உயரிய விழுமியங்கள் அனைத்திற்கும் ஏகபோக உரிமையாளர் என்று மார் தட்டிக் கொள்ளும் பாஜக அரசு ஏன் பாரத ஸ்டேட் வங்கியை விரைந்து செயல்பட்டு கடனை வசூலிக்க அழுத்தம் தரவில்லை? வழக்கம் போல காங்கிரஸ் மீது பழி போட்டு தப்பிக்க இயலாது. “கடன் கொடுத்தது 2016ம் வருடத்தில், இவர்கள் ஆட்சியில்.“
திவாலாகியுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (Rcomm) நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியிடம் ரூபாய் 1200 கோடிகள் கடனை வாங்கி அதனை திரும்ப செலுத்தாமல் போனதால், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில் அம்பானி அளித்துள்ள தனிப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் அவை மீதான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLT) மனு அளித்துள்ளது. உடனே இணையதளங்களில் உள்ள வலதுசாரிகள் “ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்கு சலுகை காட்டியுள்ளதாக எங்கள் அரசாங்கம் மீது அபாண்டமாக ராகுல் காந்தி குற்றம் சுமத்தினாரே, இப்போது பாருங்கள் எங்கள் நேர்மையை” என்று கொண்டாடுகிறார்கள்.
வழக்கம் போல இதுவும் ஒரு பச்சையான பொய்.
இந்த விஷயத்தின் முன்கதை சுருக்கத்தை ரத்தினச் சுருக்கமாக பார்த்து விட்டு உள் விஷயங்களுக்கு போவோம். 2016ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் RComm நிறுவனத்திற்கு 535 கோடிகள் மற்றும் 635 கோடிகள் என இரண்டு கடன்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது. இந்த கடன்களுக்கு ஈடாக சொத்துக்களை (Collateral) அளித்ததோடு தனது தனிப்பட்ட உத்தரவாதத்தையும் (Personal Guarantee) அனில் அம்பானி வழங்கியிருந்தார். வழக்கம் போல இந்த கடன்கள் 2017ம் வருடத்திலேயே வாராக் கடன்களாக மாறின. 2018ம் வருடம் ஜனவரி மாதத்திலேயே பாரத ஸ்டேட் வங்கி இந்த தனிப்பட்ட உத்தரவாதத்தை செயல்படுத்தும் (invoke) நடவடிக்கைகளை தொடங்கியது. பிறகு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விட்டு இப்போது NCLT யிடம் மனு செய்துள்ளது.
இப்போது என்ன திடீர் விழிப்பு NCLTக்கு? பயம் ஐயா பயம். சமீபத்தில் சீனாவில் உள்ள வங்கிகள் தாங்கள் RComm நிறுவனத்திற்கு அளித்த கடன் தொகையான 5447 கோடிகளை அந்த நிறுவனம் திரும்ப செலுத்தாமல் விட்டதால் அவற்றை வசூல் செய்ய இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உத்தரவு பெற்றிருந்தன. இந்த உத்தரவை செயல்படுத்தும் போது நிச்சயமாக அவையும் இதேபோன்ற தனிப்பட்ட உத்தரவாதங்களை செயல்படுத்தும். ஆகையால் பயம் கொண்ட SBI காலம் கடந்தாவது விழித்துக் கொண்டது.
கடன் வழங்குபவர்களில் காப்புறுதிக் கடனாளி, காப்புறுதியற்ற கடனாளி (Secured Creditor, Unsecured Creditor) என இரு வகைகள் உண்டு. வங்கிகள், குறிப்பாக அரசு வங்கிகள் காப்புறுதிக் கடனாளிகள் பட்டியலில் வருவார்கள். கடன் பெற்ற நிறுவனம் திரும்ப செலுத்தாத பட்சத்தில் அதன் சொத்துக்கள் மற்றும் வருமானம் மீது காப்புறுதி பெற்ற கடனாளிகளுக்கே முன்னுரிமை. இதுதான் சட்டம், வழக்கம். ஆனால் RComm விஷயத்தில் இது எப்படி தலைகீழாக செயல்பட்டது என்று பார்ப்போம்.
எரிக்சன் ( Ericsson) என்ற ஜெர்மனி நிறுவனத்திடமிருந்து Rcomm நிறுவனம் தொலைத்தொடர்பு கருவிகளை கொள்முதல் செய்திருந்தது. மேலும் 2013ம் ஆண்டில் தொடங்கி 7 வருடங்களுக்கு Rcomm நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவைகளை நாடு முழுவதும் இயக்கும் ஒப்பந்தமும் போட்டிருந்தது. இதற்கான தொகையான 1500 கோடிகளை Rcomm நிறுவனம் செலுத்தத் தவறியது. உடனே NCLTயில் மனு அளித்து உத்தரவும் பெற்றது எரிக்சன். அந்த உத்தரவை மேல் முறையீட்டு அமைப்பான NCLAT யும் சற்றே மாற்றி உத்தரவிட்டது. இதனையும் மதிக்க Rcomm தவறியதால் உச்சநீதிமன்றத்தை அணுகியது எரிக்சன்.
வழக்கை விசாரித்த பின்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுமே கூட பணத்தை செலுத்தத் தவறியது அனில் அம்பானியின் Rcomm நிறுவனம்.சும்மா விடவில்லை எரிக்சன். அனில் அம்பானி மீது மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடுத்தது. தேவையான பணத்தை வைத்திருந்துமே கூட அதனை செலுத்தத் தவறியதாக அனில் அம்பானியின் நிறுவனங்களை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதனை செலுத்தவில்லை என்றால் அனில் அம்பானியை சிறைக்கு அனுப்ப உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தது. பயந்து போன அம்பானி, உடனே எரிக்சன் நிறுவனத்திற்கு தான் செலுத்த வேண்டிய தொகையான 550 கோடிகள் மற்றும் வட்டியை உடனே செலுத்தி விட்டார்! இந்த தொகையின் பெரும் பகுதியை மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி அளித்தார் என்று கூறப்படுகிறது.
இந்த எரிக்சன்-Rcomm விவகாரத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது எரிக்சன் காப்புறுதியற்ற கடனாளர் (Unsecured Creditor). இரண்டாவது இவை அனைத்தும் மார்ச், 2019ல் முழுமையாக நடந்து முடிந்து விட்டன. அதாவது இன்றைக்கு சுமார் 15 மாதங்களுக்கு முன்பாகவே.
ஒரு தனியார் நிறுவனம் துரிதமாக செயல்பட்டு தனது கடனை வசூல் வெற்றிகரமாக செய்துள்ளது என்றால், முற்றிலும் உரிமை உள்ள பொதுமக்கள் பணத்தில் இயங்கும் அரசு வங்கி எவ்வளவு விரைவாக செயல்பட்டிருக்க வேண்டும்? ஆனால் என அவ்வாறு நடக்கவில்லை? எது தடுத்தது? எதற்காக தடுத்தது? டிராக்டர் கடன் வாங்கி திரும்பி செலுத்தாத விவசாயியை துரத்தித் துரத்தி வசூல் செய்யும் வங்கி, கல்விக் கடன் வாங்கி படித்து விட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படும் பட்டதாரியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி கழுத்தில் துண்டு போட்டு காசை வசூல் செய்யும் வங்கி, ஏன் அம்பானி போன்ற பெரு முதலாளிகள் தொடர்புடைய விஷயம் என்றால் மட்டும் மயிலிறகால் செல்லமாக அடிக்கிறது?
Rcomm விஷயத்தில் பாரத ஸ்டேட் வங்கி எவ்வளவு சொதப்பியுள்ளது என்பதை இதனை விசாரித்த திவால் தீர்ப்பாய நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் மூலம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளலாம். “நீங்கள் (பாரத ஸ்டேட் வங்கி) தோற்று விட்டீர்கள். கடன் அளித்தவர்களின் கூட்டுக் குழு (Joint Lenders Forum) தோற்று விட்டது. நீங்கள் Rcom உடன் சேர்ந்து கொண்டு Rcomன் சொத்துக்களை ஜியோ நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் 37000 கோடி ரூபாய்களை வசூலித்து விடுவதாக சொன்னீர்கள். நீங்கள் தோற்று விட்டீர்கள்.”
Rcom கடன் விஷயத்தில் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் இன்னுமொரு புரட்சிகரமான திட்டத்தையுமே முன்வைத்தன. நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த அவை, Rcom நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகையில் ஒரு பகுதியை Rcom நிறுவனத்தின் பங்குகளாக மாற்றிக் கொள்ளும் மேதாவித்தனமான திட்டத்தை யோசித்து வைத்திருந்தார்கள். பங்கு ஒன்றிற்கு 25 ரூபாய்கள் எனவும் விலை நிர்ணயம் செய்திருந்தார்கள். யார் செய்த புண்ணியமோ இந்த திட்டம் நிறைவேறவில்லை. (தற்போது Rcom பங்கு விலை 2 ரூபாய் 80 காசு.)
உயரிய விழுமியங்கள் அனைத்திற்கும் ஏகபோக உரிமையாளர் என்று மார் தட்டிக் கொள்ளும் பாஜக அரசு ஏன் பாரத ஸ்டேட் வங்கியை விரைந்து செயல்பட்டு கடனை வசூலிக்க அழுத்தம் தரவில்லை? வழக்கம் போல காங்கிரஸ் மீது பழி போட்டு தப்பிக்க இயலாது. கடன் கொடுத்தது 2016ம் வருடத்தில், இவர்கள் ஆட்சியில்.
இறுதியில் ஒரு உபரி தகவல்:- பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகளுக்கு Rcom நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டிய தொகை சுமார் 9600 கோடிகள்.
இதோடு நிறைவு பெறும் விஷயமல்ல இது. ஜியோ நிறுவனம் – Rcom நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான விற்பனை ஒப்பந்தம் மற்றும் தொடர்பான பல விஷயங்கள் குறித்து வேறொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.
நாட்டின் அரசியலில் வலுவான எதிர்க்கட்சிகளுக்கான தேவையையும், அவை வலுவிழந்து ஒற்றைக் கட்சி அசுர பலம் பெறுவதால் ஏற்படும் ஆபத்துகளையும் இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
இந்த நிலை நீடித்தால் மக்களாட்சி என்பதே பெருநிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்தம் மக்களுக்கான ஆட்சியாக புதிய வடிவம் பெற்று விடும். ஆண்டவரின் சித்தம் அதுவென்றால் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை
~ஜோஷுவா பெனிடிக்ட்














கடன் வசூல் நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டும் வங்கிகளின் நடவடிக்கையை அன்றாட முறையில் கண்காணிக்கும் நடைமுறை மத்திய அரசில் உள்ளதா? அப்படி ஒரு நடைமுறை இருந்து அதில் சுணக்கம் காட்டியிருந்தால் மத்திய அரசை குறை கூறலாம். ஆசிரியருக்கு மத்திய அரசு மீது குறை கூறும் நோக்கமே முதன்மையாக உள்ளது. அதனால் தான் மத்திய அரசு சொல்லாததைக் கூட சொல்கிறார்( “ காங்கிரஸ் மீது பழி போட்டு தப்பிக்க முடியாது”…)
வங்கிகள் வாராந்திர, மாதாந்திர, காலாண்டுக்கொரு முறை என கால அளவீடுகளில் தங்களது performance குறித்த அறிக்கைகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும். அவற்றை சீரியஸாக கவனித்து இருந்தால் பல நட்டங்களை முன்கூட்டியே தவிர்த்திருக்கலாம். சரி, நீங்கள் கூறுவது போல நடைமுறை இல்லை என்றே கொள்வோம். புதிதாக உருவாக்கி இருக்கலாமே? IBC நடவடிக்கையே அவ்வாறு புதிதாக உருவானது தானே? முத்தலாக், 35A, 370 என பல விஷயங்களில் நடைமுறையை மீறி புதிய விஷயங்களைத் தானே இந்த அரசு செயல்படுத்தியது. அப்படியானால் பொதுமக்கள் பணத்தை பாதுகாக்க புதிய நடைமுறைகளை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறீர்களா திரு. தர்மப்போராளி அவர்களே?
அரசு செயல்படவில்லை அல்லது மெத்தனமாகச் செயல்பட்டது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும், இந்தக் குற்றச் நாட்டுக்குப் பதிலாக அரசின் நிலைப்பாடு என்ன? அரசுக்கு ஒரு நிலைப்பாடே இல்லையா? அல்லது நிலைப்பாடு இருந்தால், அது தவறான ஒன்றா? அதைப் பற்றி ஏன் உங்கள் கட்டுரையில் ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது? ஒரு தரப்பு வாதத்தை மட்டும் முன் வைத்து இது அம்பானிகளின் அரசே என்று எப்படிக் கூற முடியும்? நீதிமன்றம் அவ்வாறு கூறியிருக்கிறதா? கடனை வசூலிக்க அரசின் முன் வேறு வழிகள் ஏதும் இருக்கின்றனவா? குற்றம் புரியப்பட்டு இருக்கிறதென்றால், அந்தக் குற்றத்துக்குரிய தண்டனை யாருக்கு அளிக்கப்பட வேண்டும்?