
ரஞ்ஜீத்தின் கையிலிருந்த பிஸ்டலைச் சற்றும் பொருட்படுத்தாமல் ராமு காகா கூறினார்.
“ரஞ்ஜீத், பேராசை உன் கண்ணை மறைத்து விட்டது. தேவி கௌரி அம்மனின் அனுமதியின்றி அவள் சந்நிதியிலிருந்து ஒரு துரும்பைக் கூட உன்னால் எடுத்துச் செல்ல இயலாது. அவ்வாறு நீ செய்யத் துணிந்தால், அதுவே உன் வாழ்வில் நீ செய்யும் கடைசித் தவறாக இருக்கும். அதுவுமல்லாமல், உன் குலமே சர்வ நிச்சயமாக நாசமாகும். என்னுடைய கடைசி எச்சரிக்கை இது. உன்னுடைய முட்டாள்தனமான முடிவை இத்தோடு விட்டுவிடு. இல்லையேல் நீ அழியப் போவது உறுதி.”
“புதையல் இருக்குமிடத்தைக் காட்டச் சொன்னால், ஏதேதோ பிதற்றிக் கொண்டே போகிறாயே, முட்டாள் கிழவனே. புதையல் கிடைக்கும் வரை உன்னை நான் கொன்று விட மாட்டேன் என்ற அசட்டுத் தைரியத்தில் தானே இவ்வாறு பேசுகிறாய். உன்னைக் கொல்லாவிட்டாலும், முடவனாக ஆக்க முடியுமே. அதை மறந்து விட்டாயா, வேலைக்கார நாயே? உன் ஆருயிர் மகளின் உயிரும் என் கையில்தான் இருக்கிறது என்பதை மறந்து விடாதே. எப்படி இருந்தாலும், நீ என் கையால் இறக்கப் போவது உறுதி. அதற்கு அச்சாரமாக இதை வாங்கிக் கொள்” என்று கூறி, துப்பாக்கியை அவருடைய முழங்காலுக்குக் குறி வைத்தான். அடுத்த கணம் துப்பாக்கியிலிருந்து விடுபட்ட தோட்டாவின் ஒலியும், “ஆ” என்ற அலறலும் கோவிலின் நான்கு சுவர்களிலும் முட்டி மோதி எதிரொலித்தன.
அனைவரின் பார்வையும் ராமு காகாவின் மீது திரும்பியது. அவரோ அம்மன் விக்ரஹத்தின் முன்னால் குப்புற விழுந்து கிடந்தார். துப்பாக்கியைப் பிடித்திருந்த ரஞ்ஜீத்தின் வலது கையிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கையை இடது கையால் தாங்கிப் பிடித்திருந்தான். வலியால் துடித்துக் கொண்டிருந்த அவனுடைய வாயிலிருந்து நாராசமான வார்த்தைகள் சாக்கடை போல் பிரவாகமாகப் பெருக்கெடுத்தன. இது என்ன, துப்பாக்கியால் சுட்டவன் கையிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறதே. இது எப்படி நிகழ்ந்தது? அவனுக்கு எதிர்ப் புறம் மற்ற நண்பர்களோடு நின்று கொண்டிருந்த ரமணனின் கையில் பிஸ்டல்! அதை ரஞ்ஜீத் பக்கமாக நீட்டிக் குறி பார்த்துக் கொண்டிருந்த அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.
அவன் ரஞ்ஜீத் மீது பாய்ந்து துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டிருப்பானோ எனில், அதற்கு ஒரு சதவிகித வாய்ப்புக் கூட இல்லை. பின்னே என்னதான் நடந்தது? அனைவரின் மனதிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு எவரிடமும் பதிலில்லை.
வரவேற்பறையில் ரஞ்ஜீத் ரிக்கியை மிரட்டிக் கொண்டிருந்தபோது, கௌரி அவனுக்குத் தெரியாமல் அறையிலிருந்து நழுவிச் சமையலறைக்குச் சென்றாள். அங்கே ஒரு மூலையில் தான் எப்போதும் வைத்திருக்கும் கவண்கல்லையும், சில கூரிய ஜல்லிக் கற்களையும் தான் அணிந்திருந்த ஆடையில் மறைத்து எடுத்து வந்து, எதுவுமே நடக்காதது போல் அங்கே கூடியிருந்த மற்றவர்களுடன் அமைதியாக நின்று கொண்டாள். இதைப் பார்க்கத் தவறாத ரமணன் கௌரியின் திட்டத்தைப் புரிந்து கொண்டு அவளை நோக்கிப் புன்னகைத்தான். அந்த நிமிடத்திலிருந்து, இருவரும் ஒருவரையொருவர் கவனித்த வண்ணம் ரஞ்ஜீத் மீது தாக்குதல் நடத்தத் தக்க தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
ரஞ்ஜீத் தன் தந்தையை இழிந்த சொற்களால் பழிப்பதையும், மிரட்டுவதையும் பார்த்துப் பொறுக்க முடியாத ஆத்திரத்தையடைந்த கௌரியின் உள்ளம் எரிமலையாயிற்று. இறுதியில் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை வந்ததும், ரமணனுக்குக் கண் ஜாடை காண்பித்துத் தன் திட்டத்தை நிறைவேற்றத் துணிந்தாள். தீய சக்தியை அழிக்கத் தனக்கு ஆசி வழங்குமாறு கௌரி அம்மனிடம் வேண்டிக் கொண்டாள். அடுத்த கணம் தன் ஆடையில் ஒளித்து வைத்திருந்த கவண்கல்லை எடுத்து ரஞ்ஜீத்தைக் குறி வைத்துத் தாக்கினாள். வானில் பறந்து கொண்டிருக்கும் சிறிய பறவை கூட அவள் குறிக்குத் தப்பியதில்லை என்றால் தலைக்கனம் பிடித்துப் புதையல் ஆசையில் மதியிழந்திருந்த ரஞ்ஜீத் எம்மாத்திரம்? வெகு வேகமாகப் பறந்து வந்த கூரிய கல் பிஸ்டலைப் பிடித்திருந்த அவனுடைய கையைப் பதம் பார்க்கவே, அந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் குறி தவறியது. விளைவு, பிஸ்டலிலிருந்து சீறிப் பாய்ந்த தோட்டா ராமு காகாவின் அருகே இருந்த அம்மன் விக்ரஹம் வைக்கப் பட்டிருந்த பீடத்தின் மேலே பாய்ந்தது.
அதே நேரம், தான் சாகப் போவது நிச்சயம் என்ற எண்ணத்துக்கு வந்திருந்த ராமு காகா போகும் உயிர் அம்மனின் பாதார விந்தங்களிலே போகட்டும் என்ற முடிவோடு கீழே விழுந்து நமஸ்கரித்தார். தோட்டா பாய்ந்த வேகத்தில், கல்லடியினால் ஏற்பட்ட வலியின் காரணமாக ரஞ்ஜீத் கையை உதறும்போது தவற விட்ட பிஸ்டல் ரமணன் நின்றிருந்த திசையில் காற்றில் எகிறிப் பறந்தது. ஏற்கெனவே கௌரியின் சமிக்ஞையினால் தயாராக இருந்த ரமணன் பிஸ்டல் கீழே விழு முன் அதை லாகவமாகக் கைப்பற்றினான்.
“ரஞ்ஜீத், உன் கணக்குத் தவறி விட்டது. ஹேன்ஸ் அப். இப்போது நீ கொஞ்சம் அசைந்தாலும், அடுத்த தோட்டா உன் நெஞ்சைப் பதம் பார்க்கும்” என்ற ரமணன் பிஸ்டலை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்து ரஞ்ஜீத்தின் நெஞ்சைக் குறி வைத்தான்.
“ப்ரியா, நீலம், இருவரும் ராமு காகா பத்திரமாக இருக்கிறாரா, பாருங்கள்” என்ற ரமணன் ரஞ்ஜீத்தின் பார்வை அம்மன் விக்ரஹம் வைக்கப் பட்டிருந்த பீடத்தின் மீது நிலைத்திருந்ததைக் கவனித்தான்.
“எனக்கு ஒன்றுமில்லையம்மா. நான் நன்றாகவே இருக்கிறேன்” என்று கூறியவாறே ராமு காகா எழுந்து நின்றார்.
பிஸ்டலை உறுதியாகப் பிடித்தவாறே, ரஞ்ஜீத்தின் விழிகள் விரிந்த வண்ணம் இருந்ததையும், அவன் திறந்த வாயை மூடாமல் எதையோ பெருத்த வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததையும் ரமணன் கவனிக்கத் தவறவில்லை. ரஞ்ஜீத் இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கியவாறே விக்ரஹத்தின் பீடத்தை நோக்கி மிக மிக மெதுவாக நகர்ந்து சென்றான். அங்கே யாரும் எதிர்பார்த்திராத ஒரு விசித்திரமான காட்சி காத்திருந்தது.
குறி தவறிய தோட்டா பீடத்தின் விளிம்பில் பாய்ந்திருந்தது. தோட்டா பாய்ந்த வேகத்தில் பீடத்தின் மூடி போலிருந்த மேல் பாகம் தன் நிலையிலிருந்து சற்றே நகர்ந்திருந்தது. அதன் விளைவாகக் கோவிலின் வாசலைப் பார்த்தவாறு நின்ற நிலையிலிருந்த தேவியின் விக்ரஹமும் வேறு புறம் திரும்பியிருந்தது. இந்தக் காட்சி மற்றவர்களுக்குக் குழப்பத்தையளித்தாலும், ரஞ்ஜீத்துக்குப் புரிந்து விட்டது தான் தேடி வந்த புதையல் பீடத்தினுள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறதென்று.
“புதையல், என் புதையல்…எனக்குத்தான் சொந்தம்…” என்று ஜுர வேகத்தில் பிதற்றுவது போல் கூறிக் கொண்டே எஞ்சியிருந்த தூரத்தை ஓடிச் சென்று கடந்து, பீடத்தின் மூடி போன்ற மேல் பாகத்தை இரு கைகளாலும் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பினான். அது முழுமையாகத் திரும்பியதும், அதன் கீழே பீடத்தினுள் என்னதான் இருக்கிறது என்று பார்க்க விரும்பி, கூடியிருந்த அனைவரும் அதனருகே சென்றனர். இடுப்பளவுக்குச் சற்றே அதிகமான உயரமிருந்த பீடத்தின் மேல் பாகத்துக்குக் கீழே இருந்த பள்ளத்தில் ஒரு பெரிய இரும்புப் பெட்டி வைக்கப் பட்டிருந்தது. அந்தப் பெட்டியினுள்தான் புதையல் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.
புதையல் பெட்டியின் மூடியை இரு கைகளாலும் திறக்க முயற்சித்தான் ரஞ்ஜீத். கனமாக இருந்ததாலும், நீண்ட காலமாகத் திறக்கப்படாமலே இருந்ததாலும், அதைத் திறப்பது எளிதான காரியமாக இல்லை. ஆனாலும் தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி அதைத் திறந்தான். அடுத்த கணம் அந்த அறை முழுவதும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியது. எதிர்பாராத அந்த வெளிச்சத்தினால் கண்கள் கூச, கண்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்து பார்த்தான் ரஞ்ஜீத். அங்கே அவன் கண்ட காட்சி!
வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த தங்கக் கட்டிகளும், மோகராக்களும், முத்து மாலைகளும், நவரத்தினங்கள் பதித்த தங்க நகைகளும், உதிரியாகக் கிடந்த வைர, வைடூரிய, மரகத, மாணிக்க, முத்து, நீலம், பவளம், கோமேதக, புஷ்பராகங்களுமாக, மனிதனின் கற்பனைக்கெட்டாத மிகப் பெரிய விலை மதிப்பற்ற செல்வக் குவியல் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக விரவிக் கிடந்தது!
ஏற்கெனவே புதையல் ஆசையில் பித்துப் பிடித்தவனாகப் பல காலமாக அலைந்து திரிந்து கொண்டிருந்த ரஞ்ஜீத், அந்தக் காட்சியினால் மேலும் கிறங்கிப் போய், திறந்த வாயும் விரிந்த விழிகளுமாகத் தன்னைச் சுற்றியிருந்த மனிதர்களையும் தானிருந்த சூழலையும் முற்றிலும் மறந்தவனானான்.
புதையல் வைக்கப்பட்ட பெட்டியிலிருந்த விலை மதிப்பற்ற நவரத்தினங்களையும் நகைகளையும் தன்னிரு கைகளாலும் அளாவி மகிழ்ந்தான். ஒரு பறவையின் சிறிய முட்டையின் அளவிலிருந்த வைரம் பதித்த ஒரு மோதிரத்தைத் தன் கை விரலில் மாட்டிக் கொண்டான். கண்ணைப் பறிக்கும் கற்கள் பதித்த ஒரு மாலையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டான். தங்கக் காசுகளைத் தன் சட்டை மற்றும் கால்சட்டைப் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டான். தங்கக் காசுகளைத் தன் தலை மேல் அபிஷேகம் செய்வது போல் வர்ஷித்துக் கொண்டான். “புதையல்”, “புதையல்” என்று ஏதோ ஒரு மந்திர வார்த்தையை உச்சாடனம் செய்வது போலத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே, “ஹா, ஹா, ஹா” என்று உரக்கச் சிரித்தான்.
தங்கத்தால் செய்யப்பட்டிருந்த ஒரு உடை வாள் அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தான். கூடியிருந்த மனிதர்களை முதன் முறையாகப் பார்ப்பது போல அவனுடைய முக பாவம் மாறியது. அவன் கண்களில் மன நலம் பிறழ்ந்த ஒரு பித்துப் பிடித்த மனிதனின் பரிதாபமான சோக உணர்ச்சியும், பேராசையில் மனிதாபமானத்தை முற்றும் இழந்திருந்த ஒரு கொலைகாரனின் ரத்த வெறியும் மாறி மாறித் தென்பட்டன. மொத்தத்தில் ஒரு அமானுஷ்யமான சூழ்நிலை ஏற்பட்டு, அடுத்த கணம் அவன் என்ன செய்வான் என்று யாரும் அனுமானிக்க முடியாத ஒரு அச்ச உணர்வுக்கு அனைவரும் ஆளாயினர்.
“இது எல்லாமே என்னுடையது. வேறு யாருக்கும் கிடையாது. யாரும் அருகில் வராதீர்கள்” என்று கூறியவாறே கொஞ்சம் கொஞ்சமாகக் கோவில் வாசலை நோக்கி முன்னேறினான். அனைவரும் அவர்கள் நின்றிருந்த இடங்களிலிருந்து பின்னே நகர்ந்து அவனுக்கு வழி விட்டனர். வாசலருகே நின்றிருந்த கௌரியின் கரத்தைச் சட்டென்று பற்றியிழுத்தான் ரஞ்ஜீத்.
“நான் போய் இந்தப் புதையலை எடுத்துச் செல்வதற்காக ட்ரக்குகள் கொண்டு வரும் வரை யாரும் அவரவர் இடத்திலிருந்து நகரக் கூடாது. என் வார்த்தையை யாரும் மீறினால், இந்தப் பெண்ணை உயிரோடு பார்க்க முடியாது” என்று கூறி, கையிலிருந்த தங்க வாளை கௌரியின் கழுத்தில் வைத்து மிரட்டினான். “துப்பாக்கியைக் கீழே போடு” என்று ரமணனை மிட்ட, அவனும் அவ்வாறே செய்தான்.
ரஞ்ஜீத் புதையலைப் பார்த்து வியந்து கொண்டிருந்த வேளையில், ரஜினி ஓசையின்றிக் கோவிலுக்குள் நுழைந்து மற்ற நண்பர்களின் கூட்டத்தில் ஒருத்தியாகக் கலந்து நின்று கொண்டாள். ரஞ்ஜீத் பார்க்காதபோது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அம்மன் விக்கிரஹத்தின் அருகே சென்று விட்டாள். வினாடி நேரத்தில் அம்மன் கரத்திலிருந்த திரிசூலத்தைப் பெயர்த்தெடுத்து, அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்த அரக்கனின் நெஞ்சுக்குக் குறி வைத்தாள்.
“ரஞ்ஜீத்…” என்று ஓங்கி ஒலித்த ரஜினியின் குரலில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. திரும்பிப் பார்த்த ரஞ்ஜீத் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் கையில் திரிசூலத்துடன் தேவி கௌரி அம்மன் நின்று கொண்டிருந்ததைக் கண்டான். தேவியின் அருகே இருந்த சிங்கம் அவன் மீது பாயத் தயாராக இருந்தது. “அரக்கனே, அழிந்து போ” என்று தேவி திரிசூலத்தை உயர்த்திய நேரத்தில் ராமு காகா அவள் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்தார். “தாயே, அம்பே, துர்கே, மகா காளி, கௌரி, இந்த ராக்ஷசனின் ஒரு சொட்டு உதிரம் கூட உன் திருக் கோவிலின் மண்ணில் விழுந்தால், பெரும் அனர்த்தங்கள் விளைய அது காரணமாகி விடும். அதை இந்த பூமி தாங்காது. அவனைப் போக விடு, அம்மா” என்று கண்ணீர் மல்க இறைஞ்சினார்.
அச்சமும், அதிர்ச்சியுமுற்ற ரஞ்ஜீத் கோவிலில் இருந்து வெளியே ஓடினான். அங்கும் அவனுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. உயர்த்திப் பிடித்த திரிசூலத்துடன் அங்கேயும் தேவியைக் கண்டான். வானில் தோன்றிய கண்ணைப் பறிக்கும் மின்னலும், காதைச் செவிடாக்கும் இடி ஓசையும், தப்பிக்க வழி தெரியாது ஏற்கெனவே மிரண்டு போயிருந்த அவனை மிருகமாக்கியது. கையில் வாளுடன் தேவியின் மீது பாயத் தயாரான அவன் மார்பில் தேவியின் அஸ்திரம் தைத்து, நாலா புறமும் ரத்தம் பீய்ச்சியடித்தது. தேவியின் திரிசூலம் அவன் நெஞ்சில் பாய்ந்த அதே கணம் ஒரு துப்பாக்கியின் தோட்டா அவன் கையில் பாய, அவன் பிடித்திருந்த தங்க வாள் கீழே விழுந்தது.
“ஆ” என்ற அலறலுடன் அவன் விழுந்த இடத்துக்கு அனைவரும் விரைந்தபோது, அங்கே ரத்தம் தோய்ந்த திரிசூலமும் கையுமாகத் தலைவிரி கோலத்துடன் தேவியாக நின்றிருந்தாள் ரஜினி. அவளுடைய கோபமும் ஆத்திரமும் முற்றுமாகத் தணிந்திராத நிலையில், கீழே குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடந்த ரஞ்ஜீத்தின் உடல் மீது ஒரு காலை வைத்தவளாய், திரிசூலத்தை அவன் நெஞ்சில் மற்றொரு முறை பாய்ச்சுவதற்காகக் கையை ஓங்கினாள்.
“தேவிஜி, வேண்டாம். விட்டு விடுங்கள். அவனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியவாறே உயர்த்திப் பிடித்த ரிவால்வருடன் முன்னே வந்தார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
“அவனைக் கொல்வதால் நிறைய சட்டச் சிக்கல்களில் நீங்கள் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அவனை எங்களிடம் விட்டு விடுங்கள்” என்றவர், ரஞ்ஜீத்தை மாளிகையின் வெளியே காத்திருந்த ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும்படி உடனிருந்த காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
“ரஞ்ஜீத் பிழைப்பது கடினம். அப்படியே பிழைத்தாலும், மிஞ்சியிருக்கும் வாழ்க்கையைத் தனிமைச் சிறையின் நான்கு சுவர்களுக்குள்ளேயே கழிக்க வேண்டியிருக்கும்.”
“புதையலையே எண்ணிக் கொண்டு, கணக்கில்லாத சொத்துக்கு அதிபதியாகி, தனக்குக் கிடைக்கப் போகும் பணத்தை எண்ணுவதிலேயே வாழ்நாளைச் செலவழிக்க விரும்பியவன், இனி சிறைக் கம்பிகளைத்தான் எண்ண வேண்டியிருக்கும் என்று சொல்லுங்கள்” என்று ரமணன் கூற, கூடியிருந்த அனைவரும் சிரிக்க, அது வரை அங்கே இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து ஒரு இணக்கமான நிலைமை தோன்றியது.
“மிகவும் சரியாகச் சொன்னீர்கள். அது சரி. குறி பிசகாமல் ரஞ்ஜீத்தின் கையில் சுட்டவர் யார்?”
“இவர்தான் இன்ஸ்பெக்டர், மிஸ்டர் ரமணன். மை ஹீரோ!” என்று கூறிய ப்ரியம்வதா ரமணனின் மார்பில் சாய்ந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.
“கங்கிராட்ஸ் மிஸ்டர் ரமணன். நீங்கள் போலீஸ் சர்வீசில் இருக்க வேண்டியவர். உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்று ரமணனைப் பாராட்டினார் இன்ஸ்பெக்டர்.
“சொல்ல மறந்து விட்டேனே. நீங்கள் அனைவரும் பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று டெல்லியிலிருந்து மிஸ் மஞ்சு தகவல் தெரிவித்திருந்தார். நாங்கள் ஒரு பெரிய போலீஸ் படையுடன் சமயத்துக்கு வந்து விட்டாலும், ரஞ்ஜீத் உள்பட நீங்கள் அனைவரும் கோவிலுக்குள் இருந்ததால், கோவிலின் சாந்நித்தியத்துக்கு பங்கம் ஏற்படாமலும், உங்கள் யாருக்கும் ஆபத்து ஏற்படாமலும் ரஞ்ஜீத்தைப் பிடிக்கும் நடவடிக்கையில் சற்றுச் சுணக்கம் ஏற்பட்டு விட்டது.”
“பரவாயில்லை, இன்ஸ்பெக்டர். எல்லா ஆபத்துகளிலிருந்தும் காவல் துறையே தங்களைக் காக்க வேண்டும் என்று எதிர் பார்க்காமல், பொது மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்தானே. தவிரவும், எப்போதும் போல் கடைசி நிமிடத்தில் வந்து வில்லனைக் கைது செய்து, போலீசைப் பற்றிய பொது மக்களின் அபிப்பிராயம் சரிதான் என்று நிரூபித்து விட்டீர்கள்” என்று ரமணன் கூற, மறுபடியும் அங்கு தோன்றிய சிரிப்பலைகள் அடங்க வெகு நேரமாயிற்று.
“கேட்பதற்குத் தமாஷாக இருந்தாலும், எங்களுக்கிருக்கும் அழுத்தங்களைக் பற்றிய உங்கள் புரிதலுக்குக் காவல் துறை சார்பில் என் நன்றி. கிராமத்தில் பொது மக்களுடன் கலந்திருந்த ரஞ்ஜீத்தின் ஆட்கள் அனைவரையும் கைது செய்து விட்டோம். இனி உங்கள் யாருக்கும் எந்த அபாயமும் கிடையாது. புதையலின் காவலுக்காக, ஆயுதம் தாங்கிய ஒரு போலீஸ் படை மாளிகையைச் சுற்றி அமைக்கப் பட்டிருக்கிறது. நான் நாளைக் காலை வருகிறேன். மீதி விஷயங்களை அப்போது பேசிக் கொள்ளலாம். இன் த மீன்வைல், எஞ்ஜாய் யுவர்செல்வ்ஸ்.” என்று கூறி, ரமணனுடன் கை குலுக்கி, விடை பெற்றுச் சென்றார் இன்ஸ்பெக்டர்.
ரமணனும் மற்றவர்களும் இன்ஸ்பெக்டருடன் பேசிக் கொண்டிருந்த வேளையில், கௌரி மற்றும் ராமு காகாவின் உதவியோடு, நீலம் மூர்ச்சையாகி விட்டிருந்த ரஜினியை மாளிகையினுள் அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய கவனிப்பையும் உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள். நினைவு திரும்பிய ரஜினி, இன்ஸ்பெக்டரை அனுப்பிவிட்டு மாளிகையினுள் நுழைந்த நண்பர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
“என்ன ஆயிற்று ப்ரியாவுக்கு? சண்டையில் அவள் காலில் ஏதேனும் அடிகிடி பட்டு விட்டதா என்ன? ஏன் இப்படி ரம்ஸின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் தோளிலே தொங்கிக் கொண்டு வருகிறாள்? யாராவது டாக்டருக்கு ஃபோன் செய்யுங்கள், ப்ளீஸ்” என்றாள்.
“ப்ரியின் வியாதிக்கு டாக்டரைக் கூப்பிடுவதால் எந்தப் பயனுமில்லை. பண்டித்ஜியைத்தான் கூப்பிட வேண்டும்” என்றாள் நீலம் சிரித்துக் கொண்டே.
“அடடே, கதை அப்படிப் போகிறதா?”
“ஹோல்ட் ஆன், ஹோல்ட் ஆன். எனக்கும் இந்த விஷயத்தில் ஏதாவது கூற வேண்டியிருக்கும் என்று யாருக்குமே தோன்றவில்லையா?” என்றான் ரமணன் பரிதாபமாக.
“இனி நீ பேச ஒன்றுமில்லை. வாயை மூடிக் கொண்டு மணவறையில் உட்கார வேண்டியதுதான் உன் வேலை. ஸோ, ஷட் அப்” என்ற நீலத்தின் வார்த்தைகளை அங்கிருந்த அனைவரும் பலமாக ஆமோதிக்க, “அடக் கடவுளே” என்று கூறியவாறு ரமணன் இரு கைகளாலும் தலையைப் பிடித்தவாறு உட்கார்ந்தான். அப்போதும், ப்ரியம்வதா அவனை விட்டு விலகாமல், அவனருகிலேயே உரசியவாறு ஒரு த்ருப்தி கலந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
வெளியே இடியும் மின்னலும் மறைந்து அமைதி திரும்பியிருந்தது. ப்ரியம்வதா மனைவியாக அமைவது விலை மதிப்பற்ற ஒரு புதையல் தன்னைத் தேடி வந்தது போல என்பதில் அவனுக்குச் சிறிதளவும் ஐயம் இல்லாவிட்டாலும், ப்ருந்தாவுடனான தன்னுடைய முதல் காதலுக்குத் துரோகம் செய்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் அவன் விரும்பவில்லை. தூரத்து இடி முழக்கமொன்று அவன் மன நிலையைப் பிரதிபலித்தது. மழை வருமா? மனம் குளிருமா?
(தொடரும்)














