மேற்கு வங்கத்தின் நந்திகிராமின் பாஜக வேட்பாளர் சுவேந்து ஆதிகாரி, திரிணமூல் கட்சியின் சக்திவாய்ந்த நபராக இருந்த அவர் பாஜகவில் இணைந்து மம்தாவுக்கு மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது அனைவரும் அறிந்ததே.
மம்தாவை அவரது கட்சியோடு சேர்த்து ஆட்சியில் இருந்து அகற்றுவது ஒன்றே குறிக்கோள் என்று முனைப்புடன் செயல்படும் சுவேந்து அதிகாரி இப்போது அடுத்த அஸ்திரத்தை வீசியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரசில் எம்.பி.யாக இருக்கும் சுவேந்து அதிகாரியின் தந்தை சிசிர் ஆதிகாரி இம்மாதம் 24 ஆம் தேதி அவர்களின் சொந்த மாவட்டமான காந்தியில் நடைபெற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பேரணியில் கலந்து கொள்வார் என்று அறிவித்து மேற்கு வங்க அரசியலில் மேலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளார்.
“அதற்கு முன்னதாகவே, மார்ச் 21 ஆம் தேதி, எனது தந்தை அமித் ஷாவின் பேரணிக்கு அனுப்புவேன்” என்று ஒரு பொதுக் கூட்டத்தில் சுவேந்து அதிகாரி கூறினார்.
சுவேந்துவின் தந்தையான சிசிர் ஆதிகாரி திரிணாமுல் காங்கிரசின் தொடக்க காலத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருந்தார். அவரது மகன் திரிணமூல் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தாம் அளித்து வரும் ஆதரவை பற்றி எதையும் கருத்து கூறாமல் இதுவரை அமைதி காத்தார்.
அந்த அமைதி இன்று ஒரு கலைந்தது. நான் திரிணமூல் கட்சியில் இருக்கிறேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்.
சொந்த மாவட்டமான காந்தியில் சிசிர் அ திகாரி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது ஷாட்டுக்காக தனது வீட்டை விட்டு வெளியே வந்த போது பத்திகையாளர்களிடம் பேசினார். அவருக்கு இப்போது வயது 80.
ஒரு காலத்தில் சிசிர் ஆதிகாரி, மம்தா பானர்ஜியின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
என் மகன் சுவேந்து திரிணமூல் கட்சியை விட்டு வெளியேறி மம்தாவின் அரசை வேரோடு பிடுங்குவதற்காக இங்கு வந்துள்ளார். இந்த பெண்மணி (மம்தா) இங்கே இன்னமும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? இந்தப் பெண்மணியால் நந்திகிராம் மாவட்ட மக்களுக்கு சங்கடம் தான் விளைந்துள்ளது என்றார் சிசிர் அதிகாரி. .
சில நாட்களுக்கு முன்னர், மம்தா தாக்கப்பட்டது குறித்து கருத்துக் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு, அவர் தாக்கப்பட்டதாக கூறினார்கள். சிலர் அது குறித்து தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர், உண்மையில் எவரும் அவரை தாக்கவில்லை. காரின் கதவு தான் அவரைத் தாக்கியது. இதில் மம்தாவுக்கு என்ன வகையான காயம் ஏற்பட்டது? மருத்துவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இந்தப் பெண்மணி பிளாஸ்டர் மற்றும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நாடகம் ஆடுகிறார். ” என்றார்.
“ஒரு திரைப்படத்தில் இதே போன்ற காட்சி ஒன்று இருந்தது என்று யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார். என்ன செய்வது ? நாங்கள் (மே.வங்க மக்கள்) இப்போது உட்கார்ந்து கொண்டு நிஜவாழ்க்கையில் இன்னொரு சினிமாவைப் பார்க்கிறோம்” என்று சிசிர் ஆதிகாரி கூறினார்.
பிரதமர் மோடியின் பேரணிக்கு அவர் செல்வாரா என்று கேட்டதற்கு, “ஒரு வாய்ப்பு இருந்தால், நான் நிச்சயமாக பிரதமரின் பேரணிக்கு செல்வேன். அதில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.
இப்போது, சிசிர் அதிகாரி கோவிட் தடுப்பூசிகளை எடுத்துள்ளார்.
என் மகன் சுவேந்து கேட்டால் நான் வெளியே வந்து பிரச்சாரம் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
சிசிர், மற்றும் சுவேந்து அதிகாரி குடும்ப நபர்கள் திரிணாமுல் கட்சியை விட்டு வெளியேறுவதால் கட்சிக்கு எந்த சங்கடமும் விளையாது என்கிறார்கள் TMC கட்சிக்காரர்கள்..
திரு சிசிர் அதிகாரியின் கருத்துக்கள் அவர் பாஜகவில் சேரக்கூடும் என்ற ஊகத்தைத் தூண்டியுள்ளது. அவரது இளைய மகன் சவுமேந்து ஏற்கனவே பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் உறுப்பினரான சவுமேந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் காந்தி நகராட்சி வாரியத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் இன்னொரு மகனான திரிணாமுல் எம்.பி.யான திபேந்து அதிகாரி இன்னும் பாஜகவில் சேரவில்லை.
கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஆதிகாரி குடும்பத்திற்கு ஒரு பாரம்பரிய பிடிப்பு உள்ளது, ஏனெனில் அங்கு தான் அதிகாரி குடும்பத்தின் வேர்கள் உள்ளன. மேலும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வரலாறு படைத்த குடும்பம் அவர்களுடையது. அதிகாரிகளின் முழு குடும்பமும் அரசியல் விசுவாசத்தை பாஜகவுக்கு மாற்றினால், அது மாவட்டத்தில் திரிணாமுலின் செல்வாக்கை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கணிக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வரவிருக்கும் கோடை வெப்பத்தை தோற்கடிக்கும் அனலை பரப்ப மேற்கு வங்க அரசியல்வாதிகள் போட்டி போட்டுகொண்டு காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.













