இந்திய கடற்படையை நவீனப்படுத்தி மேற்கு கடற்கறைப் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய கப்பற்படை தளம் அமைக்கும் திட்டம் தான் #ProjectSeabird.
1971 இந்தியா பாகிஸ்தான் யுத்தம் முடிந்த பின், அப்போதைய கப்பற்படைத் தலைவர் திரு. O.S.Dawson அவர்களால் 1972இல் இத்திட்டம் முன் வைக்கப்பட்டது.
மும்பை கடற்படைத் தளம் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கை எடுத்தால் எதிர்கொள்ள ஏதுவாக இருந்தாலும், சில சிக்கல்களை கொண்டிருந்தது. வணிக ரீதியான துறைமுகம், மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள படகுகள், சுற்றுலா சொகுசு கப்பல்கள் அங்குள்ள சமூகம் வாழ்வியல் பிரச்னை ஆகிய காரணங்களால் புதிய இடத்தை தேர்வு செய்ய முடிவெடுத்தனர்.
ஏற்கனவே மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய இரண்டு கடற்படைத் தளங்கள் இருந்தாலும் மூன்றாவது தளம் முக்கியம் என்று உணரப்பட்டது. திருவனந்தபுரம், கண்ணூர், தூத்துக்குடி என்று பிற நகரங்களை பரீசிலித்து விட்டு செய்து விட்டு கடைசியாக கர்நாடகாவில் உள்ள கார்வார் (#Karwar ) நகரை இதற்குத் தேர்வு செய்தனர்.
அடர்ந்த வனம், மலை முகடுகள், ஆழ்ந்த கடல், அதிக மக்கள்தொகை இல்லாத இடம் என்று பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1972இல் முன்வைக்கப்பட்ட இத்திட்டம் திரு. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதற்கு 1986இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இருந்த போதிலும் 1991இல் முதற்கட்ட பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் கழித்து 2005இல் தான் முடிவுற்றன.
கூடுதல் போர் விமானங்கள் நிறுத்தவும், விமான ஓடுதளம் அமைக்கவும் இரண்டாம் கட்ட விரிவாக்கம் தேவை என்று முடிவு செய்யப்பட்டது. 1999இல் திரு.ஜார்ஜ் பெர்னாண்டஸ் இதனை விரிவாக்கத் திட்டமிட்டார். 2012இல் திரு. மன் மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை பாதுகாப்புக் குழு விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தது.
நில ஆர்ஜிதம், நிதி ஒதுக்கீடு என்று பல்வேறு நடைமுறை சிரமங்கள் காரணமாக பணிகள் நடைபெற தாமதம் ஆகி விட்டது. 2014 இல் திரு. பிரகாஷ் ஜவடேகர் சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்த பின்பு பணிகள் மீண்டும் தொடங்குகிறது.
இவ்வளவு பெரிய திட்டம் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்கள் வெளியேற்றம் என்பதும் கவனித்தால் கொள்ளப்படட்து. MARPOL எனப்படும் சர்வதேச கடல் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெற்றும், 4411 குடும்பங்களுக்கு மாற்று இடம், நிவாரணம், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை இந்திய கப்பற்படை நிர்வாகம் கொடுத்தும் இது செயல்படுத்தப்படுகிறது.
INS கடம்பா எனும் பெயரில் கப்பற்படை தளம் இங்கு இயங்குகிறது. சுமார் 11000 ஏக்கர் பரப்பளவில் இங்கு நவீன கப்பற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படுகிறது.
ஆனால் வனத்துறை நிலங்களை கையகப்படுத்த தாமதம் ஏற்பட்டது. பின் திருமதி. நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது இதில் தலையிட்டு தேவையான இடம் பெறப்பட்டது. இத்திட்டம் அடுத்த ஆண்டு 2022இல் அர்ப்பணிக்கப்படும் என்று தெரிகிறது.
INS விக்ரமாதித்யா எனும் போர் விமானங்களைத் தாங்கும் கப்பல் இங்கு நிலை கொண்டுள்ளது. புதிய கடற்படைத் தளம் அமைந்த பின்னர் Western Naval Command எனும் மேற்குப்பகுதி கடற்படை தலைமையமாக இது செயல்படும். மும்பையின் நெருக்கடி குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கிழக்குப் பகுதியில் விசாகப்பட்டினம் மற்றும் மேற்கில் கார்வார் இரண்டும் முறையே சீனா முதல் ஐரோபிப்பிய நாடுகள் வரையிலான கடல் எல்லையில் நமது பாதுகாப்பை பலப்படுத்தும் என்று தொழில்நுட்ப ரீதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு இயந்திரங்கள், விமானம் வந்து இறங்கும் ஓடூதள வசதி,கப்பற்படை ஊழியர்கள் குடியிருப்பு, பள்ளி, மருத்துவமனை, தங்கும் விடுதிகள் என்று பல உள்கட்டமைப்பு வசதிகளும் இங்கு அமைய உள்ளன.
32 போர்க் கப்பல்கள் +நீர்மூழ்கி கப்பல்கள், கப்பல் நிறுத்தும் தளங்கள் ஆகிய வசதிகளை இங்கு ஒருங்கே பெற இயலும். ஆசியாவின் மிகப்பெரிய வசதி இதுவாகும். இங்கு 11000 டன் வரை எடை கொண்ட கப்பல்களை அலேக்காக தூக்கி நிறுத்தும் வசதி (Ship Lifting) அமைய உள்ளது.
23 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கப்பற்படைத் தளம் மூலம் அந்தப் பகுதியின் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், கடல் வழி நிவாரணப் பணிகள், பாதுகாப்பு மேம்பாடு என அனைத்திற்கும் உதவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.














50 ஆண்டு கால வரலாற்று பாரம்பரியத்தை, சிறப்பாக சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி. வாழ்த்துகள்.