசுவும் ஜானியும் எதிரெதிரே அமர்ந்தனர்.
சிறிது நேரம் அன்றைய பிக்னிக் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஜானி முதல் நாள் தோட்டத்தில் பேசிய விஷயத்தைக் குறிப்பிட்டான். அந்தச் சந்திப்பில் ப்ரியா கலந்து கொண்டிருக்கவில்லை என்பதால், அதைப் பற்றிச் சுருக்கமாக அவளுக்குத் தெரிவித்தான். பிறகு மேற்கொண்டு தன் பேச்சைத் தொடர்ந்தான்.
“வசுவும், நானும் சில நாட்களாகத்தான் மஞ்சுவையும், ப்ரியாவையும் அறிந்திருக்கிறோம் என்றாலும் கூட நாம் அனைவருமே இப்போது நல்ல நண்பர்கள் என்றுதான் நாங்கள் உணருகிறோம். நீங்கள் இருவரும் கூட எங்களைப் பற்றி இவ்வாறுதான் நினைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
“ரம்ஸ்-ப்ராண்டி திருமணத்துக்கு ரம்ஸின் அம்மா பச்சைக் கொடி காட்டி விட்டாலும் கூட, எதிர்பாராத ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. ப்ராண்டி மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுச் சுயமாகச் சிந்திக்கும் பெண் என்று நான் முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். அது சரியான கணிப்புதான் என்று உறுதி செய்வது போல, யாரும் எதிர்பார்த்திருக்காத ஒரு முடிவை அவள் எடுத்திருக்கிறாள். அது என்ன முடிவு என்று சொல்லும் முன், ஒரு விஷயத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
“ப்ராண்டியின் உள்ளத்தில் ரம்ஸைத் தவிர வேறு எந்த ஆடவனுக்கும் இடமில்லை. அவனுடனான தன் திருமணம் மறுக்கப்பட்ட நிலையிலும், தன் உள்ளத்தில் ரம்ஸைக் கணவனாகவே வரித்து, தன்னை வேறு யாரும் நெருங்க முடியாதபடி, ஒரு பவித்திரமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள். கதைகளிலும் காவியங்களிலும் மட்டுமே காணக் கூடிய இப்படிப்பட்ட பெண் இன்றைய உலகத்தில் இருக்கக் கூடுமா என்ற ஐயம் உங்கள் உள்ளத்தில் எழலாம். அந்தச் சந்தேகத்தைப்
போக்கும் விதமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ப்ருந்தாவும் இயற்றப் படாத ஒரு காவியத்தின் தலைவியே.”
“வாவ்! ப்ருந்தாவைப் பற்றி நீ சொல்லச் சொல்ல, அவளைக் காண வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. உண்மையிலேயே இன்றைய உலகில் இப்படி ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நம்புவது கடினம்தான். அன்றாட வாழ்வில் நாம் காணும் பெண்களிலிருந்து எவ்வளவு மாறுபட்டவளாக அவள் இருக்க வேண்டும்! ஷி மஸ்ட் பி ஒன் ஆஃப் எ கைன்ட்” என்று வியந்து பாராட்டினாள் மஞ்சு.
“உண்மைதான் மஞ்சு. ப்ருந்தாவைப் போன்ற பெண்களைக் காண்பது அரிதுதான். ஆனால், நீயோ ப்ரியம்வதாவோ, ப்ருந்தாவை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. ப்ருந்தா எந்த அளவு ரமணனைக் காதலிக்கிறாள் என்பதை அறிந்தும் நீங்கள் அவளிடம் பொறாமை கொள்ளவில்லை. அதே போல் உங்கள் இருவரிடையேயும் கூட எந்த விதமான போட்டியோ பொறாமையோ காணப்படவில்லை. மாறாக, நீங்கள் இருவரும் மிகச் சிறந்த தோழிகளாக இருக்கிறீர்கள். உங்கள் மூவரையும் தன் உற்ற நண்பர்களாக அடைந்த ரமணன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்.
“நான் கூற வந்த முக்கியமான விஷயத்தையும் கூறி விடுகிறேன். ரமணனின் அம்மா ப்ருந்தாவை நேரில் சந்தித்து, தன்னை மன்னிக்குமாறும், தன் மருமகளாக அவள் வரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள். ரமணனின் அம்மாவினால் தனக்குத் தீங்கு எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும், அதனால் அவரைத் தான் மன்னிப்பதற்கு அவசியமே இல்லை என்றும் பெருந்தன்மையுடன் கூறிய ப்ருந்தா, கூடவே ஒரு அதிர்ச்சித் தகவலையும் அளித்தாள்.
“ஆரம்பத்திலிருந்தே ரமணன் தன் உயிரைப் போலவே அவளை நேசிக்கிறான் என்று உறுதியாக நம்பிய அவள் தன்னை அவனுடைய குடும்பமும் தயக்கம் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ளும் என்று நம்பியிருந்தாள். ஆனால், ரமணனின் தாயார், வெளிப்படையாகப் பேசிப் பழகும் தன்னுடைய இயல்பு காரணமாக யாரோ கிளப்பிய அவதூறைக் காரணம் காட்டித் தன்னை நிராகரித்தபோது, அந்தக் குடும்பத்தைப் பற்றி அவள் கொண்டிருந்த உயர்வான அபிப்பிராயத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
உண்மையான காதலின் வெற்றி, காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் எந்த விதமான தயக்கமோ, ஆட்சேபமோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது. ப்ருந்தா வான்டட் டு பி அக்சப்டட் ஆஸ் ஷீ வாஸ். ஈஃப் இட் வாஸ் நாட் டு பி, தென் ஃபர்கெட் ஆல் அபௌட் இட். இதுதான் அவளுடைய நிலைப்பாடு.
“ரமணனின் தாயார் மனதில் தன்னைப் பற்றி எழுந்த சந்தேகம் சிறிதளவு கூட உண்மையற்ற அப்பட்டமான அவதூறு என்று பின்னாளில் உறுதியாகி விட்டது. ஆனாலும் கூட, முகம் தெரியாத நபர்களால் பரப்பப் படும் இது போன்ற பொய்கள் எதிர் காலத்திலும் கூட இப்படிப் பட்ட சூழ்நிலைகளை உருவாக்கலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு முறையும் தன் நேர்மையை நிரூபித்துக் கொண்டிருக்கத் தான் தயாராக இல்லை என்று ஆணித்தரமாக அவள் கூறிவிட்டாள். தன் மீது கொண்ட கழிவிரக்கம் காரணமாகவோ, பச்சாத்தாபம் காரணமாகவோ தான் ஏற்றுக் கொள்ளப்படுவதையும் அவள் விரும்பவில்லை. தன் குணநலன்களைப் பற்றியோ, நடத்தையைப் பற்றியோ ஊர் உலகமளிக்கும் எந்த ஒரு நற்சான்றிதழும் அவளுக்குத் தேவையில்லை. தன் வாழ்வில் தலையிட்டுப் புறம் பேசும் ஊர் உலகத்தை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
“அவள் ரமணனின் காதலையும், அவன் தாயாரின் அங்கீகாரத்தையும் மட்டுமே எதிர்பார்த்து ரமணனை மணக்கத் தயாராக இல்லை. தான் ஒரு நேர்மையான, சிறப்பான குணநலன்கள் கொண்ட பெண்ணாக மதிக்கப்பட வேண்டுமென்று அவள் விரும்பினாள். விரும்பியபோது ஏற்றுக் கொள்ளப்பட்டு, வேண்டாமென்றபோது நிராகரிக்கப்படும் ஒரு வணிகப் பொருளைப் போல நடத்தப்படுவதில் அவளுக்கு உடன்பாடில்லை. ரமணனை இன்னமும் விரும்பும் அவள் அவனுடனான திருமண சம்பந்தம் காரணமாகக் கசந்து போன அனுபவத்தை மறக்கவே விரும்புகிறாள்.
“தீர்க்கமான தன் தெளிந்த முடிவை ரமணனின் அம்மாவிடம், அவரிடம் தனக்கிருந்த மரியாதைக்குச் சிறிதும் குறைவேற்படாமல், பட்டுக் கத்தரித்தது போல் தெரிவித்த பிராண்டி, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறாள். மேற்படிப்புக்குப் பிறகான தன்னுடைய அடுத்த முடிவு அதற்கான சந்தர்ப்பம் வரும்போது எடுக்கப்படும் என்றும் அவள் உறுதியாகக் கூறிவிட்டாள். ரமணனின் தாயார் எவ்வளவோ கேட்டும், ப்ராண்டி தன் முடிவை மாற்றிக் கொள்ளவேயில்லை. ஷீ ஈஸ் கான் நாட் ஜஸ்ட் ஃபார் நௌ பட் ஃபார் ப்ராக்டிகலி ஆல் த டைம் டு கம்.
“நான் இந்த நிகழ்வைப் பற்றி, ரமணனின் அப்பாவுடன் தொலைபேசியில் பேசும்போது அறிந்தேன். மனமொடிந்து போயிருக்கும் ரமணனின் அம்மா தாளாத வருத்தத்தில் இருக்கிறார். ப்ருந்தா-ரமணன் திருமணம் நடக்காமல் போய், அவர்கள் வாழ்க்கையின் போக்கு முற்றிலுமாக மாறியதற்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவரை வருத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், ரமணன் யாரை மணக்க விரும்பினாலும் அது அவருக்குச் சம்மதமே. ரமணன் திருமணத்தையும் வசுமதியின் திருமணத்தையும் விரைவில் நடத்த அவர் விரும்புகிறார். இரண்டு திருமணங்களும் விரைவில் நடந்தேறினாலேயன்றி, குற்ற உணர்ச்சியினால் ஏற்கனவே குறுகிப் போயிருக்கும் அவருடைய உடல்நலம் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும்.
“நௌ த பால் ஈஸ் இன் ரமணன்’ஸ் கோர்ட். அவன் தன் திருமணத்தைப் பற்றி எடுக்கப் போகும் முடிவின் தாக்கம் அவனுடைய தாயின் உடல் நிலை, மற்றும் மன நிலையைப் பெரிய அளவில் பாதிக்கக் கூடும் என்பதை மட்டும் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.”
ஜானியின் நீண்ட பேச்சை அனைவரும் எந்தக் குறுக்கிடலுமின்றிக் கேட்டனர். ரமணனின் இறுகிய முகத்திலிருந்து அவன் என்ன நினைக்கிறான் என்பது யூகிக்க முடியாததாக இருந்தது.
“ரமணன், முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நீ இருக்கிறாய். உனக்காகவும், குடும்பத்துக்காகவும் ஒரு நல்ல முடிவை எடுப்பாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. பெஸ்ட் ஆஃப் லக்” என்று கூறித் தன் அறைக்குப் போவதற்காக எழுந்தாள் வசுமதி.
ரமணனின் தோளில் மெல்லத் தட்டி, “டேக் கேர் டூட்” என்று கூறி எழுந்து சென்றான் ஜானி.
மீதமிருந்த மூவரும் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தனர். மெல்லப் புன்னகைத்தவாறே, “இன்று காட்டில் எனக்கு ஒரு விநோதமான அனுபவம் ஏற்பட்டது” என்றான் ரமணன்.
“நானே கேட்கணும்னு இருந்தேன். என்ன நடந்தது? சொல்லு ரம்ஸ்” என்று அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள் ப்ரியம்வதா.
மஞ்சு, ஒரு ராஜ்குமாரிக்கே உரிய அமெரிக்கையுடனும், நளினத்துடனும் அவனைப் பேச ஊக்குவித்தாள்.
“காட்டினுள்ளே கால் போன வாக்கில் சென்ற நான் திடீரென்று மேலே செல்ல இயலாதவாறு, எதிரே ஒரு பெரிய மரத்தைக் கண்டேன். வலுவான அந்த மரத்தின் அடிப் பாகத்தின் விஸ்தீரணத்திலிருந்து, அது ஆயிரக் கணக்கான வருடங்கள் பழமையானதாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. பரந்து விரிந்திருந்த அதன் நூற்றுக் கணக்கான கிளைகளில், வானத்திலிருந்த அனைத்து நட்சத்திரங்களுமே இறங்கி வந்து, இலைகளாகப் பூத்திருந்தாற் போலிருந்தது. அவ்வளவு ஒளி பொருந்தியவையாக இருந்த இலைகள் கண்ணைப் பறிப்பவையாக இருந்தன. ஆனால், அந்த அதிசய மரத்தின் அழகையும் சிறப்பையும் கண்டு ரசிக்கும் மன நிலையில் நானில்லை. என் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே என் சிந்தனைக்குரிய விஷயமாக இருந்தது.
“குறிப்பாக, என் வாழ்வில் வசந்தமாகத் தோன்றிய மூன்று பெண்கள் என் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தனர். அந்த மூவருமே என்னை அடைய விரும்புகின்றனர் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அவர்களின் காதலுக்கு அருகதையானவனா நான்? நான் யாரை விரும்புகிறேன்? எனக்கு மூவரையுமே பிடித்திருக்கிறதே. இந்த எண்ணம் சரிதானா? இது மனித மனதின் இயல்பான போக்குதானா? அல்லது நான் தவறு செய்கிறேனா? நான் எனக்கும் மற்றவர்களுக்கும் நல்லவனாகத்தானே இருக்க விரும்புகிறேன். யாராவது ஒருவரை நான் தேர்ந்தெடுத்தால், மற்றவர்களுக்குத் துரோகம் செய்தவனாகி விடுவேனோ?
“ப்ருந்தாவுடனான என் காதலை அம்மா நிராகரித்து விட்டாள். அம்மாவின் ஒப்புதல் இல்லாமல் ப்ருந்தாவை அடைவதற்கு எந்த சாத்தியக் கூறுமே இல்லை. ஆனாலும், என்னால் அவளை மறக்க இயலவில்லையே.
“ப்ருந்தாவை அடைய முடியாத ஏக்கத்திலிருந்தபோது, அழகே உருவான ஒரு ராஜகுமாரியைச் சந்தித்தேன். ரோஜா மலர்க் கொத்து போன்றிருக்கும் அவள் பார்வை என் மீது படவே நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்? பேரழகையும் பிரமிக்க வைக்கும் சமூக அந்தஸ்தையும் கொண்ட இந்த மங்கையை மனைவியாக அடைய எனக்குத் தகுதி இருக்கிறதா? அவள் உண்மையாகவே என்னை விரும்புகிறாளா? அவளுடைய கடைக்கண் அசைவில் அவள் விருப்பங்களை நிறைவேற்ற எத்தனையோ ராஜகுமாரர்கள் தயாராக இருக்கின்றனரே. ஒரு சாமானியனான நான் அவள் என்னை விரும்புவதாகப் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றேனோ?
“இந்தக் குழப்பமான மன நிலையில் நானிருந்தபோது, ஒரு விண்ணுலக மங்கை பூமிக்கு இறங்கி வந்து, சாமானிய மக்களிடையே நடமாடுவதைக் கண்டேன். பிறகுதான் தெரிந்தது, அது விண்ணுலக மங்கையல்ல, மானுடர்கள் வழிபடும் கோவில் ஒன்றிலிருந்து, உயிர் பெற்று எழுந்தருளிய, ஆகம சாஸ்திரப்படி பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ஒரு தேவியின் பேரழகு மிக்க செப்புச் சிலை என்று. தேவியானவள் வழிபாட்டுக்கு உரியவளாயிற்றே. அவள் மீது காதல் கொள்ளும் பாதகத்தை ஒரு அற்ப மானுடன் செய்யத் துணியலாமா? இது என்ன சோதனை?”
“இவ்வாறான எண்ணங்களுடன் நான் அந்த பிரமாண்டமான மரத்தின் கீழே கண்ணை மூடி உட்கார்ந்திருந்தேன். எவ்வளவு நேரம் சென்றதோ தெரியாது. என்னெதிரே அது வரை புல் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மான், மேய்வதை நிறுத்தி விட்டு, என்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பஞ்ச வர்ணக் கிளி என் தோளில் வந்து அமர்ந்தது. நான் பார்த்திராத தேவ லோகக் கனியொன்று என் மடியில் வந்து விழுந்தது.
“கண்ணைத் திறந்து பார்த்தபோது, மான் மறைந்து, அங்கே பேரொளியுடன் ஒரு தேவி நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். கிளி பறந்து சென்று விட்டது. தேவியின் முன் உட்கார்ந்திருக்க விரும்பாமல், எழுந்திருக்க முயற்சி செய்தேன். முடியவில்லை. எனக்கு ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்கவே என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தோன்றின என்பது மட்டும் புரிந்தது.
“என் எண்ணத்தை உறுதி செய்யும் விதமாக, தேவி பேச ஆரம்பித்தாள்.”
எண்ண ஓட்டங்களின் போக்கில் தன்னை மறந்த நிலையில் பேசிக் கொண்டிருந்த ரமணன், சற்றே நிகழ் கால நிதர்சனத்துக்கு வந்து கவனித்தபோது, அவனருகே ப்ரியம்வதா அவன் தோள் மீது கை போட்டவாறு அமர்ந்திருந்தாள். மெய் மறந்து அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எதிரே, மஞ்சு அந்தக் காட்சியைக் கண்டு புன்னகைத்தவாறு, ரமணனின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ப்ரியம்வதாவைப் போல் உணர்ச்சி வசப்படாமல் ஒரு ராஜகுமாரியின் தோரணையோடு கம்பீரமாக அமர்ந்திருந்தாள்.
‘எவர் த ப்ரின்செஸ்’ என்று எண்ணி வியந்தான் ரமணன்.
(தொடரும்)














