நல்ல தமிழில் எழுத,பேசப் பழகுவோம்!
“பால்மாறுதல்”.
‘பால்மாறுதல்’, ‘பால்மாறாதே’, ‘பால்மாறாமல்செய்’ என்று சொல்கிறோம். இவற்றின் பொருள், ‘தயங்காமல் செய்’, ‘சோர்வடையாமல் செய்’, ‘சோம்பலில்லாமல் செய்’ என்பதே. இப்பொருள் எப்படிவந்தது?
தாய் தானீன்ற குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவருவாள். சிலமாதங்கள் சென்றபின் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு ஆவின்பாலைக் கொடுப்பாள். ஆவின்பால் சுவையிலும் ஊட்டத்திலும் தாய்ப்பாலுக்கு ஒப்பாகாது. எனவே, இத்தகையப்பாலை குடிக்க குழந்தை சுணங்கும், தயங்கும், மறுக்கும், ஒதுக்கும். தாய்பாலும் ஊட்டப்படாததால், ஆவின்பாலை குடிக்காத குழவி சோர்ந்துபோகும், சோம்பலுறும். ஊக்கமின்மை, சுறுசுறுப்பின்மை ஏற்படும். இவ்வளவு விளைவுகளும் பால்மாற்றத்தினால் ஏற்பட்டவைதாமே. காலவோட்டத்தில், இச்சுணக்கங்கள் ‘பால்மாறுதல்’ என்னுஞ்சொல்லால் குறிக்கப்படலாயிற்று.
“மதியம்”.
நடுப்பகலைக்குறிக்க ‘மதியம்’ என்னுஞ்சொல் பரவலாக ஆளப்படுகிறது. ‘மத்தியானம்’ என்னும் சமஸ்கிருதசொல் மதியமாக மாறி வழங்கப்படுகிறது. மதியம் அவ்வளவு பொருத்தமான சொல்லன்று.
மதியம் என்பது தமிழில் பெரும்பாலும் சந்திரனைத்தான் குறிக்கும். எடுத்துக்காட்டுகள்:
“மாசில்வீணையும் மாலைமதியமும்” – அப்பரடிகள்.
“கார்மேனி செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்”- ஆண்டாள்நாச்சியார்.
“விசும்பின் மதியமும் ஞாயிறும்”- பெருங்கதை.
ஆதலால் பகலுணவை , ‘மதியவுணவு’ என்றுசொல்வது அவ்வளவு பொருந்துமாவென சிந்திப்பீர்.
“பகல்” என்பதுதான் சரியான, பொருத்தமான சொல். ‘பகல் உணவு’ என்றுதான் எங்கும் பொதுவாகக்கூறுவர். பகல் என்னுஞ்சொல் பெரும்பாலும் ‘நடுப்பகலை’யே குறிக்கும். எடுத்துக்காட்டுகள்:
“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்” – திருக்குறள்.
“காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும்” – குறுந்தொகை.
இவற்றில் பகலென்பது நடுப்பகலையே காட்டுகிறதன்றோ. ஆங்கிலத்தில் சொல்லப்படும் noon என்பதும் நடுப்பகலையே குறிக்கும். குக்கிராமங்களில் பகல்சோறு சமைக்கவில்லை என்று சொல்வார்கள். இதில் பகல் என்பது நடுப்பகலைத்தானே குறிக்கிறது?
காலைப்பொழுதுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட காலத்தை ‘முற்பகல்’ (forenoon) என்றும்; பகலுக்கும் மாலைப்பொழுதுக்கும் இடைப்பட்ட காலத்தை ‘பிற்பகல்’ (afternoon) என்றும் அழைக்கிறோமல்லவா?
முனைவர் திரு முத்து கண்ணப்பன் அவர்களது “நல்லதமிழ் அறிவோம்” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
தொடர்புடைய பதிவுகள்:
செந்தமிழும் நாப்பழக்கம் 1:
செந்தமிழும் நாப்பழக்கம்













